Showing posts with label உரைநடைகள். Show all posts
Showing posts with label உரைநடைகள். Show all posts

Saturday, October 27, 2012

பூக்களின் வாசம்


             

     ஏழை விவசாயி வானத்தை அடிக்கடி பார்ப்பதுபோல் நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
     அவனுக்கு மழையின்றேல் வயிற்றுப்பிழைப்பு நடக்காது.
     எனக்கும் உன் அருள் இன்றேல் வாழ்க்கைப் போராட்டம் ஜெயிக்காது.
     வாழ்வில் போராடிப் போராடித்துவண்டு நிற்கிற நேரங்களிலெல்லாம், நீ நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்சி கொடுக்கிறாய்.
     மழை கண்டு செழித்து நிற்கின்ற பயிர்களைப் பார்த்து விவசாயிக்கு ஏற்படுகின்ற ஆனந்தம் எனக்கு உன் அருள் கண்டு என் வாழ்வு செழிக்கின்ற போது ஏற்படுகின்றது.
     காற்றிலே நெற்பயிர்கள் உல்லாசமாக ஆடுவதுபோல,என் மனம் உன் அருளூற்றில் ஆனந்தமாய் நனைந்து கொண்டிருக்கிறது.
     எங்கேனும் பலவருடங்களுக்கு ஒருமுறை பூக்கின்ற அற்புதமலர் போல, என் மனதோரத்தில் உன் அருள்மழை பூத்துச் சொரிந்துகொண்டிருக்கின்றது.
     நீ உன் கரங்களை என் தலைமீது வைத்து ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருக்கிறாய்.
     ஒரு குழந்தை கனவிலே பூத்துச் சிரிப்பதுபோல் என் வாழ்வில் வசந்தம் துளிர்விட்டு எழுகிறது.
    அந்த வசந்தம் காலங்களை வென்று என்றும் என் கூடவிருந்து, என் மனதுக்குச் சாந்தியளிக்க விழைகிறது.
    நீ என் தலை தொட்டதால் வந்த வசந்தம் இலேசில் மறந்து போகக்கூடியது அல்ல.
    இலையுதிர் காலங்களால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்த, எனது காலத்தின் மீது புதிய பூக்களைத் துளிர்க்கச் செய்தவன் நீ.
    வறண்டுபோன மண்ணில் ஈர நீர்த்துளிகளை வீழ்த்தி, விதை மலர்த்தி சோலைகள் செய்தவன் நீ.
    நான் இப்போது உலகின் பார்வை பதியும் இடமாய் மாறியிருக்கிறேன்.
    பறவைகள் என்னைத் தேடிவருகின்றன.
    பறவைகள் எனக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
    பறவைகளுக்கான சரணாலயமாய் நான் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறேன்.
    உலகம் என்னையும் பெயர் சூட்டி அழைக்கத் தொடங்கியிருக்கிறது.
    உலகின் உன்னதங்களில் ஒன்றாக எனது பெயர் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
    நீ... எனது மலர்வுக்குக் காரணமாக இருந்துவிட்டு உன்னை மறைத்துக் கொள்கிறாய்.
    இடையிடையே நீயும் ஒரு பறவையாக என்னைத் தேடி வருகிறாய்.
    என்னால் உன்னை அடையாளம் காண முடிகிறதா எனச் சோதிக்கிறாயா...?
    நான் தானியங்களையும், பழங்களையும் கொண்டு உனக்காகக் காத்திருக்கிறேன்.
    நீ சற்று இளைப்பாறிவிட்டு, மீண்டும் பறந்துபோய் விடுகிறாய்.
    உனக்கான பழங்களும், தானியங்களும் என்னிடமே மீந்திருக்கும்.
    எனது பொலிவு குன்றாமல் மீண்டும் ஒருபோது நீ வருவாய் என உனக்காக நான் காத்திருப்பேன்.
