Saturday, January 28, 2012

பெண்



இவளுக்கு முடியவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை. இருந்தாலும் எமும்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான். இவள் அயர்ச்சியை மறந்து அவனை ஒரு கணம் பார்த்தாள். இது வரைக்கும் இப்படி நடந்ததில்லை. மணமான பிறகு ஒரு நாளுமே இப்படி வருத்தம் என்று வந்ததில்லை. மணமான முதல் மூன்று மாதங்களும் மகிழ்வின் உச்சக் கட்டங்களையே அனுபவித்த காலங்கள் அவை. இப்படி உடல் வருத்தத்தால் கடமைகள் பின் தள்ளப்பட்டு முகம் சுழிக்கப்படக்கூடிய இது மாதிரித் தருணங்கள் அவர்கள் வாழ்வில் இன்னும் நேரவில்லை. இனி நேரக்கூடும். அதற்கு ஆரம்ப தருணமாக இதுவே இருக்கவும் கூடும். அவன் இதனை என்ன மாதிரி அணுகக் கூடும்? பிரச்சினைகள் ஏற்படுகின்ற போதுதானே மனிதர்களின் சுயகுணங்கள் அம்பலத்துக்கு வருகின்றன.

அந்த வேளையை அவள் ஒருவித இரக்கத்தோடு, சுயபச்சாதாபத்தோடு எதிர்கொள்ள வேண்டுமோவென அஞ்சினாள். இது நாள் வரை போலான இனிய நாள்களென்ற சொல்லில் கொஞ்சம்கூட பிசகு வரக்கூடாதென்பதில் அவதானமாயிருந்தாள். அதன்  விளைவாயே நெற்றியில் புரள்கின்ற அவன் கேசத்தை வழமை போலவே வருடிவிட்டு எழுந்தாள். அப்போது கூட இந்தத் தலைவலிக்கு இதமாய் அவன் அவளது நெற்றியை வருடி விட்டாலென்ன? என்ற ஏக்கமான எண்ணம் தோன்றாமலில்லை. அவன் உறக்கம் கலையவில்லை. வழக்கமாயே இவள் எழுந்து ஒரு மணிநேரம் கழித்து எழுவதே அவன் வழக்கமாயிருந்தது. இப்போது அவள் கூட சற்றுப் பிந்தி எழும்பியதால் அவன் எழும்ப இன்னும் அரை மணிநேரம் இருக்கும் போல் தோன்றியது.

இவ்வித காய்ச்சற் குணம் உணர்ந்தால் அவன் நெற்றியில் கைவைத்துக் காய்ச்சல் இருக்கிறதாவெனப் பார்க்கக்கூடும். ஆனால் அவளது முகபாவத்திலிருந்தே அவளது வேதனை உணர்ந்து நெற்றி வருடானோ? என்பதிலேயே ஏக்கம் இருந்தது.

சின்ன முக வேறுபாட்டிலிருந்து இவள் உள்ளத்தையே உணர்ந்து கொள்ள மாட்டானா? அவனது சின்னக் கண்ணசைவு ஒன்றிலேயே இவளால் அவனைப் புரிந்து கொள்ள முடிகிற போது அந்தக் கண்களின் ஆழத்திலிருந்து மகிழ்ச்சியோ வேதனையோ எது அவளைச் சுற்றிப் படர்ந்திருக்கிறது என இவளால் உணர முடிகிறபோது… அவனால் மட்டும் அவளது தலைவலியைப் புரிய முடியாது போகுமோ…?

இவளுக்கு அவன் மனதிலிருந்து பீறிடக்கூடிய பரிவு தேவையாயிருந்தது. ஒரு கணப் பார்வையில் அவன் அவளை அளந்து வார்த்தைகளற்ற மௌனத்தில் விரல்களால் முகம் வருடி அணைக்கும் ஒரு சின்னச் செய்கையில் அவன் பாசம் உடலெங்கும் பரவுவதாய் உணர்ந்து அந்த உற்சாகத்திலேயே எல்லா வேலைகளையும் சுமந்து விடலாம் போலிருந்து.

