Wednesday, January 18, 2012

மாற்றம்


காலம்
புரள்கிறது.

நீ யாசகம் கேட்ட காலம் போய் இப்போது நான் யாசிக்க வேண்டி இருக்கிறது.

நீ செல்வந்தனானதும் நான் வறிஞனானதும் ஒரு சுழற்சிக்குள் நடந்து முடிந்து விட்டது.

உனது கர்வம், அலட்சியத்தின் முன் நான் தலைகுனிந்து நிற்கிறேன்.ஒரு இரவு...விடிவதற்குள் நான் வறிஞனானேன் .நீ செல்வந்தன் ஆனாய்!

இப்போது உனது வாசலில் நான் இரந்தபடி நிற்கிறேன்.

உலகம் சுற்றிக்கொண்டேயிருக்கிறது.

உலகநியதி தனக்குத்தானே வகுத்தபடி இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதுவரைக்கும் மழை என்பது சந்தோஷமாய்த்தான் இருந்திருக்கிறது எனக்கு...

மழை அழித்த கிராமங்களைப் பார்த்த பிறகே மழையின் கொடூரம் புரிகிறது!

அளவு மீறிப்பெய்கின்ற மழை அழித்து விடுகின்றது எல்லாவற்றையும்...

நீயும் அப்படித்தான் எல்லையின்றிய உன் வார்த்தைகளை இறைக்கின்றாய்.

ஒரு மழையின் சந்தோஷமென நினைக்கின்றாய் அவற்றை ...

மழைத்துளிகளாய் உன் வார்த்தைகளை விசிறும்போதே நீ உனக்குள் ரசித்துச் சிலிர்க்கிறாய்...இங்கே ஒரு மலர்வனம் வெள்ளத்துள் அமிழ்ந்து கொண்டிருப்பதை அறியாமல்...

ஆனால் மழையின் கொடுமையை நானும் அறியாமல்தானிருந்தேன்...உன் வார்த்தைகளைக் கேட்காதவரைக்கும்...

மழை ஓய்ந்த பிறகும் துன்பம் தருமே வெள்ளம்...நீ ஏன் அளவு மீறிய மழையானாய்?

காலையின்
கிரணங்கள் அற்புதமாய் ஒளிர்கின்றன.

அப்போதெல்லாம்
விடியலை ஆசை தீர ரசித்தவன் நான்.

நட்சத்திரங்களின்
ஒளிர்வு பற்றியும், சூரியனின் வள்ளன்மை பற்றியும் கணக்கிலடங்கா கற்பனைகளில் திளைத்தேன்.

இப்போது
விடியல் கூட இருட்டாய்த்தான் இருக்கிறது.

பசித்தவனுக்கு
எங்கே அழகின் அருமை புரியப்போகிறது!

யாசகம்
ஒருபோதுமே எனக்குப்பிடித்ததில்லை.

உனக்கும்
யாசகம் பிடிக்காமலிருக்கலாம்.

எனினும்
நீ என்னிடம் யாசிக்க வேண்டி வந்தது.

நீ
இரந்த போது கூட...உன்னை இரக்கும் நிலையில் பார்க்கப் பொறாமலே என்னிடமிருந்த எல்லாவற்றையும் உன்னிடம் கொடுத்தேன்.

நீ
என்னிடம் எதையுமே இரந்து பெறக்கூடாது என்றே விரும்பினேன்.அப்படி எண்ணியதற்காகவா இப்போது என்னை இரக்க வைக்கிறாய்.

காத்திருந்து
,காத்திருந்து,மீண்டும்,மீண்டும் ஈட்டிய என் செல்வங்களைச் சுருட்டிக் கொண்டாய்.என்னுடையதை விட அதிகமாய்ச்  
சேர்த்துக்கொண்டாய்!

பின்பொரு
வேளையில் எதுவுமே மிச்சமின்றி என் கண்ணின் ஒளியைக் கொள்ளையடித்தாய்.