    எனது பூக்களை கிளைகளில் ஏந்தியபடி ஒவ்வொரு காலையிலும் உன்னை எதிர்பார்த்திருப்பேன்.
    நீ ஒவ்வொருவரை அனுப்பிக்கொண்டிருப்பாய்.
    ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான பூக்களைச் சொல்லி வாங்கிக் கொண்டு செல்வார்கள்.
    ஆனால், உனக்கு மட்டும் நான் நினைத்தபடி பூக்களைக் கொடுக்க முடியாதபடி எல்லாப் பூக்களும் நிறைந்து முடிந்திருக்கும்.
    பூக்கள் கேட்பவர்களுக்கு இல்லைஎன்று சொல்லாமல் எல்லாப் பூக்களும் முடிந்தபிறகு அடுத்த நாளுக்கான அரும்புகளோடு காத்திருப்பேன்.
    அடுத்த நாளாவது முதல் ஆளாக நீ வந்துவிடுவாய் என்று...
    எனது பூக்களை உனது பாதத்தில் சமர்ப்பிக்கலாமென்று...
    நீ மற்றவர்களை அனுப்பிக் கொண்டிருப்பாயே தவிர உனது தேவைக்கு நீ வருவதேயில்லை.
    எல்லாருக்கும் வாரி வழங்கும் நீயா என்னிடம் பூக்கள் இரந்து வரப்போகிறாய்...!
    நீ வருவாய் என்ற நம்பிக்கை இழந்து கேட்பவர்களுக்கெல்லாம் பூக்களை வழங்கிக் கொண்டிருக்கிறேன்.
    எனக்குக் கூட ஒரு பூ வைத்துக் கொள்ளவில்லை.
    வெயில் வறண்டிருந்த ஒரு பொழுதில் நீ வந்தாய்.
    நீ தாகமாய் இருப்பதாய்ச் சொன்னாய்.
    உன் தாகத்திற்கு நீர் தந்தேன்.
   அருந்தி முடித்துவிட்டு எழுந்து நின்றாய்.
   சுற்றுமுற்றும் பார்த்தபடியே கேட்டாய். 'ஒரு பூக்கூட நீ எனக்கு விட்டு வைக்கவில்லையா...?'
   தூக்கிவாரிப்போட நிமிர்ந்தேன்.
   உனக்கே அனைத்தையும் தந்துவிட்டேனே...!
   எனக்குள் தைத்த கொடிய முள்ளை என்னால் எடுக்கமுடியவில்லை.
   இன்னும் நெஞ்சுக்குள் தைத்தது.
   உன்னால் தரப்பட்டவை,உனக்கே அனைத்தையும் சமர்ப்பித்துவிட்டேன்.
   உனக்கெனக் காத்திருந்த பொழுதுகளில் நீ வரவில்லை.
   இதோ இப்போது வந்திருக்கிறாய்.
   உனக்குரிய அர்ச்சனை மலர்கள் எங்கே எனக் கேட்கிறாய்!
   என்ன செய்வேன்?
   என்னிடமிருந்த எல்லா மலர்களையும் கேட்பவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டேனே!
   கணப்பொழுதுதான்.
   நான் தீர்மானித்துவிட்டேன்.
   நானே ஒரு மலராக மாறுகிறேன்.
   உள்ளூர களிப்பேறுகிறது!
   நீயே என்னை அணிந்து கொள்ளப் போகிறாய்.
   உன்னோடே தங்கிவிடப் போகும் மகிழ்ச்சி.
   நீ சிரிக்கிறாய்!
   அப்பால் போகிறாய்.
   நான் அப்படியே சிலையாகி நிற்கிறேன்.
   உள்ளே பூக்கள் மலர்கின்றன.
   வனாந்திரமெங்கும் பூக்களின் வாசம் நிறைகிறது.
   நீயே பூக்களாய் நிறைந்திருக்கிறாய்!
   எனது வாசல் வாசனையில் குளித்துக்கொண்டிருக்கிறது.
   உனது குரல் ஒவ்வொரு பூக்களிலும் வண்ணத்துப்பூச்சிகளாய் உட்கார்ந்திருக்கிறது.
   ஒவ்வொரு காலையும் முதல் ஆளாய் நீ வருவாய்!
   இந்தப் பூக்கள் அனைத்திலும் உன் வாசத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வாய்!
   நான் ரசித்துக்கொண்டிருக்கிறேன், இந்தப் பூக்களில் உனது வாசத்தை...!