மனசு லேசானால் எந்தக் கடினமான வேலையும் இலகுவில் சுமக்கப்பட்டு விடும். ஆனால் மனது கனத்திருக்கும் போது சுலபமான வேலையைக் கூடச் சுமந்து முடிக்க முடிவதில்லை.    

அவனோ இவளது எதிர்பார்ப்புக்கள் எதுவுமே புரியாமல் உறக்கத்தில் இருந்தான். இவள் கிணற்றடி லைற்றுகளைப் போட்டு கிணற்றடிக்கு போய் வந்து சமையலறைக்குள் நுழைந்து அடுப்பில் கேத்திலை வைத்துவிட்டு காய்கறிகளை நறுக்கினாள். வெங்காயம் வெட்டியபோது காத்திருந்த மாதிரி கண்ணீர் வெளிப்பட்டது. இதற்கு மேல் தாங்காது போல் தோன்றவே பேசாமல் கட்டிலில் போய் விழுந்தாள். தலைவலி மண்டையைப் பிய்த்தது. அனுக்கங்களோடு படுத்தவளின் குரல் அவனை உசுப்பியிருக்க வேண்டும்.

“என்ன வத்சி…?” என்றபடியே  திரும்பிப் படுத்தான். அவள் எழும்பாததால் எழும்புவதற்குரிய நேரம் வரவில்லை. என்று நினைத்தானோ…?

அவன் கண்கள் தாமாகவே இந்த வருத்தங் கண்டு விசாரிக்க வேண்டும் என்று பிடிவாதமாயிருந்தவள் அதைத் தளர விட்டபடி சொன்னாள்.

“ஒரே தலையிடி ஏலாமக் கிடக்கு…”

அவன் அவள் புறம் திரும்பினான்.

“ஏன்…” அவன் அவள் முகம் திருப்பி விசாரித்தான்.

“ஏனோ தெரியா…”

இவள் மெல்ல எழும்பி அடுப்படியில் பாதி வேலை கவனிக்க நகர்ந்தாள்.

“ஏலாதெண்டா பேந்தேன், வேலைக்கு லீவு போடுமன்…”

“ஏற்கனவே லீவு கனக்க எடுத்தாச்சு. பாப்பம் பனடோல் போட்டிட்டுப் போவம்…”

தன்னுடைய வேதனையான  முனகல்தான் அவனை அக்கறை கொள்ள வைத்ததே தவிர தன் முகத்திலிருந்தே அவன் தன்னை உணர்ந்து கொள்ளவில்லையென அவளுக்குள் சற்றே மனத்தாங்கல் ஏற்பட்டது. தலைவலியைக் கூட தாங்க மாட்டாமல் அனுங்கல் வந்துவிட்டதேயெனத் தன் மீதே வெறுப்புப் பற்றிக் கொண்டு வந்தது.

அடுப்படி வேலை கவனித்துக் கொண்டிருந்த போது அவனே வந்தான்.

“ஏலாதெண்டா விடும் சமைக்க வேண்டாம்…” என்று சொல்லி பால்மாவும் சீனியும் வைக்கப்பட்ட போத்தல்களை நகர்த்தி மூடி திறந்தான். இவள் சட்டென்று எழுந்தாள்.

“நீங்கள் விடுங்கோ நான் போடுறன் தேத்தண்ணி…” என்றவாறே அவனை விலக்கி பிளாஸ்கைத் திறந்தாள்.

‘அப்பாடா’ என்றொரு மூச்சு அவனிடமிருந்து கிளம்பினாற் போலிருந்தது. அவளுக்குச் சிரிப்பாய் வந்தது. ஒரு முறை அவன் தேனீர் கலந்து வந்ததும், தான் போட்ட தேனீரையே குடிக்கமாட்டாமல் அவன் சிரமப்பட்டதும் ஞாபகத்தில் தெரிந்தது. இருந்தாலும் அவன் இந்த நேரத்தில் தானே வற்புறுத்திப் போடாமல் விட்டானே என்ற நினைப்பு லேசாய் முள் குத்தியது. அதிலும் தன் வருத்தத்தின் தீவிரத்தை அவன் உள்ளபடியே இன்னும் புரியவில்லை என்பதாலும் வேதனையாயிருந்தது. ஒன்றும் பேசாமல் அவள் தேனீர் கலக்கிக் கொடுக்க வாங்கியவன் அவளுக்கும் கலந்திருப்பாள் என எதிர்பார்த்திருந்தான் போலும்.