என்னை
உன் காலடியில் யாசிக்க வைக்கிறாய்!

எனக்குப்
பிடிக்காதிருந்த ஒன்றைச் செய்கிறேன்.

உன்
வாசலில் கையேந்தி நிற்கிறேன்.

என்னுடையதை
எனக்கே கொடுத்துவிடு.

நாளைய
விடியலின் சிவப்பை ரசிக்கவும்,விண்மீன்களின் ஒளிர்வாய் ரசிக்கவுமாவது எனக்கு என் விழிகளின் ஒளி வேண்டும்.

என்னை
என் போக்கில் விடு.நான் போகிறேன்.

அதற்கு
முதல் என் செல்வங்களூடு மறைத்து  வைத்திருக்கின்ற என் விழிமுத்துக்களைக் கொடுத்து விடு.

நானும்தான்
எவ்வளவு பாவியாகிவிட்டேன்.

யாசகம்
கொடுத்தவனிடமே யாசக கேட்கின்ற நிலை ஏன் வந்தது...?

உன்னிடத்தில்
அலட்சியம் தெரிகிறது.

வாசலில்
ஒருவன் நிற்பது கூடத் தெரியாமல் நீ உன் பாட்டில் பாடிக் கொண்டிருக்கிறாய்...!

அந்தப்
பாடல்கள் என் செவிகளில் நெருப்பை ஊற்றுகின்றன.

நீ
யாசித்த போதும் சில பாடல்களைப் பாடினாய்! அவை என் மனதை அசைத்தன.

இரண்டிற்கும்
எவ்வளவு வேறுபாடு...!

நான்
திரும்பி நடக்கின்றேன்!

காத்திருந்து
காத்திருந்து வலித்த கால்கள் திசையரியாமலே  நடக்கின்றன.

அயலிலே
உன்னைப் போல இன்னும் எத்தனையோ செல்வந்தர்களின் வீடுகள்.ஒரு வீட்டின் முன்பு கூட நிற்கத் தோன்றவில்லை.

நீயே
உன் கதவைத் 'தாழ்' போட்ட பிறகு எந்தக் கதவைத் தான் நம்பிக்கையோடு தட்ட முடியும்...?

அத்தோடு
என்னுடைய எந்தப் பொருளும் அவர்களிடம் இல்லையே நான் உரிமையோடு கேட்பதற்கு...

களைத்துப்
போன கால்கள் ...நிலத்தில் சரிகிறேன்.

நிலவு
வானுக்கு வருகிறது...

இந்த
நிலவு எத்தனை அழகாயிருந்தது அப்போது...

இப்போது
அது உனக்கு அழகாயிருக்க கூடும்...

எனக்கு அழகாயில்லை...அது ஒரு நாளைக்குத் தேயப் போகிறது எனும் உணர்வே வருத்துகிறது.

தேய்வை
உணராமல் சிரிக்கும் நிலவு...

ஒரு
நாளில் தன் அழிவை உணராது சிரிக்கும் மனிதம்..

நாளை
இந்த உலகம் மறுபடி புரளக்கூடும்!

காலம்
தன் மாற்றங்களை மறுபடி, மறுபடி திருப்ப கூடும்!

ஒரு
கணம் போதும்! எல்லாமே மாறிப் போவதற்கு! எல்லாமே சிதறிப் போவதற்கு...

எனினும்
, அப்போதும் நீ என்னிடம் யாசிக்கும் நிலை வர வேண்டாம்...உன் பாடல் என் மனதை அசைக்க வேண்டாம்...

இரத்தலின்
துயரைப்  பரிபூரணமாய் உணர்ந்ததால் சொல்கிறேன்.

இனியொரு
பொழுதில் யாசிப்பின் நிழல் கூட உன்னைத் தொட வேண்டாம்.

ஒரு
பொழுது...ஒரு கணம்போதும்...எல்லாமே மாறிப் போவதற்கு!
                                                                                                                      
                                                                                                                                      -தாட்சாயணி

No comments:

Post a Comment