Tuesday, February 7, 2012

வெளியில் வாழ்தல்



    “நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்...” வேணு கத்திக் கொண்டு வாறான்.
    நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும் நிறையச் சேர்க்கிறனான் தானை. இண்டைக்கு எனக்குக் குரும்பட்டி கிடைக்கேல்லை என்டவுடனே என்னைப் பழிக்கிறதே...
    “ம்... நான் தரமாட்டன்...” வேணு எனக்குப் பழிப்புக் காட்டுறான். எனக்கு வாய் கோணி ஒரு மாதிரிப் போச்சு. தலையைக் கவிட்டுக் கொண்டு நிக்கிறன். நெடுக உப்பிடித்தான். எப்பவும் நான்தான் தலையைக் கோணிக் கொண்டு நிக்க வேண்டி வாற... இஞ்சே உங்களுக்கு அலுப்பாக் கிடக்கே... இஞ்சே ...இஞ்சே நீங்களும் கேக்க மாட்டியளே. அப்ப நான் ஆருக்குச் சொல்லுறது எல்லாத்தையும். ஆ... நிக்கீங்கள் என்ன...? நீங்கள் நல்ல மனிசர்... எதிலை விட்டனான். ஓ... வேணுவைப் பற்றி. நேற்று நான்தான் கூடக் குரும்பட்டி சேர்த்த...என்ரை பை நிறையக் குரும்பட்டியைக் கண்டவுடனை அவனுக்கு எரிச்சல் வந்திருக்கோணும். ஒண்டு, ரொண்டாத் தான் பொறுக்கி வைச்சிருந்த குரும்பட்டிகளை அவன் விசுக்கியெறிஞ்சான்.
    “உதெல்லாத்தையும் பொறுக்கினா அம்மா எனக்கு அடிதான் போடுவா...” எண்டு அம்மா எண்டதை அழுத்தி, அழுத்திச் சொல்லுவான். உங்களுக்குத் தெரியுமோ? நீங்கள் பெரிய படிப்புப் படிச்சிருப்பீங்கள். உங்களுக்கெல்லாம் விளங்கும் தானை. எனக்கு அம்மா இல்லையாம். தனக்கு அம்மா இருக்காம். அதுக்குத்தான் அவன் அப்பிடி அம்மா எண்டதை அமத்திச் சொல்லுற. ஆனா என்ரை அம்மாவும் ஒரு நாளைக்கு வரத்தானை போறா. இல்லாட்டி அவன் சொல்லுற மாதிரி வராமலே போடுவவோ?ம்....ஹ_ம்... இப்பவே எனக்கு அம்மா இல்லை யெண்டவுடனை அழுகை அழுகையா வரூது. பிறகு அம்மா வராமலே போனால்... இல்லை அம்மா வருவா. அப்பாவையும் கூட்டிக்கொண்டு. சித்தி சொல்லுற மாதிரி அவனுக்கு எரிச்சல். என்ரை அம்மா நல்ல வடிவெண்டு. அவனிண்டை அம்மாக்குத் தலையெல்லாம் நரைச்சு, முகமெல்லாம் சுருங்கிப் போய் எங்கட அம்மம்மா மாதிரி இருப்பா. என்ரை அம்மா எவ்வளவு வடிவு. அவனுக்கு அதுதான் எரிச்சல் எண்டு எனக்கு எப்பிடித் தெரியுமெண்டால் ... ஒருநாள் அம்மா போனாப்பிறகு... அம்மாண்ட கல்யாண படத்தை ஆசைஆசையாப் பாத்துக்கொண்டிருந்தன் நான்.அப்ப வந்து சேர்ந்தான் உந்த வாசுப்பொடியன்.எங்கை பாப்பம்...எங்கை பாப்பம்...எண்டு எனக்குப் பக்கத்திலை இடிச்சுக் கொண்டு வந்திருந்து படங்களைப் பாத்தான்.அவ்வளவு பத்திரமா நான் வச்சுப் பாக்கிற அல்பங்கள்.நான் தற்செயலாப் பாத்தா,அவன் அல்பத்திண்டை கண்ணாடிப் பேப்பரை இழுத்துக் கிழிச்சுப் போட்டான்.எனக்கு வடிவாத் தெரியும்.அவன் அதை வேணுமெண்டுதான்  செய்தவன் .ஆனா,அது தற்செயலா கிழிபட்டதெண்டு அவன் மாய்மாலம் காட்டினான்.என்ரை அம்மாவையே அவன் அடிச்சது மாதிரி எனக்கு ஆத்திரம்,ஆத்திரமா வந்துது."குரங்கா,குண்டா,பண்டியா..." எண்டு வாயிலை வந்தபடி அவனைப் பேசிப்போட்டன்.
           நான் ஒருநாளும் அப்பிடிக் கதைக்கிறதில்லை.அண்டைக்கு எனக்குப் பொல்லாத கோபம்தான் வந்துது.அதுக்குப் பிறகு நான் அம்மாண்டை அல்பத்தை ஒருத்தருக்கும் காட்டுறேல்லை. உள்ளுக்கு அலுமாரிக்கை வைச்சுப் பூட்டிப் போட்டான். அதுக்குப் பிறகும் அவன் நெடுகக் குத்திக் குத்திக் கதைப்பான்.
“உன்ரை அம்மா எப்படியோ இல்லைத்தானை. எனக்கு அம்மா இருக்கு” எண்ணுவான்.
அவன் அப்படிச் சொல்லச் சொல்ல எனக்கு அழுகை அழுகையாக வரும். என்ரை அம்மா ஏன் என்னை விட்டிட்டுப் போனவ. அம்மாக்கு என்னிலை விருப்பம் இல்லையோ? ஆனா சித்தி என்னை அம்மாக்கும்   மேலைதான் பாத்தா. அம்மா இருக்கேக்குள்ளையே எனக்குச் சித்தியிலைதானாம் கூட ஆசையாம். அவ இப்ப பெரிய கம்பஸ் படிப்புப் படிக்கிறாவாம். நாளெல்லாம் யாழ்ப்பாணத்திலைதான். எங்கையோ அறை பாத்து வைச்சிருக்கிறாவாம். சனி ஞாயிறு மட்டும்தான் இஞ்சை வாறவ. எனக்கு அந்த அறையை இடிச்சு நொறுக்க வேணும் போலை கிடக்கும். கண்டறியாத அறை. இந்த பெரிய வீடு கிடக்க அவ ஏன் அங்கை ஒரு அறைக்கை போய்க் கிடக்கோணும்… அந்த அறை இல்லாட்டி அவ இஞ்சை வரத்தானை வேணும்.
“என்ன… என்ன சொல்லுறீங்கள்… அந்த அறை இல்லாட்டி அவ வேறை அறை பாப்பாவோ? அப்பிடியும் இருக்கோ விசயம். அது எனக்கென்னெண்டு தெரியும்.நான் சின்னன் தானை. உதெல்லாம் அறிய நான் பெரிய படிப்புப் படிக்க வேண்டி வருமோ? அதுக்குத்தான் சொல்லுறது அம்மா என்டால் அம்மாதான். அம்மா உப்பிடியெல்லாம் செய்வாவோ… என்னை விட்டிட்டுப் போவாவோ…? ம்;… அதென்னெண்டு சொல்லிற. இப்ப என்னை விட்டிட்டு ஒரேயடியாயே போனவ என்னோடையே எப்பவும் இருப்பாவெண்டு என்னண்டு நம்புற. என்னைவிட அப்பா மேல் எண்டுதானை அவ அப்பாவைத் தேடிப் போனவ. என்னிலைஅக்கறை இருந்திருந்தா என்னையும் கூட்டிக் கொண்டல்லோ போயிருக்கோணும. ஆனா இதைத் தாத்தா ஒத்துக் கொள்ள மாட்டார். என்னிலை கூட அக்கறை இருந்தபடியாத்தானாம் அம்மா என்னைப் பாதுகாப்பான இடத்திலை விட்டிட்டுப் போனவவாம். அப்பிடிச் சொல்லேக்கை தாத்தாண்டை கண்ணெல்லாந் தண்ணியாப் போம். அம்மா அப்பாவைப் பற்றி என்ன கதைச்சாலும் இப்படித்தான்.
என்ன கேக்கிறியள் அம்மா எங்கை போனவ எண்டோ…? அது சொல்லுறதெண்டா அது பெரிய கதையெல்லோ.
    அது எவ்வளவு… எவ்வளவு காலத்துக்கு முந்தின கதை. அப்பாவை எனக்குச் சரியாத் தெரியாது. படத்திலை மட்டும்தான் பாத்த ஞாபகம். அப்ப எப்பவோ நாங்கள் நெல்லியடிலை இருக்கிறதுக்கு முந்தி நடந்த சண்டையளுக்கை ஷெல் துண்டு பட்டு அப்பா காயமாப் போனாராம். இரவிரவா ஷெல் வந்து விழ, விழ நான் அடிச்சுக் குழறிக் கத்தினனாம். இப்பவும் சித்தி சொல்லுவா. எனக்கெண்டா ஒண்டும் ஞாபகமில்லை. அப்ப காயப்பட்டாக்களை ஏத்தேக்கை அப்பாவையும் அவங்கள் வன்னிக்கு ஏத்திக் கொண்டு போட்டாங்களாம். தாத்தாவும, அம்மம்மாவும, அம்மா, சித்தியெல்லாம் என்னையும் கொண்டு ஒரு மாதிரி நெல்லியடிக்குப் போய்ச் சேர்ந்திட்டினையாம். பேந்தென்ன. நான் அப்பா, அப்பா எண்டு அழுதது தாங்காமல் அம்மா,  அப்பாவைத் தேடி வன்னிக்குப் போக வெளிக்கிட்டாவாம். ஒரு மாமாவோடை அவ என்னட்டை வந்து போட்டு வாறன் எண்டு சொன்னது மட்டும் எனக்கு ஞாபகம் கிடக்கு.
    நான் போகவிடாமல் அனுங்க, அனுங்க என்னைத் துக்கிக் கொஞ்சிப் போட்டு சித்தியிட்டை குடுத்து, “நான் பிள்ளைக்கு, அப்பாவைக் கூட்டி வாறன்…” எண்டு ஆசையாசையாச் சொல்லிப் போட்டுப் போனவ.
    அப்படிச் சொன்னவ ஏன் இன்னும் வரேல்லை. அவ போய் இப்ப எவ்வளவு காலம். நாங்கள் நெல்லியடிலை இருக்கேக்கை போனவ. நாங்கள் இப்ப நுணாவிலுக்குத் திரும்பவும் வந்திட்டம். நான் பள்ளிக்கூடம் போகவும்  தொடங்கீற்றன். அம்மா வந்தவுடனை நான் எல்லாம் எழுதிக் காட்டுவன் அவவுக்கு. ஆனா இனிமேல் மட்டும், நான் அம்மாவை ஓரிடமும் போக விடமாட்டான். பக்கத்து வீட்டிலை வாசு செய்யிறான் தானை.   அம்மாக்காரி எங்கை போக வெளிக்கிட்டாலும், அழுது, அடம்பிடிச்சுக் கொண்டு, கூட வெளிக்கிட்டிடுவான். அப்பிடிப் போகேக்கை எங்கட வீட்டுப் படலையைத் தாண்டேக்கை ஒருக்கா எங்கட வீட்டுப்பக்கம் திரும்பிப் பாத்து பெருமையாத் தலையைச் சிலிப்பிக் கொண்டுதான் போவான். அப்ப நான் ஜன்னலுக்காலை பாத்துக் கொண்டு, நிக்கிறனான். அப்பிடி அவன் தலை சிலுப்பத் தொடங்கின பிறகு, அவன் வீட்டிலை அழுற சத்தம் கேட்டால் அதுக்குப்பிறகு நான் ஜன்னல் கரைக்குப் போறதேயில்லை. அழுற சத்தம் கேட்டால், அவன் பிறகு றோட்டாலை எடுப்புக் காட்டிக்கொண்டு போவான் எண்டு எனக்குத் தெரியும் தானை.