இவள் தான் அருந்தாமல் திரும்பவும் மீதி வேலையை கவனிக்கப் போவதை உணர்ந்து “என்ன வத்சி ஒண்டும் குடிக்காமல் என்ன செய்யிற சூடா ஏதேனும் குடிச்சாத்தானை சுகமாக் கிடக்கும்…” என்றான்.

“இல்லை எனக்கொண்டும் மனமாயில்லை…”

“அப்ப எனக்கும் வேண்டாம்…” அவன் தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு நகர்ந்தான்.

“நீர் குடிக்காட்டி நானும் குடிக்கன்…”

அவள் அவனைப் பரிவோடு பார்த்தாள். எழும்பித் திரும்பவும் தேநீர் கலக்க வெறுப்பாய் இருந்தது. அவன் போட்டுத் தந்தால் நன்றாயிருக்கும் போலிருந்தது. ஆனால், தான் போடும் தேனீரின் மகிமையைப் பற்றி நன்கறிந்திருந்த அவனோ அப்படி ஒரு சோதனையில் தன்னை ஈடுபடுத்த விரும்பவில்லை. இவள் திரும்பவும் எழும்பி தேநீர் கலந்தாள். முனகல்களுடே நெற்றி  சுருங்கி பயங்கரமாய் வலித்தது. அவன் அதற்கிடையில் உள்ளே போய் ‘விக்ஸ்’ எடுத்து வந்திருந்தான். நெற்றி நரம்புகளிடையே அழுத்தமாய்த் தேய்த்தும் விட்டான்.

“வேண்டாம் வத்சி ஏலாதெண்டால் போய்ப் படும்… இண்டைக்கு சமையலும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். போய் படும்…” என்றான்.

“அப்ப சாப்பாடு…” இவள் கேள்வியாய் இழுத்தபடி தேனீரை மனமின்றியே உறிஞ்சினாள்.

“சாப்பாடென்ன சாப்பாடு? நான் ஏதேன் கடைலை வாங்கி வாறன்…” இவள் சுவரோடு சாய்ந்து கொண்டாள்.

மனப்பாரம் லேசாய் விலகின மாதிரியிருந்தது.

அப்படியே அவன் தோளில் சாய்ந்து  காலம் முழுதும் ஆறுதலுற்றிருக்க வேண்டும்போல் தோன்றிற்று. ஆனால் அது முடியாது. அலுவலகத்தில் தலைக்கு மேல் வேலையிருக்கப் போகிறது.

இவள் குடித்து முடிந்தவுடன் அவன் தன்னுடையதோடு சேர்த்துக் கொண்டு போய் டம்ளர்களைக் கழுவி அலம்பி வைத்துவிட்டு வந்தான்.

“நீர் படும்… என்ன…?” செல்லிக் கொண்டே குளிப்பதற்காக அவன் கிணற்றடிக்குப் போனான். இவள் லேசாய்ப தலைப்பாரத்தைக் குறைக்க கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டாள்.

நேரம் அவசர அவசரமாய் விரைவது போற்படவே அவளும் எழுந்து சுடு நீர் கலந்து உடலைக் கழுவிக் கொண்டு அலுவலகத்துக்கு வெளிக்கிடலானாள்.

இவளைக் கேள்விக்குறியோடு ஏறிவிட்ட அவன்

“ஒரு நாள் லீவெடுத்தா ஒண்டும் குறைஞ்சிடாது…” என்றான் மறுபடியும்.

அவன் பரிவு தாங்காமல் “இப்ப பரவாயில்லை ஆகலும் ஏலாதெண்டால் அரைநாளோடை வந்திடுறன்…” என்றாள்.

“ஓம் அரைநாளோடை வந்திடும்” என்றவாறே இவனும் கிளம்பிவிட்டான். இவள் பஸ்ஸிற்காய் காத்திருக்க நேரிட்டது. இங்கே வந்த பிறகு அலுவலகம் தொலை தூரமாய்ப் போய் விட்டது. இடமாற்றத்துக்கு எழுதிப் போட்டிருந்தாள். அது கிடைப்பதற்கு இன்னும் நாளாகலாம்.

அவனுக்கும் இவளுக்கும் ஒரே ஊரில் வேலை என்றால் பரவாயில்லை. அங்கேயே ஒரு வீடு பார்த்துக் குடியேறியும் விடலாம். இது இரண்டு பேரும் இரண்டு வேறு திசைகளில். எங்கென்றுதான் வீடு எடுப்பது? இங்கே அவனுடைய வீடு இருந்ததனால் இங்கேயே தங்க வேண்டியதாகிவிட்டது.

அவளுக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. வீட்டில் தலை வலியாயிருந்தால் பேசாமல் படுத்து விடுவாள். அம்மாதான்  தேடித் தேடி உள்ள கை வைத்தியங்களெல்லாம் செய்வாள். இப்போதும் அந்த அன்பை நாடி ஏங்கியது மனம்.

பஸ் நிறைய சனங்களோடுதான் வந்தது. வடமராட்சியிலிருந்து  யாழ்ப்பாணம் போகும் எந்தவொரு பஸ்ஸுமே இப்போது சனம் குறைச்சலாகப் போவதில்லை. இவள் ஒரு மாதிரி ஏறிக் கொண்டாள். அலுவலகம் போய்ச் சேரும்வரை ஏதோ ஒரு மாதிரிச் சமாளிக்க முடிந்தது.

அலுவலகத்தில் கடமை ஏற்கத் தொடங்கியவுடன்  மறுபடியும் விண் விண்ணென்று அதிபயங்கரமாய் வலிக்கத் தொடங்கியவுடன் இவள் பல்லைக் கடித்தவாறே தன் கடமைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். யாராவது பரிவோடு விசாரிக்க மாட்டார்களா என்றிருந்தது.

பக்கத்து மேசைகளில் சேலையைப் பற்றியும் உமாவின் தோட்டு டிசைன் பற்றியும் கண்கள் விரியக் கதைத்துக் கொண்டிருக்கும் கலாவும் மாலதியும் கொஞ்சம் இந்தப்பக்கம் திரும்பி“என்ன வத்சலா முகம் காஞ்சு கிடக்கு…” என்று விசாரித்தால் பரவாயில்லை போலிருந்தது.

அவர்களின் கதை தோட்டையும் சேலையையும் விட்டு அசைவதாயில்லை. இவள் கைப்பைக்குள்ளிருந்த விக்ஸ் குப்பியை எடுத்து விக்சை நன்றாய் நெற்றியில் தேய்த்து விட்டுக் கொண்டாள்.

அதிகாலையில் அவன் அன்போடு தேய்த்து விட்டது ஞாபகம் வந்தது. அந்த விரல்களின் தேய்ப்புக்காய் மனம் மறுபடியும் ஏங்கத் தொடங்கியது. இப்போது மூக்கினுள்  சளி கரைந்து வழிந்து விடும் போலிருந்தது. “சரி போதாக் குறைக்கு தடிமனாக்கிப் போட்டுது…” மனதுக்குள் உரத்த அதட்டல் போட்டு வருத்தங்களைப் பின் தள்ளி கடமையில் ஈடுபட முயன்றாள்.