                                                            கடவுளோடு பேசுதல் - சில ஆன்மீகக் குறிப்புக்கள்
                                                            -2009

Monday, January 23, 2012

யாசகம்




    எப்போதும் உன்னிடம் யாசித்துக் கொண்டிருப்பதே என் தொழிலாகிப் போயிற்று.
    கருணை சொரியும் உன் முகத்தில் சில வேளைகளில் கனல் தெறிக்கிறது.
    நான் ஒரு யாசகன் என்பதும்,நீ என்னைப் போஷிப்பவன் என்பதும் ஒரு நொடியில் உலகிற்குப் புரிந்துபோய் விடுகிறது.
    யாசிப்புகளிலிருந்து விடுபடவேண்டும் என்றுதான் எப்போதும், எண்ணுகிறேன்.
    இருந்தாலும்,யாசிப்புக்கள் அற்றுப் போகிறபோது உன்னோடு பேச எதுவுமேயில்லாது போய்விடுகிறது.
    மௌனத்தின் சுவர் தகர்த்து,எமக்கிடையிலான இடைவெளியை உடைக்க,யாசகம் எனக்குத் தேவையாகத்தானிருக்கிறது.
    யாசிக்காத போதுகளில் உன்னை ஒரு நண்பனாய் எண்ணி  உரையாடமுடிந்ததில்லை.
     உனக்கும்,எனக்கும் எவ்வளவு பேதம்...
    நீ உன்னதமான மனோதர்மங்களால் நிறையப் பெற்றிருக்கின்றாய்.
    நானோ உலோகாயுதங்களால் சூழப்பட்ட சிறு பிறவி.
    என்னிடமிருக்கின்ற ஆசாபாசங்கள்,தளைகளிடமிருந்து,விடுபடுவதற்கான சாத்தியங்கள் எதுவும் இப்போதைக்கு இல்லை.
    என்னை அணுகும் துன்பங்களிடையே நான் உன்னைக் காண்கிறேன்
    அவ்வேளைகளில் உன்னை மன்றாட்டமாய் வேண்டிக் கொள்வதைத் தவிர வேறென்ன வழி...?
    அப்போது தான் யாசகத்தின் பொருளைப் பரிபூரணமாய் நான் உணர்கிறேன்.
    உனது சந்நிதியில் துன்பங்கள் சதிராடிப் போட்ட சிதறல்களாய் வந்து நிற்கிறேன்.
    எனது மனத்துகள்களை ஒன்றாக்கி என்னைச் சிற்பமாக்குகிறாய்  நீ.
    வெளியே வருகின்றபோது என் மதிப்பு பலமடங்காகியிருக்கின்றது.
    ஆனால்,நான் அறிவேன்.
    துன்பத்திலிருந்து வனைந்து வனைந்து என்னை நீ உருவாக்கியிருக்கின்றாய்!
    புயலில் அலைக்கழிந்து,அலைந்து,உலைந்து தடுமாறுகிறேன்.
    மயங்கும் தறுவாயில் பற்றக் கிடைத்த சிறு கட்டையாய் நீ மாறியிருக்கின்றாய்!
    திருவிழாவில் தொலைந்த சிறு குழந்தையாய் உன்னைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன்.சுற்றிவரத் தெரிகின்ற கண்ணைக் கவரும் காட்சிகளை விடுத்து,மனது உனது நினைப்பிலேயே சுற்றித் திரிகிறது.
    உன்னைத் தேடி அலையும் மனது,சூழத் தெரியும் பயங்கரங்களிலிருந்து மீள உன் துணையை அவாவுகிறது.
    கருமுகிலைக் கண்டவுடன் தோகை விரிக்கும் மயில் ஒன்றிரண்டு சிறகுகளை உதிர்த்துவிட்டுப் போவதுபோல,உன்னைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தம் கனவுக்குள் என் கண்ணீரை உதிர்க்க வைக்கிறது.
