பனி ததும்பும் புல்வெளிகளின் இடுக்கில் உனது பாடல் கம்பீரமாய் உட்கார்ந்திருக்கிறது.
புற்களுக்கிடையில் நகரும் உலர்ந்த பட்டுப்பூச்சிகள் அந்தப் பாடலால் கவரப்பட்டு அங்குமிங்கும் இழுபடுகின்றன.
நீ ...உயிரினங்களை ஈர்க்கும் காந்தசக்தியாய் எங்கும் நிலைபெற்றிருக்கிறாய்.
உனது உலை வானில் கொதிக்கிறது.
அனைத்து ஜீவராசிகளுக்குமென நீ வானில் பொங்கலிடுகிறாய்!
உனது பொங்கலையுண்டு உயிர்கள் பசியாறுகின்றன.
நீ மட்டும் உயிர்கள் உண்ணும் உணவோடு உன் பசி தணிக்கிறாய்!
வண்ணத்துப்பூச்சியாய் சிரிக்கும் வானவில்லின் வர்ணங்களில் உனது ரேகையை அழுத்திப் பதித்திருக்கிறாய்.
மலை ஈரத்தில் கூடக் கரைந்து போகாத வானவில்லைப் பார்த்துக் கானகம் களிப்புறுகின்றது!
துளிர்களால் நிரம்பியிருக்கும் புதியமரம்,உனது காற்றால் தன்னைச்சுவாசித்துக்கொள்கிறது!
உன்னைப் பாடும் ஆவலில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உரோஞ்சி சப்தித்துக் கொள்கின்றன.
குளத்தில் தாமரை மிதந்து மிதந்து எழுகிறது.உனக்கென தரிசனம் தருவதற்காக.
நீ நிர்மலமாகவே தோற்றமளிக்கிறாய்!
கருணை கூர்ந்த உனது முகம்,இறுகப் பூட்டிய கதவுகளை அடித்துத் திறக்கிறது.
நீ வந்து நிற்கிறாய் என்முன் ஒரு இரவலனாய்...
நான் உன்னை எதிர்பார்க்கவில்லை.இப்படி நீ என்முன் வந்து நிற்பாய் என்று .
அரிசிமணிகள் கேட்டு இரந்து நிற்கிறாய் நீ ...
உள்ளே மூடைகளில் கட்டப்பட்ட அரிசிமணிகள் நான் போகிறபோது மாயமாய் மறைந்துவிடுகின்றன.
கடைசி அரிசிமணியை மேய்ந்துகொண்டிருக்கும் மயில் கொத்திக்கொண்டிருக்கின்றது.
நான் திரும்பிப் பார்க்கிறேன்.
நீ இன்னமும் வாசலில்தான் நின்றுகொண்டிருக்கிறாய்!
எங்கேனும் பத்திரப்படுத்திய அரிசி இருக்கக் கூடுமோ என நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நேர்த்திக்கென முடிந்து வைத்த சில்லறைக்காசு துணிமுடிப்பில் அகப்படுகிறது.
எடுத்து வருகிறேன்.
உனது பிச்சைத் தட்டில் சில்லறைகள் இருக்கவில்லை.
அரிசிமணிகள் இருந்தன.
நான் எங்கு போவது இந்த மழை இருட்டில்...அரிசிமணி வாங்குவதற்கு.
மயில் தோகை விரிக்கிறது.
உதிர்ந்து விழுந்த ஒரு இறகைப் பொறுக்கி வருகின்றேன்.அதைக் கூட நீ வாங்கிக் கொள்ளவில்லை.
நான் ஒற்றைச்சில்லறையோடு உன் பின் அலைகிறேன்.
"எனக்குப் பசிக்கிறது..."என நீ சொல்கிறாய்.
சாப்பிடுவதற்குத் தர என்னிடம் என்ன இருக்கிறது...!
அந்த நாணயக்குற்றி கீழே விழுகிறது.
சப்தமின்றி விழுந்தது.
எடுத்துப் பார்த்தபோது அது அரிசிமணி ஆகியிருந்தது.
ஓடிவந்து உன் தட்டை நிறைத்தேன்.
நீ புன்னகைத்தபடியே ஒரு பாடல் பாடினாய்.
ஆசீர்வாதங்களோடு அப்பால் போனாய்!
எனது வீட்டில் எதுவுமில்லை.
வயிற்றுப்பசி நீ போனபின் கிளம்பியது.
இனிய நறும்புகை நாசியில் தொற்றியது.
உனது கவிதை காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.
தூரத்து மலைகளுக்கப்பால் நீ போய்க்கொண்டிருப்பது தெரிந்தது.
உனது நிழல் மட்டும் நீ போகப் போகப் பெரிதாகி வந்தது.அருகிலே வந்து
தொட்டுப் பார்க்கையில் எதுவுமே இல்லையாகிப்போனது.
மலைமுகட்டின் அடியில் சிவப்புச் சூரியன் ஒளிந்துகொண்டிருந்தபோது நீ எனக்குள் ஐக்கியமாகிப்போயிருந்தாய்.
கடைசி விருந்தாளியாய் வந்த உனது மனதைத் திருப்திப்படுத்திய நிறைவோடு எனது வறுமை தீர்ந்துபோனது.
-தாட்சாயணி
No comments:
Post a Comment