    எனக்கு அப்பா வேணும் போலை இப்ப இருக்கிறதில்லை. ஏனெண்டால் அப்பாமாரைப் பற்றி ஒருத்தரும் எனக்கு வந்து புளுகுறதில்லை. வேணுவுக்கும்கூட அப்பா இல்லை. அதாலை அம்மாவை வைச்சு எடுப்புக் காட்டுற மாதிரி அவனாலை அப்பாவை வைச்சு எடுப்புக் காட்ட ஏலா. பள்ளிக் கூடத்திலை சங்கர்தான் ஒவ்வொரு சாமான், சாமானா, வடிவான கலர்படம் போட்ட கொப்பிகள், பென்சில்,வடிவான வாசமடிக்கிற இறேசர் எல்லாம் காட்டி அப்பா வாங்கித் தந்தவர் எண்டு பெருமையடிப்பான். எனக்கு அதெல்லாம் சித்தி வாங்கித் தந்தவ தானை, அதாலை நான் அதுகளைப் பாத்து ஆசைப்பட மாட்டன். 
    தாத்தா இருக்கிறார். தவண்டு, தவண்டு என்னை முதுகிலை ஏத்தியிழுப்பார். செம்மனச்செல்விப்பாட்டிக்குச் சிவபெருமான் அணை கட்டிக் குடுத்த கதையெல்லாம் சொல்லுவார். பண்டிக்குட்டிகளிண்டை பசியைத் தீக்கிறதுக்கு சிவபெருமான் அம்மாப்பண்டியா வந்து கதையுஞ் சொல்லுவார். அப்ப நான் கேப்பன். நான் அம்மா, அம்மாவெண்டு அழேக்கை, ஏன் சிவபெருமான் அம்மாவா மாறி வரேல்லையெண்டு…
    நான் கேட்டது உண்மையோ இல்லையோ… நீங்களே சொல்லுங்கோ…
    “பிள்ளைக்கு அம்மாவுக்கும் மேலை பாக்கச் சொல்லித் தானை சாமி எங்களை விட்டிருக்கிறார்…” எண்டு சொல்லித் தாத்தா சமாளிச்சுப் போடுவார். ஆனா எனக்குத்தான் ஒத்துக் கொள்ளேலாமல் கிடக்கும்.
    என்ரை அம்மாவை, எவ்வளவு நல்ல அம்மா எனக்கு, அப்பிடி ஒரு அம்மாலைத் தந்திட்டு, கண்ணிலையே காட்டாமல் மறைக்கிறதெண்டால் கடவுளுக்குத் கருணையிருக்கோ இல்லையோ…?
அம்மா,அம்மாவெண்டு நான் எத்தினை தரம் அழுதிருக்கிறன். உந்த வாசுதான் என்னை நெடுகிலும் அழப்பண்ணுறவன். உப்பிடித்தான் ஒருக்கால், அது ஒரு நாவல் பழக்காலம். எங்கட வீட்டு வேலிக்குப் பின் காணிக்கை ஒரு நாவல்மரம் நிண்டுது. நல்ல கறுப்புக் கறுப்புக் குண்டு குண்டா நாவல் பழங்கள் பொத்துப் பொத்தெண்டு விழுந்தது. ஓளவைப்பாட்டிக்கு முருகன் கொப்பை உலுக்கின மாதிரி இஞ்சையும் மரத்துக்கு மேலை முருகன் இருந்து உலுப்புறாரோ எண்டு எட்டிஎட்டிப் பாத்தன். ம்…ஹீம்…ஒருதரும் இல்லை. ஆனாலும் ஆரோ உலுப்பிற மாதிரி பழம் மட்டும் கொட்டுண்டு கொண்டே இருந்தது.
அங்காலி வளவுக்கை வேணு நிக்கிறான். அவனின்டை மாமான்டை வளவு தானாம் அது. வாயுக்கை போட்டு உமிஞ்சு, உமிஞ்சு, நாக்கு கத்தரிப்பூ நிறமாய் மாறிக் கிடக்கு அவனுக்கு. அவன் செரியான கெலி பிடிச்சவன்.எவ்வளவு திண்டாலும் அடங்காது. நான இஞ்சாலை கொட்டுணுற நாவல்பழம் திண்டது அவனுக்குப் பிடிக்கேல்லை. அவங்கட வளவு நாவப்பழம் நான் சாப்பிடக் கூடாதாம்
எனக்கும் ‘கெறு’ பத்திக் கொண்டு வந்தது.
காஞ்சு போன நெருஞ்சி முள்ளுகள் குத்தக்குத்த நான் தேடித் தேடிக் குனிஞ்சு பொறுக்கினதை அவன் கொண்டா எண்டால் என்னாலை குடுக்கேலுமே. காற்சட்டைப் பையெல்லாம் நாவப்பழத்தாலை முட்டி வழியுது. அதுக்கிடைலை வாசு ஒப்பாரி வைக்கத் தொடங்கிற்றான். தன்ரை நாவப்பழத்தை நான் களவெடுத்துப் போட்டனெண்டு. உடனை சித்தி ஓடி வந்தா.
“குடன்ரா உனக்கென்னத்துக்கு, ஆற்றையேன் நாவல்பழம்” எண்டு சொல்லி பொக்கற்றுக்ககை கை வைச்சு எடுத்து வேலிக்கு மேலாலை எறிஞ்சா.
“நீ வாடா உனக்கு நான் கன்டோஸ் வாங்கித் தாறன்…” அந்தப் பக்கம் கேக்கத் தக்கபடி கத்திச் சொன்னா.
“அம்மா எனக்கும் கன்டோஸ்…” வாசு பேந்தும் கத்தத் தொடங்கினான். ஆக்கினை தாளாமப் போக   அவனின்டை அம்மா எங்களைப் பாத்துத் திட்டினா.
“அவள் பெத்துப் போட்டிட்டு ஓடிப்போட்டாள். இது எங்களையெல்லோ ஆக்கினைப்படுத்துது…”
எனக்கெண்டா ஒண்டுமே விளங்கேல்லை. ஆனா சித்திக்கு ஒரேயடியாக் கோபம் வந்திட்டுது.
“என்ன சொன்னீங்கள் அக்காவைப் பற்றி…” சித்தி இப்பிடிக் கீச்சிட்டுக் கத்தினதை நான் ஒருக்காலும்  பாக்கேல்லை.
“என்ன சொல்லோணும், சமயம் பாத்து அந்த சத்திய தாசோடை அவள் ஓடப்பாத்தாள். கடவுளுக்குப் பொறுக்குமே. அதுதான் கடல் ரெண்டு பேரையும் அள்ளிக் கொண்டு போட்டுது…”
அதுக்குப் பிறகு சித்தியும் அவவுமாய் மாறிமாறி வேலிக் கரைலை நிண்டு கத்துப்பட்டீனை. எனக்கு ஒரே பயமாப்  போச்சுது. சித்தியைப் பிடிச்சுப் போவம், போவம் எண்டு இழுத்தன். அதுக்கிடைலே தாத்தாவும், அம்மம்மாவும் வந்து சித்தியை இழுத்துக் கொண்டு வீட்டுக்கை வந்திட்டினை. அண்டு முழுக்க எல்லோரும் ஒரே அழுகைதான். ஏன் எண்டு தான் எனக்குத் தெரியேல்லை.
“தனியப் போகப் பயந்து அவள் சத்தியதாஸைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு போன. அதுக்கு இப்பிடி ஒரு பேர் வந்திட்டுதே. உவள் பாவி அநியாயமாய் எங்கட பிள்ளையை பழி போடுறாளே. அதுகள் அநியாயமாயச் செத்ததுகள் எண்ட இரக்க உணர்ச்சி கூட உதுகளுக்கு இல்லை…” 
தாத்தாவும் என்ன என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். அதுக்குப் பிறகு சித்தி வாசு வீட்டை போறதுமில்லை. வாசுவிண்டை அம்மாவோடை கதைக்கிறதுமில்லை. சித்தி இல்லாத வேளைலை வாசு வந்தால், நான் விளையாடுவன். ஆனா அது எப்பவும் கொளுவலிலைதான் முடியும். ஆனா சித்தி வந்தவுடனை பேசுவா. அவனோடை விளையாடக் கூடாதெண்டு.
ஆனா, எனக்கு அக்கம்பத்திலை ஆர் இருக்கினம் விளையாடுறதுக்கு. அதாலை சித்திக்கு ஒளிச்சு, ஒளிச்சு அவனோடை விளையாடிப் போட்டு கொளுவலெடுக்கிறதுதான். எப்படித்தான் சண்டை பிடிச்சு, சிரிச்சு விளையாடினாலும், உள்ளுக்கை  வெறும் வெளிதான். அது அம்மா வராட்டி என்னென்டு நிரம்பும்…?
ஆனா, சித்தியும், தாத்தாவும் கதைக்கேக்கை எப்பவும் அம்மா, அப்பா வருவீனை எண்டுதான் சொல்லுவீனை.
பாதை திறந்தா வருவீனை, பாதை திறந்தா வருவீனை எண்டு தாத்தா நெடுகலும் சொல்லுவார். நானும்தான் ஏன் இன்னும் பாதை திறக்கேல்லையெண்டு யோசிப்பன்.
ஆனா, பாதை திறந்தாப் பிறகு ஒருதரும் அதைப் பற்றிக் கதைக்கேல்லை. றோட்டெல்லாம் பாத்தால் பெரிய, பெரிய ஆரவாரமாகக் கிடக்கும். ஊரிப்பட்ட வெள்ளை வான்கள். புதுப்புது மினி பஸ்கள். நாங்கள் காணாத நிறைய வாகனங்கள். சாமான்களெல்லாம் போகும். ஒரு நாள் லொறி முட்டக் குட்டிக் குட்டிச் சைக்கிளெல்லாம் போனது. அதிலை ஒண்டு நான் வாங்கினால் நானும் அம்மாவைத் தேடி ஓடிப் போகலாந்தானை  எண்டு நான் யோசிச்சன். அப்ப சித்தி இல்லை. சித்தி வந்த பிறகு அதைச் சொல்லோணும். பாதை திறக்காததாலை தான் இவ்வளவு வாகனமும் அங்காலை நிண்டதோ…? இப்பிடி இன்னும் எத்தினை வாகனம் அங்காலை கியூவிலை நிக்குதோ? அப்ப அதுக்குள்ளை ஒண்டுக்கைதான் என்ரை அம்மா அப்பாவும் வரீனையோ…? நானும் அவையள் வருவீனை, வருவீனையெண்டு எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்தன்.
அம்மாவும் வரேல்லை, அப்பாவும் வரேல்லை.
ஆனால் பக்கத்து வீட்டிலை வாசுவுக்கு, மாமாவும் மாமியும், பிள்ளையளோடை வெளிநாட்டாலை வந்திருந்தீனை. அந்தச் சின்னன்கள் காச், பூச்சென்று இங்கிலீசோடை சேர்த்து டொச்சாம் டொச் அதுவும் கதைக்குங்கள். அதிலை ஒண்டு ரெண்டைப் பொறுக்கி வைச்சுக் கொண்டு, வாசுவும் விசுக்கி யெறிவான். நான் காணாத மாதிரிப் போடுவன். ஆனா, அந்த மாமா மாமி ஒரு நாள் வீட்டையும் வந்தீனம்.
“கலாவை மாதிரியே பிள்ளை. பாவம் கலாவும் இந்த சண்டைக்குள்ளை ஆப்பிட்டுப் போச்சு. மெய்யே மாமி அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமே…”
எல்லாரும் ஒண்டும் பேசாமல் இருந்தீனை.
“இஞ்சேருங்கோவனப்பா, நீங்களே சொல்லுங்கோ…” எண்டா மாமி .மாமா யோசிச்சு யோசிச்சுச் சொன்னார்.
“இந்தியாவிலை ஒரு கலியாணத்துக்குப் போன இடத்தை தான் கண்டனான். ஆளுக்குத் தொண்டைலை ஒப்பிறேசன் செய்யிறதுக்காக அனுப்பினவங்களாம. படக்கூடாத இடத்தை ஷெல்பட்டு இப்ப கதைக்கவும் மாட்டார். தன்னைப் பாத்து ஒருதரும் பரிதாபப்பட வேண்டாமெண்டுதான் கடிதமே போடுறேல்லையாம். கலாவையும், பிள்ளையையும் பற்றிக் கேட்டார். எனக்கென்ன தெரியும். கலாவிண்டை விசயம் இப்பதானை அறிஞ்சன்…”
எனக்கு ஒரே அலுப்பாப் போச்சு. இவையள் எல்லாம் என்ன கதைக்கீனை. உதுவும் ‘டொச்’தானோ? இருக்கும். இருக்கும் எனக்கென்னத்துக்கு உந்தக் கதையள். வாசு தான் வாய் பார்க்கிறவன். வேணுமெண்டால் வந்திருந்து கேக்கட்டுமன். எனக்கென்ன…? இவையள் வரவேணுமெண்டோ நான் காவலிருந்த… இல்லையே எனக்கு அம்மாவும், அப்பாவும் வேணும்.
“இந்த சமாதானம் கொஞ்சம் முந்தி வந்திருந்தா  என்ன…?” அந்த மாமி சொல்லிக் கேக்கு. ஒம், ஒம் இந்தச் சமாதானம் கொஞ்சம் முன்னுக்கு வந்திருந்தா, எங்கட அப்பா காயப்பட்டிருக்கமாட்டார். அம்மாவும் அப்பாவைத் தேடிப் போயிருக்க மாட்டா. நான் அம்மா, அப்பாவோடை சந்தோசமா இருந்திருக்காலாம் என்ன? ஏன் இந்த சமாதானம் முன்னுக்கு வரேல்லை. எங்கட, அம்மா அப்பாவை அனுப்பிப் போட்டு இப்ப மட்டும் வந்திருக்கு.
பறவாயில்லை. இனியாவது அம்மா, அப்பா இஞ்சை வந்து சேர அது உதவி செய்தா நல்லம்தான்.
அங்கை ஒரு நீலவான். அதுக்குப் பின்னாலை வெள்ளை வான். அதுக்குள்ளைதான் என்ரை அம்மா, அப்பா வரீனையோ…? இல்லை… இல்லை நீலவானுக்கை பிக்குமார். வெள்ளை வானுக்கை தலை நரைச்ச சிங்களப் பொம்பிளைகள். எல்லாரும் யாழ்ப்பாணம்  பாக்க வரீனை. ஆனா, என்ரை அம்மாவும் அப்பாவும் மட்டும் ஏன் வரேல்லை…? இஞ்சை நீங்கள் நிக்கிறீங்களே…? ஒருக்கால் பாத்துச் சொல்லுறீங்களே! அங்கை அந்தத் தொங்கலிலை வாற வானுக்கை அம்மா, அப்பா இருக்கீனையோ எண்டு. உங்களுக்கு என்ரை  அம்மா, அப்பாவைத் தெரியாது என்ன? இஞ்சை, இஞ்சை பாருங்கோ. இந்த அல்பத்திலை சிரிச்சபடி நல்ல வடிவா நிக்கிற அம்மாவும், அப்பாவும் வரீனையோ… பாருங்கோ… ஒருக்காப் பாத்துச் சொல்லுங்கோவன் எனக்கு…
                    

                    அவுஸ்திரேலியா விக்டோரியாத் தமிழ் சங்கத்தின் 2002ஆம் ஆண்டு
                     சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றகதை

No comments:

Post a Comment