    கண்ணீரின் மீதான உனது இரக்கம் பற்றிப் பூரணமாகவே அறிந்திருப்பதால்,எனது கண்கள் உனக்கான கண்ணீரை வஞ்சகமின்றி வார்க்கின்றன.
    சொற்களை விடவும்,வார்த்தைகளைவிடவும்,உன்னை அருகில் சென்று,தொடுவதற்கான அருகதை கண்ணீருக்கு நிறையவே உண்டு.
    கண்ணீர் உன் பாதங்களில் தீர்த்தமென விழுகிறது.
    இந்தக் கண்ணீரை ஏற்றுக்கொள்ள மிகவும் தகுதியானவன் நீ ஒருவன்தானே.
    இந்த உலகில்  மற்றவர்கள் முன் கண்ணீர் உகுக்க நான் என்றும் தயாரானதில்லை.
    கண்ணீரின் பொருள் அவர்களுக்குப் புரிந்ததில்லை.
    உன்முன் எந்தவித விகல்பமும் இன்றி உண்மையாய் வந்துவிழும் கண்ணீர்.
    அதனால் உன் பாதங்கள் கழுவி பாவம் துடைக்க அவாவும் என் நெஞ்சு.
    நானும் புல்லா ங்குழலாய் இசை வடித்து உன் செவிகளை நிரப்புகிறேன்.அது உன் செவிக்கு இனிக்கும் என்றுதான்.
    ஆனால்,நீயோ,உன் செவிகளை இறுக மூடிக்கொள்கிறாய்.
    யாசகம் கேட்பதற்குப் பதிலாக இந்த இசையெனும் கீதத்தைத் தந்துவிடவேண்டும் என்று நானும்,யாசகம் கொடுக்கையில்,பிரதிபலன் பெறக்கூடாது என நீயும் எண்ணிக்கொண்டபின்,முரண்பாடுகளில் நெரிபடுகிறேன் நான்.
    நீ எனது வாழ்விற்கு வழிகாட்டுகிறாய்!
    நான் உன்னைப் பின்பற்றி நடந்துகொண்டிருக்கிறேன்.உனது சொல் பற்றி நடக்கிற வேளைகளில் குழம்பும் மனது மாயைகளில் வழிமாறிப் போய்விடுகிறது.
    புகை படிந்து மூடியிருக்கும் சாலைகளில் எந்தப் பாதை எங்கு செல்கிறது என்பதே தெரியவில்லை.வெறும் இரைச்சல்களால் நிரம்பியிருக்கிறது சாலை.
    நான் உன்னிடம் இன்னுமாய் யாசித்துக்கொண்டிருக்கிறேன்,எனது எதிர்காலத்தைக் காட்டு என்று.
    நீயோ,நீண்டவெளிப் பாதையை மறைத்தபடி நிற்கிறாய்.
    எல்லாத் துன்பங்களையும் சகிக்கப்பழகு என்கிறாய்.
    இனிக்கின்ற இன்பங்களை அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அனுபவி என்கிறாய்.
    கூட்டிக்கழித்து,துன்பத்தையும் இன்பத்தையும் பெருக்கிப் பார்த்து, இந்த உலகத்திலிருந்து விலகிவிடலாம் என்று பார்த்தால் அதற்கும் அனுமதி அளிக்கிறாயில்லை நீ...
    இன்னும் எனது யாசகம் முற்றுப் பெறாமலே...
    யாசகனாயிருப்பதன் அர்த்தங்கள் புரியும் வரையில் உன்முன் மண்டியிட்டபடி நான்....
                                                                                                                                                                         -தாட்சாயணி