மேலகதிகாரிகளிடம் சில பைல்களைக் காட்டக் கொண்டு சென்றபோது அவராவது அவளது முகத்திலிருந்த வருத்தத்தை உணர்ந்து தானாகவே லீவெடுக்கச் சொல்லமாட்டாரோ என்றிருந்தது. மேலதிகாரிக்கு இரக்ககுணம் இருந்தது. ஆனால் அவர் இப்போது மிகவும் தீவிரமாய் வேலையில் ஆழ்ந்திருந்தார். வேறு பிரச்சனைகளுக்கு அவர் முகம் கொடுப்பதாய் இல்லை.

இவள் வெறுமையோடு தன் மேசைக்குத் திரும்பி வந்தாள்.

“என்ன மிஸ் இண்டைக்கு டல்லாயிருக்கிறீங்கள். வீட்டுக்காரரோடை ஏதும் பிரச்சினையோ…?’

கேலியாய் ஊடுருவிய சந்திரமூர்த்தியை கோபமாய் முறைத்தாள். அவனைப் பிடிப்பதில்லை. போயும் போயும் அவன் கண்களுக்கா என் வேதனை தெரிய வேண்டும் என வெறுப்பு வந்தது.

இனிமேலாவது தைரியமாய் வருத்தத்தை மறைத்து இருக்க வேண்டுமென முயன்று தன் கடமைகளுக்குள்ளே தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

தன்னுடைய வருத்தத்தைச் சொல்வதில் தன்மானம் இடம் தராமற் போகவே அரை நாள் லீவு கூட எடுக்காமல் முழுநாளும் வேலை செய்தாள.; மத்தியானம் அவன் தனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வைத்துக் காத்திருக்க கூடும் என்பது உறுத்தியது.

யாரோடும் மனம் ஒன்றிக் கதைக்க முடியாமல் பஸ்ஸிகாய் காத்திருந்தாள். தடிமனின் வீரியம் கூடக் கூடத் தும்மல் அதிவேகமாய் வந்து கொண்டிருந்தது. "அவர் நினைக்கிறார் போலை…” வேதனையையும் மீறி இதழ்களில் ஒரு முறுவல் எட்டிப் பார்த்தது. இரண்டு கைக்குட்டைகள் முற்றாய் நனைந்து போயின.

“நல்லவேளை ரெண்டு மூண்டு லேஞ்சி எப்பவும்      'ஹான்ட் பாக்’ கிலை கிடக்கிறது” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

பஸ் கிறவுட்டாகத்தான் வந்தது. அது எப்போதும் போல் பழக்கப்பட்ட விஷயம்தான். ஆனால் வாசல் கரையோடு நிற்பது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. தலை ஒரேயடியாய் சுற்றிக் கொண்டு வந்தது. நெரிசலுக்குள் அங்குமிங்கும் திரும்பவோ அசையவோ முடியவில்லை. தலைச் சுற்று என்று சொன்னால் யாராவது இடம் தரமாட்டார்களா என்றிருந்தது.

ஆனாலும் கேட்க மானம் இடம் கொடுக்கவில்லை. அப்படிச் சொல்லி ஏன் இருக்க வேண்டும். யாராவது பார்க்கிற ஓரிருவருக்கு என் முகத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாதா? என்றொரு ஏக்கம் எட்டிப் பார்த்தது.

நிச்சயமாய்  இங்கு தலை சுற்றி விழும்படியாய் நேராது. ஏனென்றால் ஒட்டிப்பிடித்தபடி சனங்கள். விழாவிட்டால் சரிதானே. நின்றே போய் விடலாம் என்று னண்ணிக் கொண்டாள். கால் வழியே சூடு நரநரவென்றது. இவள் இடைக்கிடையே கம்பியைப் பற்றியிருந்த கையை எடுத்துக் கைக்குட்டையால் மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

பஸ் போய்க் கொண்டிருந்தது.

திடீரென்று அவள் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள். ஆணோ பெண்ணோ யாரோ எவரோ என்றில்லாமல் நெருங்கியிருந்த கூட்டத்திடையே இவள் மார்பில் ஒரு கரம். இப்போது அவளுக்கு வாந்தி வரும் போலிருந்தது.

