Thursday, January 19, 2012

தாகம்



நா வறண்டு ஒரு துளி தண்ணீருக்கு ஏங்கிக்கிடக்கிறது.

தண்ணீரே சூழ்ந்திருந்த பொழுதுகளில் தண்ணீர் பற்றிச் சிந்திக்க முடியவில்லை.இப்போது நினைவு முழுவதையும் தண்ணீரே  ஆக்கிரமிக்கிறது.

எனக்குள்
எழுந்த தாகம் பெருக ஆரம்பித்திருக்கிறது.

உன்னை
நாடிய தாகமென அது கிளர்ந்து விஸ்வரூபம் கொள்கிறது.

ஒரு
துளி அமிர்ததாரை போதும்.அந்த தாகத்தைத் தணித்துவிடுவதற்கு.

ஆனால்
நீ தான் அந்த மலைச்சாரல்களைக் காட்டமாட்டேன் என்கிறாயே?

வாடிய
பயிருக்கெல்லாம் நீர் வார்க்கும் நீ ,இந்த ஏழையின்  தாகத்திற்குப் பெரும் விலை பேசுகிறாய்.

தாகம்
கடைசிவரை உலுப்பிப்போடுகிறது உயிரை...

வறண்டு
உலர்ந்த நெஞ்சில் ஒரு துளி ஈரத்தைத் தடவமாட்டேன் என்கிறாய்!

தாகம்
பற்றி உணர்த்த வேண்டும் என்பதற்காக இப்படியா என்னை நீ உலர்த்திப் போடவேண்டும்...?

உலர்ந்த
இதயம்...

உலர்ந்த
உயிர்வெளி...

வறண்ட
காற்றின் சுவாசத்தில் மலர்ச்சி கொஞ்சமும் இல்லை.

பாலைத்துயர்
நெஞ்சை வருத்துகிறது.

நீண்டு
வெறித்துக் கிடக்கும் பாலைவனத்தில், தொலைதூரத்திற்கு யாருமே இல்லை...

யாருமற்ற
வெறும் வனாந்திரத்தில் தாகத்தோடலையும் ,பாலைவனப்பயணியாய்  என்னை மாற்றிவிட்ட நீ  எங்கே உன்னை மறைத்துக்கொண்டாய்...?

உன்னைத்
தேடிவரும் பயணத்தில் என்னோடிணைந்தவர்கள் அற்றுப்போனதையும் அறியாமல் உனது குரலின்பின் இழுபட்டு வந்துவிட்டேன்.

தூரத்தே
உனது பிம்பம் தண்ணீர்க் குடம் சுமந்த பெண் போல் தெரிகிறது.

குடத்திலிருந்து
சிந்திய துளிகள் நிலத்தில் உலர்ந்து திரண்ட மண் துகள்களாய் மாறியிருக்கின்றன.

அந்தச்
சுவடுகளின் பின்னால், என்னைத் தொற்றிய தாகம் படர,நடந்துகொண்டிருக்கிறேன்.

உயிர்களற்ற
வெளியில் எனது உயிர்த்துளி மட்டும்,தயங்கித் தயங்கி நடந்துகொண்டிருக்கிறது.

மேலே
வறண்டு திரளும் மேகங்களின் அமிர்த தாரை வழிவதற்கான சாத்தியமே அற்றுப் போய்க்கொண்டிருக்கின்றது.

ஒரு
மலர்க்காடு தானும் எதிர்ப்படாதா...? என்ற ஏக்கத்தில் நடக்கிறேன்.

மலர்க்காட்டின்
வசீகரத்தில் நீ அங்கு தங்கியிருக்கலாமல்லவா?

மலர்களின்
சுகந்தத்தில் மெய்ம்மறந்து நீ உன் அருள்மழை இறைக்கையில் அந்தத் துளி என் கரம் சேரலாமல்லவா...?

இல்லை
...நீ உன்னை மறைத்துப் போய்க்கொண்டிருக்கிறாய்.

நானும்
உன் முகவரி தொலைத்துத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

கொஞ்சம்
கொஞ்சமாய் உலரும் காற்றில் எனக்குள் சுரந்த நீரும்  வற்றிக்கொண்டிருக்கிறது.

வறண்ட
காற்று உடல் தடவ, உலர்ந்த சருகாய் காற்றில் எற்றப்படுகிறேன்.

எற்றப்பட்டு
வீழ்ந்த இடத்தில் சூழவும் பூக்களாய் நிறைந்திருக்கிறாய்.

மலர்களில்
வழியும் மகரந்தத் தேன் துளியை இலைகளில் கோலிஎடுத்து ,என் உதடுகளில் வார்க்கிறாய்...

தாகம்
அமுதத்தால் நிறைகிறது.

உன்பின்
அலைவுற்ற இதயம் அமைதியுறுகின்றது.

என்னை
அலைத்து,அலைத்து இறுதியில் பேரின்பம் காட்டினாய்.

தாகம்
தீர்ந்து உன் மடியில் உறங்கிற்று இதயம்.

                                                                                                             
-தாட்சாயணி

No comments:

Post a Comment