Thursday, January 19, 2012

கடைசி விருந்தாளி




பனி ததும்பும் புல்வெளிகளின் இடுக்கில் உனது பாடல் கம்பீரமாய் உட்கார்ந்திருக்கிறது.

புற்களுக்கிடையில்
நகரும் உலர்ந்த பட்டுப்பூச்சிகள் அந்தப் பாடலால் கவரப்பட்டு அங்குமிங்கும் இழுபடுகின்றன.

நீ
...உயிரினங்களை ஈர்க்கும் காந்தசக்தியாய் எங்கும் நிலைபெற்றிருக்கிறாய்.

உனது
உலை வானில் கொதிக்கிறது.

அனைத்து
ஜீவராசிகளுக்குமென நீ வானில் பொங்கலிடுகிறாய்!

உனது
பொங்கலையுண்டு உயிர்கள் பசியாறுகின்றன.

நீ
மட்டும் உயிர்கள் உண்ணும் உணவோடு உன் பசி தணிக்கிறாய்!

வண்ணத்துப்பூச்சியாய்
சிரிக்கும்  வானவில்லின் வர்ணங்களில் உனது ரேகையை அழுத்திப் பதித்திருக்கிறாய்.

மலை
ஈரத்தில் கூடக் கரைந்து போகாத வானவில்லைப் பார்த்துக் கானகம் களிப்புறுகின்றது!

துளிர்களால்
நிரம்பியிருக்கும் புதியமரம்,உனது காற்றால் தன்னைச்சுவாசித்துக்கொள்கிறது!

உன்னைப்
பாடும் ஆவலில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உரோஞ்சி சப்தித்துக் கொள்கின்றன.

குளத்தில்
தாமரை மிதந்து மிதந்து எழுகிறது.உனக்கென தரிசனம் தருவதற்காக.

நீ
நிர்மலமாகவே தோற்றமளிக்கிறாய்!

கருணை
கூர்ந்த உனது முகம்,இறுகப் பூட்டிய கதவுகளை அடித்துத் திறக்கிறது.

நீ
வந்து நிற்கிறாய் என்முன் ஒரு இரவலனாய்...

நான்
உன்னை எதிர்பார்க்கவில்லை.இப்படி நீ என்முன் வந்து நிற்பாய் என்று .

அரிசிமணிகள்  கேட்டு இரந்து நிற்கிறாய் நீ ...

உள்ளே
மூடைகளில் கட்டப்பட்ட அரிசிமணிகள் நான் போகிறபோது மாயமாய் மறைந்துவிடுகின்றன.

கடைசி
அரிசிமணியை மேய்ந்துகொண்டிருக்கும் மயில் கொத்திக்கொண்டிருக்கின்றது.

நான்
திரும்பிப் பார்க்கிறேன்.

நீ
இன்னமும் வாசலில்தான் நின்றுகொண்டிருக்கிறாய்!

எங்கேனும்
பத்திரப்படுத்திய அரிசி இருக்கக் கூடுமோ என நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நேர்த்திக்கென
முடிந்து வைத்த சில்லறைக்காசு துணிமுடிப்பில் அகப்படுகிறது.

எடுத்து
வருகிறேன்.

உனது
பிச்சைத் தட்டில் சில்லறைகள் இருக்கவில்லை.

அரிசிமணிகள்
இருந்தன.

நான்
எங்கு போவது இந்த மழை இருட்டில்...அரிசிமணி வாங்குவதற்கு.

மயில்
தோகை விரிக்கிறது.

உதிர்ந்து
விழுந்த ஒரு இறகைப்  பொறுக்கி வருகின்றேன்.அதைக் கூட நீ வாங்கிக் கொள்ளவில்லை.

நான்
ஒற்றைச்சில்லறையோடு உன் பின் அலைகிறேன்.

"எனக்குப் பசிக்கிறது..."என நீ சொல்கிறாய்.

சாப்பிடுவதற்குத்
தர என்னிடம் என்ன இருக்கிறது...!

அந்த
நாணயக்குற்றி கீழே விழுகிறது.

சப்தமின்றி
விழுந்தது.

எடுத்துப்
பார்த்தபோது அது அரிசிமணி ஆகியிருந்தது.

ஓடிவந்து
உன் தட்டை நிறைத்தேன்.

நீ
புன்னகைத்தபடியே ஒரு பாடல் பாடினாய்.

ஆசீர்வாதங்களோடு
அப்பால் போனாய்!

எனது
வீட்டில் எதுவுமில்லை.

வயிற்றுப்பசி
நீ போனபின் கிளம்பியது.

இனிய
நறும்புகை நாசியில் தொற்றியது.

உனது
கவிதை காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

தூரத்து
மலைகளுக்கப்பால் நீ போய்க்கொண்டிருப்பது தெரிந்தது.

உனது
நிழல் மட்டும் நீ போகப் போகப் பெரிதாகி வந்தது.அருகிலே வந்து
தொட்டுப்
பார்க்கையில் எதுவுமே இல்லையாகிப்போனது.

மலைமுகட்டின்
அடியில் சிவப்புச் சூரியன் ஒளிந்துகொண்டிருந்தபோது நீ எனக்குள் ஐக்கியமாகிப்போயிருந்தாய்.

கடைசி
விருந்தாளியாய் வந்த உனது மனதைத் திருப்திப்படுத்திய நிறைவோடு எனது வறுமை தீர்ந்துபோனது.

                                                                                                                                    -தாட்சாயணி