கொஞ்சம் அசைந்து தன்னைச் சரிப்படுத்தி அந்தக் கரத்துக்குரிய முகத்தை ஏறிட்டுத் திடுக்கிட்டாள். ஒரு விடலை. பதின்மூன்று, பதின்நான்கு வயதிருக்கும். எங்கோ பார்த்தபடி நின்றிருந்தான். இவளுக்கு ஞாபகம் வந்தது. பஸ்ஸில் ஏறி உள்நுழைய முயன்ற வினாடியில் பக்கத்து சீற்றை கையால் பிடித்தபடி “அங்காலை போகேலாதக்கா உதிலையே நில்லுங்கோ…” என்றவன்.

இவள் திரும்பவும் அவன் கையையும்,முகத்தையும் பார்த்தாள். முகம் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க, கை இங்கே மேய்ந்து கொண்டிருந்தது. இவள் தோள் சிலிர்த்தது. அந்தக் கரத்தை அப்புறப்படுத்த முயன்றாள். அவனோ ‘சீற்’றில் கைபிடிப்பது போல் சாவதானமாய்ப் பிடித்துக் கொண்டிருந்தான்.

“பால் வடியுது முகத்திலை, பிள்ளைக்கு அம்மாண்டை நினைப்புப் போலை…” கோபம் எகிறிக் குதிக்க தலைவலி இன்னும் பிரமாண்டமாய் வளரும் போல் உணர்வு தொங்க, எதுவும் செய்யமாட்டாமல் அவஸ்தையுற்றாள். சில நொடிப் பொழுதில் அவன் போலவே அவளும் எங்கோ பார்த்தபடி அருகே அவன் காலைத் தேடித் குதியுள்ள தன் செருப்பால் இறுக்கி மிதித்தாள்.

“ஆ…” அவன் வலியில் துடிப்பது தெரிய சட்டென்று அவன் கை விலகி அவனது முகமும் விகாரமாய்ப் போகவே இவள் காலை எடுத்தாள். மறுநொடியே அவன் காணாமற் போனான்.

“சீ…”இந்த மண்ணிண்டை இளசுகளெல்லாம் இப்படிப் பிஞ்சிலையே வெம்பிப் போச்சுதுகளே…” மனது முணுமுணுக்க எங்காவது இறங்கி ஓடிப்போய்விட வேண்டும் போலிருந்தது. மனதின் அருவருப்பு இன்னும் நீங்கவில்லை. தலைவலியின் நினைப்பு, தடிமல், தலைச்சுற்றல் எல்லாவற்றையும் மறந்து இந்தச் சமுதாயத்தைப் பீடித்திருக்கின்ற இந்த நோய்கட்கு எங்கே மருந்து தேட முடியும்…? என்பதாய் மனது கேள்வி எழுப்பத் தொடங்கியிருந்தது.

“செக்கிங் பொயின்ற். ஒருக்கா இறங்கிப் போட்டு ஏறுங்கோ…”

கண்டக்டரின் வெண்கலக்குரல் கேட்க இறங்கி நடக்கத் தொடங்கியவள் ஆண்கள் கூட்டத்தினுள் அந்த விடலையைத் தேடினாள். இன்னும் எத்தனை பெண்களிடம் தன் கைவரிசை காட்டப்போகிறானோ என மனம் பதறிற்று. இதைவிட அதிகமாய் எப்படித் தண்டனை கொடுக்கலாமென மனது அலசிற்று. பெண்கள் எதிர்ப்பக்கமாய்ப் போக அவர்களோடு போய் இணைந்து கொண்டாள். மாலைச் சூரியனின் வெயில் பட்டதும் எரிவது போலிருந்தது. கண்கள் மீண்டும் கலங்கி மூக்கில் நீர் பளபளத்தது. இவள் குடையை விரித்து வெயிலைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

பின்னாலிருந்த பஸ் தன் செக்கிங்கை முடித்துக் கொண்டு முன்னால் நகரத் தொடங்கியிருந்தது. ஆண்கள் முன்னாலேயே ஏறிவிட்டார்கள். எரிச்சலாய்க் கிடந்தது. ‘இப்ப வடிவா நிண்டாத்தானை பொம்பிளையள் ஏறினாப்பிறகு வசதியாப் பக்கத்திலை நிண்டு உரஞ்சலாம்…’

அந்த முகம் தெரியாத பிரகிருதிகள் மேல் கோபம் பொங்கியது. இவளுடைய முறை வந்துவிட்டது. குடையைசுருக்கி மடக்கி விட்டு, ஹாண்ட பாக் திறந்து ஐ.சியை எடுத்தாள். சோர்வாயிருந்தது. ஐ.சி பார்த்துவிட்டு இவள் முகத்தை ஏறிட்டவள் “சுகமில்லே…” என்றாள்.

இவளுக்கு ஒரு நிமிடம் குரல் அடைத்துப் போயிற்று.

“சுகமில்லே…சுகமில்லே…”  அவளுடைய கொச்சைத் தழிழ் மனதின் பாறைகளில் மோதி எதிரொலித்தது.

“ம்…” தலையாட்டினாள்.

“அப்ப ஏன் இருக்கல்லை… ஏன் வந்தது…?” இவள் ஒன்றும் பேசாமலே மெதுவாய்ச் சிரித்தாள். பின் பஸ்ஸை நோக்கி நடந்தாள். அந்தப் பெண் சிப்பாய் கையைத் தட்டி கண்டக்டரைக் கூப்பிட்டாள்.

“கெதியா வாங்கக்கா” என்று அவசரப்படுத்திய படியிருக்கின்ற கண்டக்டர் அங்கிருந்து ஓடி வந்தான். பஸ்ஸில் இருந்தவர்கள் வரப்போகின்றவர்களின் தாமதத்துக்காய் முணுமுணுத்தார்கள். இவள் வேண்டுமென்றே ஆறுதலாய் நடந்தாள். கண்டக்டரிடம் இவளுக்கு இடம் கொடுக்குமாறு அவள் சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

இவள்  கண்ணில் இப்போது எதுவுமே தெரியவில்லை. அந்த பஸ், அதிலே காத்திருக்கின்றவர்கள், இடம் தராதவர்கள், மார்பை உரசிய அந்த விடலைப் பையன், வேளைக்கு வரும்படி கத்திய கண்டக்டர் எவருமே கண்ணில் விழவில்லை. மாறாய் ஆயுதம் ஏந்திய அந்தப் பெண். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று உறவுகளை விட்டு எங்கிருந்தோ எந்தத் தூர  தேசத்துக்கோ வந்திருந்து, யாருக்காகவோ,  எதற்காகவோ போராடிக் கொண்டிருக்கின்ற அந்தப் பெண்… எப்பவோ ஒருநாள் இந்த மண்ணில் அவள் குருதி சிந்தும், போது பரிவாய் அவள் காயம் துடைத்து வருட… அடி பாவிப்பெண்ணே... உன்னிடம் யார் கேட்பார்கள் ‘சுகமில்லே’ என்று. உனக்கு சுகமில்லாவிட்டால் யார் உனக்கு ஆறுதல் சொல்வார்கள்…?

“ஆருக்கு சுகமில்லையாம்…” பஸ்ஸிற்குள் பயணிகள் குசுகுசுத்தார்கள்.

இவள் கண்ணில் மின்னி மின்னி ஒரு துளி எட்டிப் பார்த்தது. தடிமன் இப்போது கூடி விட்டது போல…                                                                                                                                              
                                                                                                                                 -தாயகம்
                                                                                                                              25டிசம்பர் 2000

2 comments:

  1. தாட்சாயினி அவர்கட்கு.
    வணக்கம்.
    தங்களின் சிறுகதைகள் ஆரம்பத்திலிருந்தே வாசித்து வருபவன்.வித்தியாசமான சிந்தனைகளுடன் நன்கு பேசப்படும் பெண் எழுத்தாளராக பவனி வருகின்றீர்கள்.
    எமது பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்களுடன்,
    முல்லைஅமுதன்
    http://kaatruveli-ithazh.blogspot.com/

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete