Tuesday, January 24, 2012

தாட்சாயணியின் 'ஒரு மரணமும் சில மனிதர்களும்'-ரெ.பாண்டியன்


http://vasagarvattam.blogspot.com/2006/02/blog-post_113956751834344396.html


ஒரு சிறுகதை கடைசி வரியில் முடிவதில்லை. அவ்வாறு முடியும் கதைகளின் கடைசி வரி நீதி கதையின் ஒரே அர்த்த தளமாக முடிந்துவிடுகிறது. ஆனால் 'முடிந்தும் முடியாத' போது, கதை சொல்ல வருவது என்ன என்பது வாசகனின் வாழ்க்கை அனுபவம் சார்ந்து விரிந்துகொண்டே போகும். இதைச் சாதிப்பதே எப்போழுதும் ஒரு சிறுகதை ஆசிரியனின் அதிகபட்ச சவலாக இருக்கிறது.

நவீனத்துவ கதைசொல்லலின் தொடக்கமே இந்த ஒரு தளத்தினாலான நீதி என்கிற கறுப்பு-வெள்ளை கற்பனைக் கோட்டினை நிராகரித்துவிட்டு முன்னே நகர்வதுதான். 'வெடிக்காய்', 'வெளியில் வாழ்தல்', 'விடுபடல்' ஆகிய கதைகள்நவீன கதைசொல்லலின் சாதனைச் சுவடுகளின் திசையில் காற்றடிப்பவை. "தீ விளிம்பு" கதையின் முடிவு இன்னும் கூர்மைப்படுத்தப்படும் பட்சத்தில், அக்கதைக்கும் கொடியேற்றம்தான்.

உள்ளடக்கம்தாட்சாயணியின் கதைகளை இவ்வாறு பிரித்துவிடலாம் :
அ) 'விடுபடல்' , 'பெண்' , 'ரிக்கெற் ஷோ' ஆகியவை போர்ச்சூழல் தவிர்த்த மக்களின் அன்றாட விஷயங்களைப் பற்றி பேசுபவை.ஆ) தொகுப்பில் உள்ள பிறகதைகள் அனைத்தும் போர்ச்சூழலின் பின்னணியில் தனிமனிதர் படும் அவதியை, அவமானத்தை, உறவுகளை அநியாயமாக இழப்பதை, மௌனமாக ஜீரணிக்கவேண்டிய பலாத்காரத்தை - இவ்வளவு துன்பத்திலும் மண்ணைவிட்டு அகலமறுக்கும் முதியவர்கள், மற்றும் இளம்தலைமுறையினரைப் பற்றி பேசுபவை.

உருவம்'சிறுகதையின் ரூபம் கதை எழுதுபவரின் மனோதர்மத்தைச் சேர்ந்தது ' என்றார் புதுமைப்பித்தன். தாட்சாயணி கதைகளில்ஒரு குழந்தைச் சிறுவனின் கள்ளங்கபடற்ற தன்மையிலும் , ஒரு இளம்பெண்ணின் அடங்கின குரலிலும் கதையின் உருவம்நிறுவப்படுகிறது. ஆனால், இந்த அடங்கின குரல் கதையின் நுட்பத்தை கூர்மைப்படுத்த அதிக சிரத்தை எடுப்பதில்லை. நவீன தமிழ் கதை சொல்லலில் வாசகனுக்குச் சாதாரணமாகிப்போய்விட்ட ஆசிரியரின் நுட்பமான கதை நகர்த்தல்கள் தாட்சாயணியின் கதைகளில் அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

அனைத்து கதைகளிலும் அந்த மண்ணில் வாழ்ந்து பார்த்த அனுபவத்தின் தெறிப்பு இருக்கிறது; குறைவுபட்ட அனுபவத்தை இட்டுக்கட்ட வார்த்தை ஜோடனைகளின், தத்துவ முலாம்களின் துணையை நாடாதவை இவை. இந்த அவரது படைப்பு அம்சமே அவரது கதைகளின் உருவத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது.
கதைகளைப்பற்றி'ஒரு மரணமும் சில மனிதர்களும்' கதையில் கடைசி 9 பாராக்களை

"அம்மம்மா கேவிக்கொண்டிருந்தா.
படலையடியில் பறை பலமாய் முழங்கத் தொடங்கிற்று.
அம்மம்மாவுடையதும் ராசாத்தியுடையதும் குரல்களும் உச்சமாய் ஓங்கித் தளும்பின."
என்று 3 பாராக்களில் முடித்திருந்தால், கதை சொல்ல வரும் செய்தி ஒரு மலரிதழ் விரிவதுபோல் நுட்பமாய் வாசகனில் அந்த சூழலின் கொடூரம் பற்றிய ஒரு தத்தளிப்பை உருவாக்கியிருக்கும். ஆனால், அந்த 9 பாராக்கள் கதையை ஒரு செய்தியைப் போல முடித்துவிடுகின்றன.
ஏற்பட்டிருக்கவேண்டிய தாக்கத்தை "ஓ, இப்படித்தான் அங்கு துக்கத்தை வெளிப்படுத்த முடிகிறதா.." என்ற ஒற்றைப்படையான எண்ணமாக அந்த 9 பாராக்கள் சுருக்கிவிடுகின்றன.

'சோதனைகள்', 'வெடிக்காய்', 'மழை', 'தீ விளிம்பு ' ஆகியவற்றில் போர்க்களத்தில் 'பங்கேற்காதவர்களுக்கு' இடமில்லை என்கிற நடைமுறை யதார்த்தம் நிர்தாட்சண்யமாய் உணர்த்தப்படுகிறது.

'சோதனைகள்' : ஒரு பார்வையாளராக தினமும் சாவடிகளை கடந்துகொண்டிருந்தவள், மனதை உலுக்கும் அவமானத்திற்கு உள்ளான பிறகு, அவள் இந்த போர்ச்சூழலால் மனரீதியாக பாதிப்படைந்தவளாகிறாள்.
அவளுக்கு ஆதரவாய் வரும் புதியவள் "சனியன் பிடிச்சவள், என்ன வேலை செய்துபோட்டாள்" என்றவள் "ஓம், நீ படு பிள்ளை" என்பதோடு நிறுத்திக்கொள்கிறாள். இது போன்ற துக்கத்திற்கு, வாழ்க்கை தந்துதவும் நிவாரணமாக அந்த பஸ் கூட்டத்திலிருந்து முகம் தெரியாத ஒருத்தி முன்வருகிறாள். இக்கதையின் வாசகன் செய்ய முடியாத காரியத்தை,அவனது சார்பில் அவள் செய்கிறாள்.

'மழை' : போர்ச்சூழலில் வாழ்க்கை என்பது பொதுவாக தொடரும் துரதிர்ஷடம் என்றால், பெண்ணுக்கு உடல்மீதான பலாத்காரம் என்கிற கூடின ஆபத்தையும் கொண்டிருக்கிறது. அவள் விரும்பும் தூவான மழை, அவள் மீதான வன்முறைக்கு காரணமாயிருக்கும் மேகம் என்பவற்றை அமைதி - அமைதி காக்கும் படை - அப்படை கட்டவிழ்த்துவிடும் வன்முறை என்று வாசிப்பு செய்ய முடியும்.
'தீ விளிம்பு ' ஒரு சிறுவனின் பார்வையில் மனிதர்கள் மர்மமான முறையில் காணமற்போவதை சொல்லும் கதை. கதையின் கடைசி வரி, பெற்றோரிடம் சொல்லமுடியாத காதலனின் மறைவு என்கிற தளத்தோடு நின்றுவிடுகிறது. போர்ச்சூழல் அற்ற சூழலில்கூட காதலனின் மறைவைப்பற்றி பெற்றோரிடம் பகிர இயலாதுதான் என்பது இதற்கான காரணமாய் இருக்கலாம்.
'ரங்கனும் ரஞ்சித் பெரேரோவும்' : கதை சொல்லலில் அதிக செயற்கைத்தனத்தைக் கொண்டிருக்கும் கதை இது. இது நிஜ சம்பவமாகவே இருக்கும் பட்சத்தில் 'வெளியில் வாழ்தலி ' ல் சாதித்த வெற்றி, 'மழை' யில் சாதித்த தனித்தன்மை, இதில் தட்டையாகவே வெளிப்பட்டிருக்கிறது.
'துளிர்ப்பு ' : கடைசிப் பாராவில் கருத்தை சொல்வதை எடுத்துவிட்டு, அக்கருத்தை உணர்த்த முயன்றிருக்கலாம்.
மேலே உள்ள கதைகள் அனைத்தும் "ஏன் இந்த துயரம்?" என்கிற கேள்வியை எழுப்புகின்றன. இதற்கான பதிலை இக்கதைகளிலிருந்தோ வாசகனின் அனுபவத்திலிருந்தோ பெறமுடியாது. பதில் அரசியல் தளத்தில் உள்ளது.
ஆனால், 'வெடிக்காய்' , 'வெளியில் வாழ்தல்' இரண்டும் போர்ச்சூழலை ஒரு பின்னணியாக வைத்துக்கொண்டு, மனித செயல்பாடுகளை, அவற்றின் விளைவுகளை சுட்டுகின்றன.

