Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, June 9, 2012

நியாயசபை

கண்ணகியின்
ஒற்றைச்சிலம்பின் பரல்கள்
தெறித்துக்கொண்டிருக்கின்றன
நீதிமன்றின் சுவர்களெங்கும்.....!

பல்லிகள் அந்தப் பரல்களைப்
பொறுக்கிக்கொண்டு
ஓடுகின்றன...

ஓடிச்சென்று
கூரையின் இடுக்குகளில்
ஒழித்துவிட்டு
கிலுக்கி எறிகின்றன
வேறு பரல்களை...

அவற்றை ஏந்துவதற்கென்றே
வந்து சேர்கின்றன
இன்னும் சில...

கோவலன் கொலையுண்ட
செய்தியைக் காட்டிலும்
அதிர்ச்சியைத் தந்திடும்
சபையில்,
அவள் மானம் குறித்த கேள்விகள்...
அவள்மேல்,
ஒன்றொன்றாய்
விழும் கற்கள்...

முடிவில்
ஊரைக் கொழுத்தியும்
பயனிலை எனக்கண்டு,

பல்லிகளின்
நஞ்சுண்டிறந்தாள் கண்ணகி!

                                        
                    ஜீவநதி - ஆனி 2012

Friday, April 13, 2012

கரையில் தேடும் சிறுமி


                                  
நுரை சுழித்த
கடலின் கரையில்,
நீண்ட நாட்களாக
ஒரு சிறுமி வந்து போகிறாள்...!

அவள் எதைத் தேடுகிறாள்...?
சிப்பிகளும்,சோகிகளும்...
தேடும் வயதுதான்...

என்றாலும்,
அது குறித்த ஆர்வம்
அவளுக்கிருப்பதாய்
இன்னும் அறியப்படவில்லை!

அவள்
அலைகளுக்கிடையில்
நுரை பிடிக்க
முயற்சித்தாளுமில்லை!

நெடுந்துயர் விரவிக்கிடக்கிறது
அவள் விழிகளில்...

அவளறியாத எதையோ...
அவளிடமிருந்து யாரோ...
பறித்துவிட்டார்கள்...

அவளறிய...
அது என்னவென்று
தெரியவில்லை அவளுக்கு...

உலகில்
சிப்பிகளுக்கும்,சோகிகளுக்கும்
மேலாக...
எதுவோ இருக்கிறதுதான்...!

அவளறிய...
அது என்னவென்று
தெரியவில்லை அவளுக்கு...

நுரை சுழித்த
கடலின் கரையில்
அவள் எதையோ...
தேடிக்கொண்டிருக்கிறாள் !

                                -2012 சித்திரை, ஞானம்

Wednesday, January 18, 2012

ஒரு ஊரின் சோகம்



நீள விரிந்த
நதியின் இடுக்குகளில்
கூடு கட்டிய கனவின் குரல்...
கனத்து வழிகிறது
மீட்சிக்கான வழி ஏதுமற்று...!

மரணம் கவிந்த தெருக்கள்
ஊரெங்கும்
தோரணங்களாய்த்
தொங்கிக் கொண்டிருக்கின்றன...!


இருட்டுக்குள்
கருப்பொன்றே நிறமாகிப் போன
விரக்தியில்
நிறங்கள்
தற்கொலை செய்துகொண்டன...!

ஒளிப் பிசிறல்களைத் தேடும்...
ஒவ்வொரு தடங்களையும்
எட்டி மறைக்கிறது
கருமையின் செறிவு...!

திசைகளைத் தொலைத்த ஆட்காட்டி
தன் குரலைத் தானே
பின்பற்றி அலைகிறது!

இருளின் திரட்சிக்குள்
வரி வரியாய் உலர்கிறது...
காற்றின் மென்னிழைகள்!

புகை உமிழ்ந்துருளும்
வலிய சக்கரங்களின் கீழ்
நடுநடுங்குகிறது...
பூமியின் தேகம்!

நகரின் இரைச்சலுக்குள்
அமுங்கிக் கேட்கிறது!
தன் சுயத்தினை
மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கும்
ஒரு ஊரின் கேவல்!

                                                    -தாட்சாயணி

குவளையை நிறைக்கும் திரவம்



மழைப் பொழுதொன்றின்
தேனீர்கோப்பை
நான்!
சூடாக நிரம்பியிருந்தேன்!

பருவங்கள்
என்னை
மாற்றியமைத்தன...!

நீ என்னை
பனித் தேசத்தின் மதுக்குவளை
ஆக்கியிருக்கிறாய்!

தேன் வண்ணத் திரவத்தால்
மூடுண்டிருக்கிறேன்!

எனக்கொரு கௌரவம்
கொடுத்ததாய் எண்ணி...
ஒளிரும் திரவம்
பளபளத்தசைகிறது என்னுள்!

நான் தேனீரால்
நிறைக்கப்படுவது
இனி,
என் வசத்தில் இல்லை!

உனது தாகம் தீர்க்க,
நீ கேட்கும் வேளைகளில்...
கேட்கும் திரவங்களால்
நிரப்பப்படுவேன் நான்!

எனது கோப்பையை
எனது விருப்பத்திற்கு
எப்போது இனி என்னால்
நிரப்பவியலும்...?

நிரம்பிய குவளையின்
மீந்திருக்கும் சிறு வெளியில்
இப்போது எனதுயிர் 
ஓடித் திரிகிறது...!

தயவு செய்து,
அந்தச் சிறிய இடைவெளியையும்
உன் மூச்சுக் காற்றால்
இட்டு நிரப்பிவிடாதே!

அங்கே தான் இருக்கிறது!
நான் இழந்த
மழைப் பொழுதின் தேனீர் வாசனையும்...
கூடவே என் உயிரும்!
                                                            -தாட்சாயணி

இரண்டாய் உடைந்தேன் அர்த்தநாரீஸ்வரரே





மனதுள் மலர்ந்த
மழைப்பூக்கள்
உதிர்ந்து விடக் கூடிய அளவு
வார்த்தைகளை இறைக்கிறாய்!


உனது கண்ணாடி முகம்
பொசுக்கென்று
உடைந்து போன அதிர்வில் நான்...!


உனது மனதின்
விகாரம்
தெரிந்த போது
அடங்கா முகாரியுள்
வீழ்ந்தேன்!


உனதிருப்பின் அர்த்தம்
இன்னமும் புரியாமல்...
சுரண்டி கொட்டிய
வேதனைகளின் உராய்வில்
தீய்ந்து போகிறேன்...!


எனது ஊகங்களுக்கூடாக
உன்னை ஊடறுத்துப் பார்க்கிறேன்!
அப்படியும் நீ
செத்துப் போகவில்லை மனதுள்!


உனது கைத்த நினைவுகள்
கசந்து வழிந்த பின்னரான
ஆறுதலான கணமொன்றில்
உன்னைப் பற்றி
யோசிக்கிறேன்!


எதுவுமில்லை!
எதுவுமேயில்லை!
சிரித்தபடி நிற்கிறாய்
உயிருள்!
                                     -தாட்சாயணி

சாளரங்கள்



காற்றுக்காகத்தான்
வீடுகளின் சுவர்களில்
சாளரங்கள்
பதிக்கப்படுகின்றன!
கதவுகள் திறக்கப்பட்டுக்
காற்றுக்கு
வழிவகுத்த பின்னாலும்
திரை சேலைகள்
மெல்லிய செடிகளின்
அசைவாய்...
காற்றிலாடிக்
கொண்டிருக்கும்!

சாளரத்துக்குக்
கம்பிகள் எதற்காக...?
யாராவது
எப்போதாவது
யோசித்ததுண்டா...?

விரல்களுக்கு ஒரு
பிடிப்பாக
இறுகப் பிடித்தபடி...
"என் ஜன்னல் கம்பியே...
நீ இருக்கிறாய்..."
எனத் துணிவுற்றுத்
தெருவோடு கண்கள்
பேசும்
கவிதைக்காகவல்லவா
ஜன்னல் கம்பிகள்...

எல்லா வீட்டுக்குமே
சாளரங்கள் இருக்கின்றன...
எல்லா ஜன்னல்களுக்குமே
கம்பிகள்
இருக்கின்றன

எல்லாவற்றுக்கும்
உயிர் இருப்பதில்லை...!

என் வீட்டு
ஜன்னல் கம்பிகளுக்கு
உயிர் உண்டு...!

சட்டென்று தொட்டவுடன்
குளிரூட்டி
மனதுக்கு
இதமாகும்!

இதய உணர்வுகளைச்
சில்லென்ற தொடுகையில்
பரிமாற்றும்...!

நீ யாருக்காகக்
காத்திருக்கிறாய்...?
என்பது தெரியும்
என்று புன்னகைக்கும்!

சீறி விழாது...
சினந்து கத்தாது...

இன்னும் நீ இப்படியே
இருப்பதில்
ஆட்சேபனை
இல்லையென்று
இதமாய்த் தடவும்...!

என் இருபது வருஷத்துக்
கண்ணீர் துளிகளையும்
தேக்கி வைத்திருப்பதால்தானோ
இத்தனை குளிர்ச்சியாய்
இருக்கிறது!

எப்படித் தெரியும்
உனக்கிந்த வசியம்...?

என் கன்னங்களில்
சூடாக விழும் கண்ணீர்
உன்னை அணைந்தவுடன்
குளிராகிப் போகிறதே!

எப்படித் தெரியும்
உனக்கிந்த வசியம்...?

என் வரையில்
சாளரங்கள்
காற்றுக்காகவென்பதெல்லாம்
வெறும் பொய்தான்...!

என்னுடைய
ஆறுதலுக்காகத்தான்
இந்த சாளரங்கள்...!

                               -தாட்சாயணி
 

வறள்நிலம்

        

குடங்கொண்டு
அலைகின்றோம்
அமிழ்த நீர் தேடி ...

எங்குமில்லை அமிழ்தம்...

இந்த நகர வெளியின்
சாக்கடைத் தண்ணீரை
உற்பவிக்கக் காரணர் யார்?
உன்னவரா...?
என்னவரா...?

எடுத்தோம்
நிலத்தடியின் அமுதத்தை!

உறிஞ்சி உறிஞ்சி
வயிறு வெடிக்கும்வரை
குடித்தோம்!

இப்போது...
வறண்டு கிடக்கிறது
நிலத்தின்மடி!

நீயும் நானும்
எம் பின்னவரும்
குடம் கொண்டு
அலைகின்றோம்
அமிழ்த நீர்தேடி!

               -தாட்சாயணி-

மரணம்


மரணத்தை நான்
நேசிக்கிறேன்...!

அது இயல்பாக வருமென்றால்...

ஒரு மலரில் தெரியும் பூந்துகளாய் ...
வானுரசி வீசும்
மெலிந்த மேகமாய்...
சொட்டென்று விழும்
முதலாவது மழைத்துளி
மணலோடு கரைவுறுதலாய்...

இயல்பாய் வரும் மரணமெனில்
அதை நான் நேசிக்கிறேன்!

மரணத்தை நான் வெறுக்கிறேன்...!
சம்மதமில்லாமலே
புணரப் பார்க்கிற காமுகனாய்...
வெடிமருந்தின் கரிய நெடியாய்...
சூடான குருதித்துளியில்
தன் தாகம் தீர்க்கும்
நரவேட்டைக்காரனாய்...

வரும் குரூரமான மரணத்தை
நான் வெறுக்கிறேன்!

              -தாட்சாயணி-

கிழிந்த இதயம்



ஒரு மழை கவிந்த
நிலாக் காலத்தின்
மௌனம் மிளிர்ந்த தூறல்களாய்...
வசீகரத்திலூறிய
மௌனப் பொழிவின்
அர்த்தப் பரிபாஷையாய்...
உன்
சிநேஹிதமான முறுவலிப்பு...!

நீர்முத்துக் கோத்த
வேப்பந்துளிர்கள்
காற்றிலாடி நீர் தெளித்து
ஆசீர்வதித்ததாய்
ஓர் ஞாபகம்...!

மழை இழந்த
பொழுதுகள்  ஆயிற்று இன்று!

அமுதத் துகள்களின்றி
வறண்டு போயிற்று வானம்...!

வேம்பு சருகுகளோடு
சதிராடிக்கொண்டிருக்கிறது...!

காற்றுக் கிழித்த வாழையிலையாய் ...
காலம் கிழித்துப் போட்டது
என் இதயத்தை...!

                  -தாட்சாயணி-

ஒடுக்கம்


நான் அழுவதற்கும்
தயாராயிருக்கிறேன்...!
என் கண்ணீர்
ஒரு சின்னப் பூச்சியின்
தாகத்தையாவது
தணிக்குமெனின்...

நான் அடிபடவும்
சம்மதிக்கிறேன்...!
எந்த ஒரு தாக்கத்துக்கும்
சமனும் எதிருமான
மறுதாக்கம்
இல்லையெனும் பட்சத்தில்...

நான் சிரிப்பதற்குக் கூடத்தயார்
உன் துயரங்கள்
அதன் மூலம் கழுவப்படும்
என்றால்...

ஆனால்..
என் கண்ணீரால்
எந்த ஜீவராசிக்கும்
பயனில்லாமல் போகுமென்பதால்...
நியுட்டனின் விதி
என்றுமே மாறாதிருப்பதால்...
நான் சிரிப்பது
ஒருபோதுமே உனக்கு
சந்தோஷத்தைத் தரப்
போவதில்லை என்பதால்...

நான்
அழாமல்...
அடிபடாமல்...
சிரிக்காமல்...
வாழ்வதற்குப் பழகிவிட்டேன்!

               -தாட்சாயணி-

Tuesday, January 17, 2012

அமைதி



நிலாத்துளி
இலைகளூடாக  வழிய...

தென்றலின்
தெவிட்டாத விசிறல்
குளிருக்கு இதமாக...

எங்கோ
மழைகாலப்பட்சிகளின்
மயக்கும்
மதுர மிழற்றல்...!

ஆரவாரமில்லாமலே
அட்சதை தூவும்
வானத்து விண்மீன்கள்...!

நிலா இருட்டில்
கனதியாய் நீண்ட
மௌனம் ...

என்றாலும்
இந்த இனிய அமைதி
நிரந்தரமில்லை
என்ற சோகத்தோடு...

கோபமாய் சடசடக்கும்
துப்பாக்கி சூடுகள்...!

                -தாட்சாயணி




நினைவின் படர்தலில்...


மனதுக்குள் கொடிகொடியாய் இழைந்து
படுத்திருக்கும்  நினைவுகள்..
மல்லிகைக் கொடியென எண்ணி
சுற்றிலும் படர்ந்த பாம்புகளாயும் சில
படர்வுகள்..
உதற நினைக்கும் மனம்
பாம்பெனும் பயம் கொண்டு...
சீ...போக மறுத்து பயம் காட்டி...
நெளிந்தபடி...
கொடியோடு கொடியாய்...
உதறிவிடும் வேளைகளில்
போனதாய் போக்குக்காட்டி...
பிறிதொரு வேளையில்
திடுக்குற்றுச் சிலிர்க்க வைத்து...
இருந்தாலும்,
உள்ளே சுருட்டிக்கொண்டு...
மல்லிகைப் பூப்பந்தாய்...
மனதை வருடி வருடி வரும் வாசம்
வருஷத்தில் நாலைந்தே தரமெனினும்...
சாகும் வரைக்கும் இந்த
மனதினின்றும் அகலாததாய்...
                                                  -தாட்சாயணி


 

மழை அவிழ...

மழை அதிரும் இரவு...
மௌனத்தைப் போர்க்க விரும்பிய
மனது...
அடை மழையுள்
ஆயுள் தீர்க்கக் கத்தும்
மாரி தவளைகள்
"உனது ஆயுளும் ஒரு நாள் தீரும்" என..

நீருள் விழுந்த
நிலவின் உடைவுகளென
உள்ளே பளபளக்கும்
உணர்வுகளின் உடைசல்கள்..
சரித்து கொட்டிய
குடநீராய்
வாசல் முழுவதும் வெள்ளம்
மன வெளி எங்கும் தான்..
                                                  -தாட்சாயணி

கேட்காத கேள்விகள்



ஒரு காற்றென
வழி மறித்து சொன்னாய்...
 என்
காலங்களுக்குத்
துணையிருக்கப் போவதாய்..
என் காயங்களுக்குக்
கட்டிடப் போவதாய்...
என் கவிதைகளுக்குக்
கருவாகப் போவதாய்...

எந்த காலங்கள்...?
எந்த காயங்கள்...?
எந்தக் கவிதைகள்...?

எதுவுமே கேட்காமல்
சம்மதமாய் தலை அசைத்தேன்...

இப்போது உள்ளே
கனக்கின்றன கேள்விகள்...

எந்த காயங்களுக்கு துணையிருப்பாயென?
எந்த காயங்களுக்கு கட்டிடுவாயென?
எந்த கவிதைகளுக்கு கருவாகுவாயென?
ஒரு காற்றென
மீண்டும் நீ வழிமறிக்கையில்
கேட்கவேண்டும் உன்னிடம்...?

                                                                                          -தாட்சாயணி

ஒற்றை ராத்திரியும் காற்றில் அலையும் மெழுகுச் சுடரும்



நீளமான இந்த இரவின்
முழுமைக்கும்
போதாது
மெழுகுவர்த்தியின் கீதம்…

உறங்காத விழிகளுக்குப்
போதாமலிருக்கிறது
அந்த நினைவுகளின் தடங்கள்…

ஒரு மணியிசையென காற்று
சலசலத்தோடுகிறது
இரவின்
விளிம்புகளைத் தடவிட…

மனதிடுக்குகளின்
தங்கிய
ஞாபகக்கசிவுகளில்
எங்கேனும்
அருமையாய் ஒரு
கவிதை பீறிடக் கூடும்.

அந்தக் கவிதைக்கெனவே
ஒற்றை ராத்திரியின்
மெழுகுச் சுடர் அலைதலும்…

உறங்காத விழிகளுள்
தவமிருக்கும்
அந்த நினைவுகளின் தடங்களும்…

                          -தாட்சாயணி

கூட வருதல்

போக மறுக்கிறாய் நீ
பிடிவாதமாய் என் கூடவே
வரவேண்டும் என்பதில்…
எழுதி வைத்த கவிதைகளுக்கிடையில் இருக்கும்
சில கிறுக்கல்கள் போல…
நடந்து போன சுவடுகளில்
தெரியாமலே தங்கியிருக்கும்
ரேகைகள் போல…
உறக்கத்துக்குள் அர்த்தப்படாமல்
எட்டிப்பார்க்கும் குட்டிக் கனவு போல
உனதின் வழியில்
என்னைப்பிரிக்காத
என் ‘விதி’யே…
காதலுக்குக் கூட இல்லாத
கரிசனையாய்
கடைசிவரைக்கும்
மரணத்தின் வாசலுக்கும்
அதற்கும் அப்பால்
என்னோடு வருதலில்
என்றும் தயங்காமல்
நீ…!
                                                        -தாட்சாயணி

Tuesday, January 10, 2012

தூக்கம்

 

போர்வைக்குள் உறைகிறது
தூக்கம்!

உள்ளே எழுந்து கூத்தாடி
தன்னை அனுமதி
என்று கத்தி
ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு
இப்போது அமைதியாய்
நாடகம் போடுகிறது!

வெளியில் பார்க்க
ஒரு சாது போல்தான்
இருக்கிறது!

இருந்தாலும்
இதற்கு முதல்
அதன் அட்டகாசத்தை
என்னவென்று சொல்வது…?

எடுத்த புத்தகத்தை
மூடித்தொலை என்று திட்டி…

சூழலைக் கிரகித்த
விழிகளைப்
‘படக்’கென்று அடித்துமூடி…

பாயைக் கொண்டுவா…
தலையணை வேண்டுமென்று
அடம்பிடித்து…

இப்போது ஒன்றுமே
தான் கேட்காததுபோல
அமைதியாய்க்
கிடக்கிறது
‘தூக்கம்’

                                           -தாட்சாயணி        
                                          ஞானம் 2011பங்குனி

பயம்

                  

உள்ளும் புறமுமென
வலி பிறாண்டிற்று மனதை.....
இலேசாய் மழைக்காற்று
சாரலடித்தால் வலி போகக்கூடும்.....!
யார் அறிந்தது.....?
மழைக்காற்றுக்குப் பதிலாய்
அனல்காற்று உள்புகுந்தால்.....?
பூட்டியே இருக்கட்டும் கதவு.....!
                    
                                              -தாட்சாயணி-

ஞானம்

                   

“நேற்று” என் காலடியில்
சொட்டிப் போனது இரத்தத்தை.....
“நேற்றின்” இரத்தம்
உறைவதற்குள்.....
“இன்றின்” கூக்குரல்
கேட்கிறது!
நாளை..... “இன்றின்” இரத்தம்
என் காலை நனைக்கலாம்.....!
இறுதியில் என்றோ ஒருநாள்.....
“நேற்றின்” இரத்தமும்
எனது இரத்தமும் கலக்கின்றபோது
எனக்கு.....
நாளை என்பதே இல்லாமல் போகலாம்!
அப்போது
“நான்” என்பதும் தொலைந்து போகலாம்!
               
                                                            -தாட்சாயணி-

வைரக்கற்கள்



இருப்பிலிருந்து தூக்கி
வெளியே எறியப்பட்டேன!

பல சொற்கள்
என்னைப் பந்தாடின!

பல சொற்கள்
என்னை நகையாடின!

எனினும் என் சொற்கள்
மௌனித்தேயிருந்தன!

என் சொற்கள் வைரக்கற்கள்…
ஒன்றையேனும் எடுத்து
நான் வெளியில்
எறிந்து விட முடியாது!

வெறுங்கற்களான
சொற்களை அவர்கள்
அப்படித்தான்
எறிவார்கள்…!

எனது சொற்கள்
வைரக்கற்கள்…
எப்படி ‘விசுக்’கென
எறிந்துவிட முடியும்!

அவற்றைப் பெறுவதற்கென்று
‘பண்பட்ட’ மனிதர்கள்
வருவார்கள்!
அதுவரைக்கும் அவற்றை
நானே
பத்திரப்படுத்துவேன்!

அவர்களிடம்தானே
என் வைரக்கற்களை
வைத்துக்கொள்ளக் கொடுப்பேன்!
            
                         -தாட்சாயணி 
                         ஞானம் 2011பங்குனி