Saturday, October 27, 2012

பூக்களின் வாசம்


             

     ஏழை விவசாயி வானத்தை அடிக்கடி பார்ப்பதுபோல் நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
     அவனுக்கு மழையின்றேல் வயிற்றுப்பிழைப்பு நடக்காது.
     எனக்கும் உன் அருள் இன்றேல் வாழ்க்கைப் போராட்டம் ஜெயிக்காது.
     வாழ்வில் போராடிப் போராடித்துவண்டு நிற்கிற நேரங்களிலெல்லாம், நீ நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்சி கொடுக்கிறாய்.
     மழை கண்டு செழித்து நிற்கின்ற பயிர்களைப் பார்த்து விவசாயிக்கு ஏற்படுகின்ற ஆனந்தம் எனக்கு உன் அருள் கண்டு என் வாழ்வு செழிக்கின்ற போது ஏற்படுகின்றது.
     காற்றிலே நெற்பயிர்கள் உல்லாசமாக ஆடுவதுபோல,என் மனம் உன் அருளூற்றில் ஆனந்தமாய் நனைந்து கொண்டிருக்கிறது.
     எங்கேனும் பலவருடங்களுக்கு ஒருமுறை பூக்கின்ற அற்புதமலர் போல, என் மனதோரத்தில் உன் அருள்மழை பூத்துச் சொரிந்துகொண்டிருக்கின்றது.
     நீ உன் கரங்களை என் தலைமீது வைத்து ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருக்கிறாய்.
     ஒரு குழந்தை கனவிலே பூத்துச் சிரிப்பதுபோல் என் வாழ்வில் வசந்தம் துளிர்விட்டு எழுகிறது.
    அந்த வசந்தம் காலங்களை வென்று என்றும் என் கூடவிருந்து, என் மனதுக்குச் சாந்தியளிக்க விழைகிறது.
    நீ என் தலை தொட்டதால் வந்த வசந்தம் இலேசில் மறந்து போகக்கூடியது அல்ல.
    இலையுதிர் காலங்களால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்த, எனது காலத்தின் மீது புதிய பூக்களைத் துளிர்க்கச் செய்தவன் நீ.
    வறண்டுபோன மண்ணில் ஈர நீர்த்துளிகளை வீழ்த்தி, விதை மலர்த்தி சோலைகள் செய்தவன் நீ.
    நான் இப்போது உலகின் பார்வை பதியும் இடமாய் மாறியிருக்கிறேன்.
    பறவைகள் என்னைத் தேடிவருகின்றன.
    பறவைகள் எனக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
    பறவைகளுக்கான சரணாலயமாய் நான் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறேன்.
    உலகம் என்னையும் பெயர் சூட்டி அழைக்கத் தொடங்கியிருக்கிறது.
    உலகின் உன்னதங்களில் ஒன்றாக எனது பெயர் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
    நீ... எனது மலர்வுக்குக் காரணமாக இருந்துவிட்டு உன்னை மறைத்துக் கொள்கிறாய்.
    இடையிடையே நீயும் ஒரு பறவையாக என்னைத் தேடி வருகிறாய்.
    என்னால் உன்னை அடையாளம் காண முடிகிறதா எனச் சோதிக்கிறாயா...?
    நான் தானியங்களையும், பழங்களையும் கொண்டு உனக்காகக் காத்திருக்கிறேன்.
    நீ சற்று இளைப்பாறிவிட்டு, மீண்டும் பறந்துபோய் விடுகிறாய்.
    உனக்கான பழங்களும், தானியங்களும் என்னிடமே மீந்திருக்கும்.
    எனது பொலிவு குன்றாமல் மீண்டும் ஒருபோது நீ வருவாய் என உனக்காக நான் காத்திருப்பேன்.
    எனது பூக்களை கிளைகளில் ஏந்தியபடி ஒவ்வொரு காலையிலும் உன்னை எதிர்பார்த்திருப்பேன்.
    நீ ஒவ்வொருவரை அனுப்பிக்கொண்டிருப்பாய்.
    ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான பூக்களைச் சொல்லி வாங்கிக் கொண்டு செல்வார்கள்.
    ஆனால், உனக்கு மட்டும் நான் நினைத்தபடி பூக்களைக் கொடுக்க முடியாதபடி எல்லாப் பூக்களும் நிறைந்து முடிந்திருக்கும்.
    பூக்கள் கேட்பவர்களுக்கு இல்லைஎன்று சொல்லாமல் எல்லாப் பூக்களும் முடிந்தபிறகு அடுத்த நாளுக்கான அரும்புகளோடு காத்திருப்பேன்.
    அடுத்த நாளாவது முதல் ஆளாக நீ வந்துவிடுவாய் என்று...
    எனது பூக்களை உனது பாதத்தில் சமர்ப்பிக்கலாமென்று...
    நீ மற்றவர்களை அனுப்பிக் கொண்டிருப்பாயே தவிர உனது தேவைக்கு நீ வருவதேயில்லை.
    எல்லாருக்கும் வாரி வழங்கும் நீயா என்னிடம் பூக்கள் இரந்து வரப்போகிறாய்...!
    நீ வருவாய் என்ற நம்பிக்கை இழந்து கேட்பவர்களுக்கெல்லாம் பூக்களை வழங்கிக் கொண்டிருக்கிறேன்.
    எனக்குக் கூட ஒரு பூ வைத்துக் கொள்ளவில்லை.
    வெயில் வறண்டிருந்த ஒரு பொழுதில் நீ வந்தாய்.
    நீ தாகமாய் இருப்பதாய்ச் சொன்னாய்.
    உன் தாகத்திற்கு நீர் தந்தேன்.
   அருந்தி முடித்துவிட்டு எழுந்து நின்றாய்.
   சுற்றுமுற்றும் பார்த்தபடியே கேட்டாய். 'ஒரு பூக்கூட நீ எனக்கு விட்டு வைக்கவில்லையா...?'
   தூக்கிவாரிப்போட நிமிர்ந்தேன்.
   உனக்கே அனைத்தையும் தந்துவிட்டேனே...!
   எனக்குள் தைத்த கொடிய முள்ளை என்னால் எடுக்கமுடியவில்லை.
   இன்னும் நெஞ்சுக்குள் தைத்தது.
   உன்னால் தரப்பட்டவை,உனக்கே அனைத்தையும் சமர்ப்பித்துவிட்டேன்.
   உனக்கெனக் காத்திருந்த பொழுதுகளில் நீ வரவில்லை.
   இதோ இப்போது வந்திருக்கிறாய்.
   உனக்குரிய அர்ச்சனை மலர்கள் எங்கே எனக் கேட்கிறாய்!
   என்ன செய்வேன்?
   என்னிடமிருந்த எல்லா மலர்களையும் கேட்பவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டேனே!
   கணப்பொழுதுதான்.
   நான் தீர்மானித்துவிட்டேன்.
   நானே ஒரு மலராக மாறுகிறேன்.
   உள்ளூர களிப்பேறுகிறது!
   நீயே என்னை அணிந்து கொள்ளப் போகிறாய்.
   உன்னோடே தங்கிவிடப் போகும் மகிழ்ச்சி.
   நீ சிரிக்கிறாய்!
   அப்பால் போகிறாய்.
   நான் அப்படியே சிலையாகி நிற்கிறேன்.
   உள்ளே பூக்கள் மலர்கின்றன.
   வனாந்திரமெங்கும் பூக்களின் வாசம் நிறைகிறது.
   நீயே பூக்களாய் நிறைந்திருக்கிறாய்!
   எனது வாசல் வாசனையில் குளித்துக்கொண்டிருக்கிறது.
   உனது குரல் ஒவ்வொரு பூக்களிலும் வண்ணத்துப்பூச்சிகளாய் உட்கார்ந்திருக்கிறது.
   ஒவ்வொரு காலையும் முதல் ஆளாய் நீ வருவாய்!
   இந்தப் பூக்கள் அனைத்திலும் உன் வாசத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வாய்!
   நான் ரசித்துக்கொண்டிருக்கிறேன், இந்தப் பூக்களில் உனது வாசத்தை...!

                                                            கடவுளோடு பேசுதல் - சில ஆன்மீகக் குறிப்புக்கள்
                                                            -2009

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_24.html

    நன்றி

    ReplyDelete