'வெடிக்காய்' இன்று தொலைந்துபோன, இயற்கையுடன் இயைந்த ஒரு காலத்திய சிறுவர்களின் வாழ்வின் சித்திரத்தை, சூழல்பற்றிய சிறு சிறு தீற்றல்களுடன் எழுப்புகிறது. இன்றைய போராளி ஒருவனை, வயதுக்கு மீறிய பேச்சுடன் சிறுவனாய் அறிமுகப்படுத்துகிறது. தொட்டாற்சிணுங்கி வெளிநாட்டிற்கு சென்றுவிடுவதாகவும், போராளி எதிர்ப்புணர்வுடன் போராடுவதாகவும், பார்வையாளானான 'இவன்', தன் இளமைக்காலச் சுவடுகளைத் தேடிப் போனபோது, தனது நிகழ்காலப்பாதை முற்றிலும் தடம் மாறிப்போவதாகவும் ஒரு வாசிப்பு செய்யும்போது, இக்கதை போர்ச்சூழலுக்குள்ளும் ஒரு சமூகவியல் விவாதத்தைகிளப்ப முடியும். வன்மம் கொள்ள காத்திருக்கும் நெருஞ்சி, பெயர்தெரியாத காட்டுச்செடி, மூக்குத்தி பூண்டுகள் என்று இயற்கையும் பலவிதமாய் சுட்டப்படுகிறது.
'வெளியில் வாழ்தல் ' : போர்ச்சூழலில் தந்தையையும் தாயையும் வெவ்வேறு காரணங்களால் பிரிந்துவிட்ட ஒரு சிறுவன் - தனது நிலைப்பற்றி, தனது சுற்றுப்புற மனிதர்கள் பற்றி, சக விளையாட்டுக் கூட்டாளிகள் பற்றி அவனது வயதின் புரிதல்கள் வழி, கதை நகர்த்தப்பட்டு, அம்மா-அப்பாவின் பிரிவுக்கான காரணங்கள் பின்னணியில் வைக்கப்பட்டு, அவனது ஏக்கம் கலந்த நம்பிக்கையை முடிவாய் சொல்வதன்வழி, வாசகனில் மிகுந்த பாதிப்பைச் செலுத்தும் கதை இது. இது ஏன் ஒரு நல்ல கதை ? ஒரு சிறுவனின் அனுபவ உலகம் அவனது வயதின் புரிதல்சார்ந்து இங்கே பதிவாகியிருக்கிறது. அந்த அனுபவ உலகிற்குள் நாம் பிரவேசிக்க பிரவேசிக்க, அச்சிறுவன் உணராத இழப்புகள் சார்ந்த சோகம் நம்மீது படர்கிறது. கதையின் தொடக்கம், சிக்கல், தீர்வு போன்ற மரபான விஷயங்கள் இந்த அனுபவ விவரிப்பினூடே சிறுவனின் கிரகிக்கக்கூடிய - கிரகிக்கமுடியாத எல்லையில் மெலிதாக படரவிடப்பட்டு, பிசிறுதட்டாத வகையில் கதை நகர்த்தப்படுகிறது.
ஈழத்து பேச்சுமொழியை அதன் ஏற்ற இறக்கங்களுடன் கேட்டு பழகியவர்களுக்கு (எனக்கு பிரசாந்தன்மூலம்) , இக்கதையின் மொழி ஒரு சங்கீதம். (பிரசாந்தன் இக்கதையைச் சொல்வதாக கற்பனையை ஓடவிட்டு, இக்கதையைப் படித்தபொழுது, சிறுவனது உலகிற்குள் முழுவதுமாக பிரவேசித்துவிட்டதான அனுபவம் ஏற்பட்டது.)

'விடுபடலி 'ல் வௌவால்கள் இயல்பான தொங்குதலினின்றும் கலைக்கப்பட்டுச் சிதறும் தருணமும் இவள் தனக்குப்பிடித்த இளையராஜா பாடல்கள் கேட்க கிடைக்கும், காலதாமதமாகி வரும், ஒரு குறிப்பிட்ட பஸ்ஸ¤க்கு காத்திருக்கும் தருணமும் ஒன்றாக இருப்பதாக அமைவது, இவளுக்கும் கணவனுக்கும் இடையில் இயல்பான மிதப்பில் இருக்கும் தாம்பத்யம் கலைய ஆரம்பிக்கும் புள்ளியாக சுட்டபடலாம்.
'பெண்' : ஆபிஸ் போகும் பெண் கணவனிடத்தில் தோழிகளிடத்தில் சக பயணிகளிடத்தில் காணமுடியாத அபிமானத்தை கண்டு வெம்பி, தனிமையை தீவிரமாக உணர்ந்து, பிறகு அது பொதுவான நிலை என்பதை உணர்ந்து சுயபச்சாதாபத்திலிருந்து விலகும் புள்ளியை நோக்கி நகர்கிறாள்.
பொதுவாக, பிற நாட்டு தமிழர்களிடம் காணக்கிடைக்காத ஒரு சாத்வீக அன்பை, முன்பின் அறிமுகமில்லாத மனித உறவுகளில் காணமுடிகிறது ( எகா- "ஓமப்பு..', 'போகாதையெடாப்பா'', 'நாதன் அண்ணை' போன்ற இதமான சக சுவாசங்கள்) 'இதுகளோடை சரிக்குச் சமனா வாதாட எனக்குக்கிட்ட வயதில்லை, ஒரு அண்ணனையோ, அக்காவையோ பெறாமல் போனீங்களேயம்மா..' என்பது போன்று, ஒரு ஈழத்து மகள் மட்டுமே தன் தாயிடம் பேசக்கூடும்.

தாட்சாயினியின் படைப்புலகம்

தொகுப்பின் பெரும்பாலான கதைகள் கேள்விப்பட்ட , கேள்விப்படாத போர்ச்சூழலின் துன்பத்தைச் சொல்லுகின்றன. போர்ச்சூழலின் ஊடாகக்கூட, மனிதமனத்தின் உள் நிகழும் போர்க்களம் பற்றி பேசும் கதைகள் கிடையாது. போர்ச்சூழலின் துன்பத்தைச் சொல்லும் ஒரு கட்டுரையோ ஒரு விவரணப்படமோ(documentary) வாசகனின் / பார்வை யாளனின் மனிதாபிமான உணர்வு, பொது பிரக்ஞை ஆகியவற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், எந்த சூழலிலும் அங்கு உள்ள சிறுகதைகளைக் காண அதற்கான பார்வைக்கோணம் தேவை.

துயரத்தை பற்றிய பதிவு சிறுகதையாகுமா ?துயரம் பற்றிய தொடர் விவரிப்புகள் வாசகனில் ஒரு கட்டத்திற்குமேல், மரத்துபோகும் உணர்வையே(anesthetised) ஏற்படுத்தும். இத்துயரம் பற்றி ஏதும் செய்யமுடியாத கையறு நிலையில், வாசகனின் எதிர்வினை மௌனம்தான். ஆனால், சிறுகதையின் நோக்கம் வாசகனில் மௌனத்தைத் தோற்றுவிப்பதல்ல.


சிறுகதை என்பது வாழ்வினுடனான மனித மனம் கொள்ளும் உராய்வினால் ஏற்படும் ஒரு கீற்று வெளிச்சம் பற்றிய பதிவு. அந்த கீற்று வெளிச்சத்தில் தெரியும் ஒரு புதிய நிஜம்தான் சிறுகதையை சாத்தியமாக்குகிறது. வாழ்க்கையும் சரி, மனித மனமும் சரி, அனுபவத்தால், வாழ்விடத்தால் , காலத்தால் மாறுபட்டிருக்கின்றன. இந்த இரண்டின் வெவ்வேறு விகிதாச்சார அளவிலான உராய்வு, இதனுடன் கதையைச் சொல்பவனின் ஆளுமையும் சேரும்போது, கதையின் செய்தியிலும் உருவத்திலும் எண்ணிறந்த சாத்தியப்பாடுகள் உருவாகின்றன.

இந்த ஒரு கீற்று வெளிச்சத்தின் வெளிப்பாடுதான் நிஜம். கதை சொல்லல் என்பது (அடிப்படையில்) ஒரு பாவனைதான். [ஆனால், சிறுகதை எழுத ஆசைப்படும் பலர், இந்த பாவனைதான் எல்லாமும் என்று நம்புகின்றனர்; கதையை நன்கு வளைத்து, வளர்த்து, முடிவில் ஒரு நீதியை சொருகிவிட்டால் , "ஆச்சு, ஒரு சிறுகதை ரெடி! " ]

போர்ச்சூழலின் சிறுகதைகளாக 'வெடிக்காய்', 'வெளியில் வாழ்தல்' ஆகியவற்றை குறிப்பிடலாம். போர்ச்சூழல் தவிர்த்த கதைகளில் 'விடுபடல்' நல்ல கதை. பிற கதைகள் ஒரு வரி கருத்தில் உயிரைப் பிடித்துக்கொண்டிருப்பவை.

தமிழ் புனைகதை வரலாற்றில் கு.அழகிரிசாமி, பிரபஞ்சன் பெற்ற இடத்தை நோக்கி தாட்சாயணி நகரக்கூடும் என்பதைஇக்கதைகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment