Sunday, July 15, 2012

இந்துவின் நிழலில் ஆறிய பொழுதுகள்.....






       போனவாரம் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு நான் மறுபடியும் போகநேர்ந்தது.இந்த வருடத்திற்கான தமிழ்த்தின விழா.
வித்யா ரீச்சர் என்னை அழைத்தபோது இப்படித்தான் சொன்னா. "உங்களை   எங்கட பிள்ளையளுக்கு அறிமுகப்படுத்த வேணும்..." என.
       எங்கள் வீட்டிலிருந்து இந்துக்கல்லூரி அரை கிலோமீட்டர் கூட இருக்காது.பாடசாலை மணி அடிக்கும் சத்தம் வீடுவரை கேட்கும்.
வீட்டிலிருந்து எட்டு பத்திற்கு வெளிக்கிடுதல் என்பது எப்போதும் பிசகிப் போனதில்லை.இப்போதெல்லாம் எட்டுமணிக்கே முதல் மணி
அடித்து விடுகிறது.பாடஇடைவெளிகளைக் குறிப்பதற்கு மணி ஒலிக்காமல் இசை முழங்குகிறது.காலைப் பிரார்த்தனையும் முன்பு போலல்லாமல் 
விசேட தினங்கள் தவிர்த்து ஒலிபெருக்கியின் துணையோடு வகுப்பறைகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது.
       இந்துக்கல்லூரிக்கும் ,எனக்கும் இரண்டு விதத்தில் பந்தம் இருந்தது.ஒன்று பதினெட்டுப் பத்தொன்பது வயதுவரை தொடர்ந்த மாணவப்பருவத்துப் பந்தம்.மற்றது,பல்கலைக்கழகம் முடித்து வேலைக்குக் காத்திருந்த காலத்தில்,பகுதிநேர ஆங்கில ஆசிரியராக ஒரு வருடம் அங்கே கற்பித்த ஆசிரியப் பந்தம்.நான்அங்கே படித்த கடனில் நூற்றிலொரு பங்கையேனும் அப்போது கற்பித்துத் தீர்த்தேனா...? அது எனக்குத் தெரியவில்லை.ஆனால்,அந்தக் காலங்களில்,நான் கல்வி கற்ற ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு என்னால்கற்பிக்க முடிந்தது என்பதே எனக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியை ஊட்டிய விடயம் தான்.உயர்தர வகுப்பில் வகுப்பாசிரியராயிருந்த  சபாரட்ணம் மாஸ்டர் (தற்போது இறந்து விட்டார்), .கே சேர் (.கதிர்காமநாதன்,தற்போது பிரதிக் கல்விப்பணிப்பாளராக உள்ளார்)போன்றவர்களின் பிள்ளைகள் என் வகுப்புகளில் இருந்தனர்.வித்தியாசமான ஆசிரிய அனுபவத்தோடு நான் எனது மனதைப்  புதுப்பித்துக் கொண்டேன்.
     தமிழ்த்தின விழாவுக்கு வருவதற்கு முன்னர் கல்லூரியின் உயர்தர மாணவர் மன்றம் வெளியிட்ட 'அறிவியல் ஊற்று'சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வுக்கு அழைத்திருந்தார்கள். 2009 இல் நான் அங்கு போனபோது பாலசண்முகநாதன் சேர் உம், சியாமா ரீச்சரும் அந்நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தார்கள். இருவரும் உயர்தரத்தில் எங்களுக்குக் கற்பித்தவர்கள்.அப்போது அந்நிகழ்வை நடத்திய உயர்தரமாணவர்கள், 
ஆறாம், ஏழாம் ஆண்டுகளில் என்னிடம் ஆங்கிலம் படித்தவர்கள்.
       "எங்களை மறந்திட்டீங்களோ ரீச்சர் ..." என்றபடியே நிகழ்வு முடிந்ததும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.
       அந்த நிகழ்வில் 'அறிவியல் ஊற்று ' சஞ்சிகையைப் பார்த்தபோது முதல்முதலாக தொண்ணூற்று நான்கில் நாங்கள் அறிவியல் ஊற்றை வெளியிட்ட ஞாபகங்கள் மனதில் நிழலாடின.அதனைத் தொடர்ந்து எமது அடுத்த அணியும்,அந்த இதழைத் தொடர்ந்து வெளியிட்டது.அதற்குப் பிறகு நாங்களும் வெளியேறி விட்டோம்.தொடர்ந்த நாட்டுப் பிரச்சினைகள்,இடப்பெயர்வுகளைத் தொடர்ந்து அந்த சஞ்சிகை வந்ததா எனத் தெரியவில்லை.கல்லூரி அதிபர் திரு.கைலாயபிள்ளை உரை நிகழ்த்தியபோது இந்த இதழ் இரண்டாவது இதழ் எனவும்,ஏற்கனவே தொண்ணூற்று ஒன்பதில் முதல் இதழ் வெளியாகி இருந்ததாகவும் சொன்னார்.
       எனக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கக்கூடும் என்பதை தொண்ணூற்று நாலின் நண்பர்கள் சரியாக உணர்ந்துகொள்ளக்கூடும். நல்லவேளையாக நான் அந்த இடத்தில் இருந்தேன் என நினைத்துக் கொண்டேன்.தொண்ணூற்று ஒன்பதில் ஏற்கனவே ஒரு இதழ் வெளியாகியிருக்கின்றது என்றால்,அது மூன்றாவது இதழாக இருக்க வேண்டும்.அப்படியானால் இது நான்காவது இதழ்.இப்படித்தான் நான் தீர்மானித்தேன்.அதிபர் புதியவர் என்பதாலும்,இடையில்
இரண்டாயிரத்தின் இடப்பெயர்வோடு ஆவணங்கள் அழிந்ததும் இப்படியான சில விடயங்கள் மறக்கப்பட்டிருந்ததற்கானகாரணங்கள் ஆகவிருக்கலாம்.ஆனால் எங்கள் மனதோடு குடியிருக்கும் 'அந்த அறிவியல் ஊற்றி'ன்  ஆரம்பகாலம்எங்களால் மறக்கக் கூடியதா...?
       எனதுரையிலே,எங்களுடைய முதல் இரு அறிவியல் ஊற்றுக்களைப் பற்றிக் கூறினேன். நல்ல வேலையாக தொண்ணூற்று ஒன்பதின் அறிவியல் ஊற்றைப் பற்றி அதிபர் அறிந்திருந்தார்.இல்லாவிட்டால் இது மூன்றாவது இதழ்என்பதோடு  விடயம் முடிந்திருக்கும்.    
        அதிபர் என்னோடு பேசியபோது அந்த ஆரம்ப நூல்களைப் பற்றி விசாரித்தார்.என்னுடைய கவிதைகளையும்,கட்டுரையையும் கூடவே பள்ளிஞாபகங்களையும் கொண்ட அந்த நூல்களை 2000  இடப்பெயர்விலும் 'காவிச்சென்று' பத்திரப்படுத்தி வைத்திருப்பதாய்ச் சொன்னேன்.கல்லூரி ஆவணப்படுத்தலுக்காக அந்நூல்களைத் தரமுடியுமா எனக் கேட்டார்.அவ்வளவு காலம் பத்திரமாய் வைத்திருந்த அந்த இரண்டு நூல்களையும் பின்னர் 'இந்துவுக்கெனக்' கொடுத்தனுப்பினேன்.இனியும் அவ்வாறான ஒரு தவறான ஆவணப்படுத்தல் நிகழ்ந்துவிடக் கூடாதென்று.
       எல்லோரும் சிதறிப் போனோம்.ஆனால்,எங்கள் எல்லோரையும் இணைத்து வைத்த இந்து அன்னையைக் காண்கின்றபோது அந்த நினைவுகள் மனதில் தளிர்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.இப்போதும்,வீதியால் போகின்ற போது,ஒரு கோவிலைக் கடக்கின்றபோது மனம் திரும்பி வணங்குவது போல,இந்துவைக் கடக்கின்றபோதும் பார்வை திரும்பி உள்வணங்குவதை மறந்திடவில்லை.
       உறங்கும் வேளைகளில் ஒரு அழகிய கனவு வரும்.விழித்தெழுந்து வேலைகளும்,கடமைகளுமாய் மனம் பரபரக்கின்றபோது அந்தக் கனவு காணாமல் போகும்.பிறகொரு சமயத்தில் அந்தக் கனவோடு தொடர்புபட்ட ஏதேனும் ஓரிழை ஊசலாடும்போது அந்தக் கனவு முழுவதுமாய் மனதை ஆக்கிரமிக்கும்.அப்படித்தான்,மனதின் ஒரு மூலைக்குள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அடங்கிக்கிடந்த பள்ளிநினைவுகளை வாழ்வின் நெருக்கடிகளும், பிரச்சினைகளும் மூடி மறைத்து எழவிடாமல் செய்தன.எப்போதேனும் விடுமுறையில் வீட்டில் நிற்கிறபோது,பாடசாலையிலிருந்து ஒவ்வொரு பாட இடைவெளியிலும் முழங்கும் இசையொலியும், காலையின் தேவாரப் பண்ணும் கேட்கும்.ஆனால்  அவையெல்லாம் நிச்சயிக்கப்பட்ட சில நிகழ்வுகளாய் இருந்தனவேயன்றி மனதின் அடி நினைவுகளை உலுப்பவில்லை.
தமிழ்த்தின விழாவுக்குப் போன மறுகணமே உள்ளே அடங்கிக் கிடந்த நினைவுகள் பிய்த்துக் கொண்டு வெளிக்கிளம்பின
         மேடையில் குட்டித்தேரினுள் வீற்றிருக்கின்ற அதே சரஸ்வதி...அதே அருணாசலம் மண்டபம்...மண்டபம் சூழவும்,குட்டிக் குட்டித் தலைக் கறுப்புகளுடன் மாணவர்கள்.இதோ...இந்த இடம்...அந்த இடம்...இந்த
வரிசை...அந்த வரிசை...எல்லாவற்றிலுமே,எப்போதோ ஒருநாள் நான் நின்றிருக்கிறேன்.சரஸ்வதி பூசை நேரம் கால் கடுக்க நின்று,சகலகலாவல்லிமாலை முடிந்தவுடன் 'பொத்'தென்று அமர்ந்திருக்கிறோம்.இப்படி எத்தனை தமிழ்த்தின விழாக்கள்...
எத்தனை சரஸ்வதி பூசைகள்...எத்தனை பரிசில் தினங்கள்...எத்தனை கலை நிகழ்வுகள்...மூச்சு விட முடியாமல் திணறிப்போகிறேன்.
      கலை நிகழ்ச்சிகளுக்குக் காத்திருந்த மாணவர்களுக்கு முன் அதிக நேரம் எடுத்து அவர்களின் பொறுமையைச் சோதிக்கத்தோன்றவில்லை எனக்கு.(அதே பொறுமையின் உச்சத்தில் எத்தனை நாட்களை நாமும் கடந்திருப்போம் என்ற அனுபவப் பாடம்தான்)
       எங்கள் நூலகம் பற்றியும்,அங்கே பெற்ற வாசிப்பின் அனுபவம் பற்றியும் சொன்னேன்.எங்களுடைய ஆசிரியர்கள்,நாங்கள் எழுத ஆரம்பித்த வகுப்பறைகள் பற்றி,என்னோடு கூட எழுதிய நண்பிகள் பற்றி,அருட்சோதி மாஸ்டர் வீட்டில்,கொஞ்சக் காலம் நாம் படித்த திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றி ...இப்படி நான் அவர்கள் முன்னால் கொஞ்சம் பேசினேன்.பத்து நிமிடங்களுக்கு மேல் நான் அந்த மாணவர்களுக்கு அலுப்பூட்ட விரும்பவில்லை.ஆனால் எனக்குப் பத்து நிமிடங்கள் அல்ல.அதற்கு மேலாகவும் தேவைப்படுகிறது,எங்கள் பள்ளிக் காலத்தையும்,இந்துவைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள.அதன்விளைவாயே இந்தப் பதிவு.
       அப்போது நாங்கள் ஆரம்பப் பிரிவின் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம்.ஆரம்பப் பிரிவும் அப்போது இந்துக் கல்லூரியுடன் சேர்ந்தே இருந்தது.எமது வகுப்பு கல்லூரி வளாகத்துடன்,மைதானத்தை அண்டியிருந்தது.காலைப் பிரார்த்தனைக் கூடத்திற்குப் பெரிய பள்ளிக்கூட மாணவர்களே செல்வார்கள்.எங்கள் பிரார்த்தனை வகுப்பறைத்தேவாரத்தொடு முடிந்து விடும்.மணி அடித்து உயர்தர வகுப்பு மாணவர்கள் வரிசையில் போவதை ஆவலோடு பார்த்துக் கொண்டு நிற்போம்.யாரேனும் வரிசையை உடைத்துக் கதைத்துக் கொண்டுபோனால் எங்களுக்குக் கோபம் வரும்.(ஆனால்,பிற்பாடு நாங்கள் வரிசையில் போகின்ற காலத்தில்,வரிசையை உடைத்துக் கொண்டு போனது வேறு கதை) வெண்ணிற உடுப்போடு வரிசை கலையாது போவதைப் பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கிறது என எங்களுக்குள் சிலாகித்துக் கொள்வோம்.
               அப்போது விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு முன்னால் தேமா மரங்கள் நின்றன.நிறைய வெள்ளைப் பூக்கள் கொள்ளை,கொள்ளையாய்ப் பூத்துக் கிடக்கும்.சுற்றிவர சஞ்சீவி மரங்களும்,சாம்பல் குருத்து இலைகளோடு சாமரம் வீசி இருக்கின்றன.ஆசிரியர் ஓய்வறைக்கு முன்னால் நீண்டு உயர்ந்திருந்த அசோக மரங்கள்.மைதானத்தை எல்லா வளத்தாலும் சூழ்ந்திருக்கின்ற வகுப்பறைகள்.உடற்பயிற்சிக்காக மைதானத்தில் பயிற்சி நடக்கின்றபோது பாடத்தை விட்டு,விட்டு மைதானத்தை பராக்குப் பார்த்த தினங்கள்.பச்சைப் புற்களின் மீது வெயில் தெறித்த மைதானம்.கருமுகில் சூழ்ந்த காலங்களில்,வானம் பொழிந்து வெள்ளக் காடாகிய மைதானம். மொத்தத்தில் அழகு சுழித்துக் கிடந்த அந்த மைதானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே மனது இலேசாக மாறிவிடும்.
       சின்ன வயதுகளில் உயர்தர விஞ்ஞான ஆய்வுகூடத்தைப் பற்றிய ஒரு ஆவலும்,பதைப்பும் மனதில் ஒட்டிக் கிடந்தது.தடித்து அகன்ற கண்ணாடிப் போத்தல்களுக்குள்,திரவங்களில் மிதக்கும் பாம்புகளோடு,எலும்புக் கூடுகளும் இருக்கும் ஆய்வுகூடத்தை ரகசியமாகவும்,பயமாகவும் எட்டி,எட்டிப் பார்ப்போம்.ஆய்வுகூடப் பொறுப்பாளராயிருந்த வேட்டி உடுத்திய
பாலசிங்கம் ஐயாவால் விரட்டப்பட்டுமிருக்கிறோம்.அதே ஆய்வுகூடத்தில் பின் நாட்களில் எங்கள் வகுப்புக்கள் நடந்ததோடு எங்களது விஞ்ஞான மாணவர் மன்றம் நடத்திய விஞ்ஞானப் புதிர்ப் போட்டியையும் அந்த ஆய்வுகூடத்துக்குள்ளேயே நடத்தி முடித்தோம்.அப்போது பாலசிங்கம் ஐயா எங்களுக்கு நண்பராகியிருந்தார்.பாடங்கள் நடைபெறாத வேளைகளில் மாடி ஜன்னலால் எட்டி,கொத்தாய்த் தொங்கிய தேமாப் பூக்களைப் பறித்துஒவ்வோர் இதழ்களிலும் ஒவ்வொருவர் பெயரை எழுதியதும் இப்போது ஞாபகத்தில் தெறிக்கிறது.
       எட்டாம் ஆண்டில் வெற்றிவேலு  ரீச்சர் எங்கள் ஊர் பற்றிக் கவிதை எழுதச் சொன்னது எங்களின் கவிதை பற்றிய பார்வையை விரித்துப் போட்டதா...? காணாமல் போன குழந்தை என்ற கதையின் தொடர்ச்சியை எழுதுமாறு ரீச்சர் சொன்னபோது எங்கள் கற்பனைக் குதிரைகளைக் கட்டவிழ்த்து விட்டோமே அது தான் எங்களை எழுத்தாளர்கள் ஆக்கியதா...? (சாரங்கா-குணாளினி  மற்றும் குமுதினிக்கு இந்த வரிகள்)
         வெற்றிவேலு ரீச்சர் சொன்னபடிக்கு தமிழ்ப் பாடக் கொப்பியின் கடைசிப் பக்கத்தை நாங்கள் படித்த புத்தகங்களாலும்,அதனை எழுதியவர்களது பெயர்களாலும் நிரப்புவோம்.யார் அதிகம் புத்தகம் படித்தது என்பதில் ஒரு இரகசியமான போட்டி உணர்வு.ரத்னபாலாக்களும்,ராணி காமிக்ஸ்களும் எங்கள் வகுப்பறைகளில் அப்போது உலவின.வித்யா ஓரங்கள் சிவந்து போயிருந்த 'ஆளவந்தாரின் ஆவிபோன்ற பேய்க் கதைப்புத்தகங்கள் கொண்டுவந்து தந்தது இன்னும் நினைவில் நிற்கிறது.'பத்தினிக் கோட்டமும்', 'புதுவெள்ளமும்', 'ஏழு இந்தியர்களும்' அப்போதே எங்களுக்கு அறிமுகமாயின.
       நூலகம் எங்களுக்கு இன்னொரு வரம்.பாட வேளைகள் ஆசிரியர் வராவிட்டால் நூலகத்திற்கு ஓடி விடுவோம்.ரதி அக்காவும்,நளாயினி அக்காவும் நாங்கள் படித்த காலங்களில் நூலகர்களாய் இருந்தார்கள்.ரதி அக்காவிற்கு நல்ல நீளத்தலைமுடியும்,வாகான உடலமைப்புமாய் நடிகை ராதாவை நினைவூட்டும் தோற்றம்.எங்கள் வீதியில் தான் அவவின் வீடு இருந்தது.மேசையில் போடப்பட்டிருக்கும் புத்தகங்கள் தவிர்த்து பெரிய கதைப் புத்தகங்களில் கை வைக்க விடமாட்டா. "அது பெரிய ஆக்களுக்குரிய புத்தகம்.சின்னாக்களுக்கில்லை..." என்பா.அவ எங்காவது சற்றுத்
தள்ளிப் போகும் வேளைகளுக்குக் காத்திருந்து ரகசியமாய் அந்தப் புத்தகங்களை எடுத்து அம்புலி மாமாவுக்குக் கீழே வைத்து மறைத்து வாசிப்பேன்.கண்டும்,காணாமலும் போய்விடுவா.பிறகு கொஞ்சம் வளர்ந்து உயர்தரம் வந்தபின்னர்,அந்தப்புத்தகங்களை எடுத்துப் படிக்கும் காலத்தில் ரதி அக்கா இல்லை.திருமணமாகிப் புலம்பெயர்ந்து போயிருக்க வேண்டும்.
அதற்குப் பிறகு நளாயினி அக்காதான். மெல்லிய சிறிய தோற்றம் நளாயினி அக்காவுக்கு.எப்போதும் அமைதி தங்கியிருக்கும் முகம்.பொது அறிவுப்
புத்தகங்களென்ன...பெரிய கதைப்புத்தகங்களென்ன... நினைத்தபடி புத்தகங்களை எடுக்க அனுமதிப்பா.கடைசிவரை நாங்கள் படித்த காலங்களில் நளாயினி அக்காவின் அமைதியான முகம் நூலகமெங்கும் உலவிக் கொண்டே இருந்தது.ஆனால்,பிறகு 'லயன் எயர்' விமான அனர்த்தத்தில் நளாயினி அக்காவும்,அவவின் கணவரும் காற்றோடு காற்றான செய்தி வந்தது.அதன் பிறகு ஒருபோதும் நளாயினி அக்கா திரும்பி வரவேயில்லை.
       தொண்ணூறின் நடுப்பகுதியில் கோட்டையைச் சுற்றிச் சண்டை மூண்டபோது பாடசாலைகள் மூடப்பட்டன.அப்போது பத்தாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தோம்.'திண்ணைப் பள்ளிக்கூடம்' போகும் வாய்ப்பு எங்களுக்கு அப்போது கிட்டியது.அருட்சோதிவர்ணன் சேர் வீட்டில் இன்னும் சில ஆசிரியர்கள் சேர்ந்து வகுப்புக்களை ஒழுங்கு பண்ணினார்கள்.பாடசாலை மறுபடி தொடங்கும் வரைக்கும் அங்கே வகுப்புக்கள் குழப்பமில்லாமல் நடந்தன.நாங்கள் கிட்டே வசித்தவர்கள் ஒழுங்கைகளுக்குள்ளால் சைக்கிளிலும்,நடந்தும் அங்கே போய்ப் படித்தோம்.
       உயர்தரத்தில் படித்தபோது பொது அறிவுப் புதிர்ப் போட்டியில் எங்கள் பாடசாலை இறுதிச் சுற்றுவரைக்கும் தெரிவாகி கடைசிப் போட்டிக்காக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிவரை சைக்கிளிலேயே சென்றுவந்தோம்.வெற்றிக் கேடயம் எமக்குக் கிடைக்காவிட்டாலும் சிறந்த  கேள்விக்கான பதிலைச் சொல்லியதற்கான பரிசை நந்தன் பெற்றுக்கொண்டான்.
       சரஸ்வதி பூசைக் காலத்துக் கலை நிகழ்ச்சிகளும் எங்களை நிரம்பவே ஆகர்சித்திருந்தன.எங்கள் வகுப்புப் பூசைக்கென,ஒவ்வொரு வருடமும் பூக்கள் சேர்த்து மாலை கட்டிக் கொடுப்பதும்,கடைசி நாள் பிரசாதத்தை ஒவ்வொருவர் வீட்டிலிருந்து செய்து கொண்டு போவதும் மனதில் நிழலாடுகின்றன, அப்படியொரு சரஸ்வதிபூசை கலை நிகழ்ச்சிக்கென பட்டிமன்றம் ஆயத்தப் படுத்திய நாளில் தான் யசோதரனின் அண்ணாவின் உடல் களத்திலிருந்து அவன் வீட்டுக்கு வந்தது. பட்டிமன்றத்தை நிறுத்திவிட்டு அவன் வீட்டுக்கு சைக்கிளை மிதித்தோம்.எங்கள் வகுப்பிற்கும், பட்டிமன்றத்திற்கும்  அப்படியென்ன ராசியோ தெரியவில்லை.அடுத்த வருடப் பட்டிமன்றமும் நிகழ்ச்சிகள் நேரம் தாண்டிப் போய்க்கொண்டிருந்த காரணத்தால்  பொறுப்பாசிரியரால் நிறுத்தப்பட்டு விட்டது.அதனால் எங்கள் வகுப்புப் பேச்சாளர்களின் வாதத்திறமையை எங்கள் பள்ளிக்கூடச் சுவர்கள் கேட்காமலே போய்விட்டன.பட்டிமன்றம் என்றால் எங்களுக்கு முன்னால் படித்தவர்களின் பட்டிமன்றப் பேச்சுக்களே மனதில் வருகின்றன. கிள்ளிவளவனும்,ராஜராஜனும் மேசையில் அடித்துத் தம்,தம் வாதத்
திறமைகளை நிலை நிறுத்தியதை அப்போது படித்தவர்கள் எவரும் மறந்திருக்க முடியாது.
       தேசியப் பாடசாலையாக எங்கள் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு விட்டதாக அறிந்தபோது மனதெங்கும் மகிழ்வு பூத்திருந்தது.சங்கத்தானை முருகன் கோவிலிலிருந்து தோரணங்கள் கட்டியிருக்க நாம் வரிசையில் நின்று விருந்தினரை வரவேற்று கலை நிகழ்ச்சிகளில் களித்தது நினைவில் வருகிறது.
       தமிழ்த்தின நிகழ்வின்  இசை நிகழ்ச்சியிலே ரஞ்சனா ரீச்சர் வயலின் வாசிக்க மாணவிகள் பண்ணிசைத்துக் கொண்டிருந்தார்கள்.அந்தக் காட்சி எனக்கு மோகனா ரீச்சர் வயலின் வாசிப்பது போலவும், சகுந்தலாக்கா பாட்டுப் பாடிக் கொண்டிருப்பது போலவும் தோன்றிற்று.கூடவே, எங்கள் சின்னவயதில் மேடையில் புல்லாங்குழல் வாசித்த பெயர் தெரியாத ஒரு மாணவனையும் நினைவுபடுத்திற்று.நடன நிகழ்ச்சிகளில் சிவனின் ஆட்டம் நடந்து கொண்டிருந்தபோது சியாமா ஒரு தடவை இராவணனாய் வேஷமிட்டு மேடை அதிர நடனமாடியது மனதில் வந்து போனது.சின்ன மாணவன் ஒருவனின் பேச்சு யசோதரனை நினைவுபடுத்திற்று.
       நாங்கள் உயர்தரத்தை விட்டு வெளியேறிய ஒரு காலப்பகுதியில் தான் கவிதாவின் அப்பாவின் அவலச் சாவும் நிகழ்ந்தது.பலாலியிலிருந்து வீசப்பட்ட ஷெல்லின் கீறலோன்று பட்டதில் சொல்லாமல்,கொள்ளாமல் ஒரு இரவில் அவரது உயிர் போயிற்று.அதற்குப் பிறகு, கிடைத்த விவசாய விஞ்ஞானப் பட்டப் படிப்பையும் விட்டுவிட்டுக் கவிதா குடும்பத்தோடு புலம்பெயர்ந்து விட்டாள். அப்படித்தான் சுபாவும் எங்களை விட்டுப் பிரிந்தாள்.வீட்டை விட்டும்,வகுப்புக்களை விட்டும் பிரிந்து போன சுபாவைப் பிறகு எச்சந்தர்ப்பத்திலும் எங்களால் பார்க்க முடியவில்லை.அவளது உயிர் போய் விட்டது என்ற ஒற்றை வரியோடு அவளது நினைவுகள் மட்டும் எம்மில் படிந்து கொண்டன.
       எங்கள் இந்துவுக்குத்தான் எவ்வளவு பெரிய சரித்திரம் இருக்கிறது.1995 இல் யாழ்ப்பாணம் முழுக்க இடம்பெயர்ந்து தென்மராட்சி,வடமராட்சி முழுக்கத் தங்கியபோது யாழ்ப்பாணத்து முக்கிய அலுவலகங்கள் எல்லாம் இந்துவில் வந்து தங்கிக் கொண்டன.மாவட்டச் செயலகம் ஒரு பக்கமும்,பல்கலைக் கழகம் மறுபக்கமுமாக எல்லா அலுவலகங்களும், திணைக்களங்களும்,அங்கே இயங்கின.
       அப்போது இடம் கொடுத்த புண்ணியமோ என்னவோ 2000 இல் மறுபடி தென்மராட்சி இடம்பெயர்ந்தபோது, இரண்டரை வருடம் அஞ்ஞாதவாசம் நிகழ்த்திய வேளையில்இந்துக்கல்லூரிக்கும் பாதிபாதியாய் எங்கெங்கோ இடம் கிடைத்தது.  
       வடமராட்சியில் இடம்பெயர்ந்து போனவர்களுக்கு நெல்லியடி மத்தியகல்லூரியும்,மற்ஸ் சென்டரும் இடம் கொடுக்க,வலிகாமத்தில் இடம் பெயர்ந்து போனவர்களுக்காக,இணுவில் மத்தியகல்லூரி இடம் கொடுக்க பாதி,பாதியாய் இயங்கியது இந்து.அந்த இரண்டரை வருடங்களிலும் தனித்துவமாய்த்தான்  இயங்கியது கல்லூரி. மறுபடி சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கிய போது நெல்லியடிப் பகுதியில் இயங்கிய இந்துக் கல்லூரியே முதல்,முதல் சாவகச்சேரிக்கு வந்து இயங்கத் தொடங்கியது.அப்போது தான் நானும் அங்கு ஆசிரியராய் இணைந்திருந்தேன்.எங்கள் வீட்டருகே நடந்து போய்ப் பழக்கப்பட்ட பாடசாலைக்கு,நெல்லியடியிலிருந்து,பஸ்ஸில் வந்து போனது அதிசயம் தான். ஊரை வழக்கத்திற்குக் கொண்டு வருவதற்காக பாடசாலை போன்ற நிறுவனங்கள் ஊரில் நிலை கொண்டு நம்பிக்கை வந்தபிறகே மீண்டும் நாம் ஊர் மீள முடிந்தது.
              மறுபடியும் போர் சூழ்ந்த நாட்கள் வந்த பிறகு,சுற்றிவளைப்புக்கள் நிகழ்கின்ற வேளைகளில் இந்துவின் மைதானம் பெரிதும் அமர்க்களப்படும்.
விடியற்காலையிலேயே அடையாள அட்டைகள் பெறப்பட்டு இந்துவின் மைதானத்திற்கு  ஊர்மக்கள் வருவிக்கப்படுவர்.நாள் முழுவதும் நடக்கும் இந்தத் திருவிழாவின் முடிவில்,அழைத்துச் செல்லப்படுபவர்களை எண்ணி அவர்களின் உறவுகள் மட்டுமன்றி,பள்ளிக்கூடச் சுவர்களும் கண்ணீர் உகுக்கும்.
              அந்தக் காலம் கழிந்தது.அதன் பிறகு வன்னியிலிருந்தும்,தடுப்பு முகாம்களிலிருந்தும் வந்த மக்களை அரவணைத்தது இந்துவின் மைதானம்.மாதக்கணக்காக இந்துவின் மடியில் அவர்கள் ஆறுதலுற்றிருந்தார்கள்.
       அந்த மைதானம் எத்தனை உணர்வுகளைக் கண்டிருக்கிறது.பனி பொழியும் இரவுகளில் நிரம்பிய சனக் கூட்டத்தோடு,சாந்தனின் இசைப்பொழிவையும், உயிர்த்த மனிதர் கூத்தையும்,மழை பொழிந்த கார்த்திகை மாதங்களில் ஈரத்தோடு ஒழுகிய வெளிச்சத் தீபங்களையும்,காலங்கள் மாற,மாற இராணுவ அணிவகுப்புக்களையும்,முகாம்களிலிருந்து வந்தோரின் துயரங்களையும்.... இன்று எல்லாம் முடிந்து,மறுபடியும் எங்கள் பிஞ்சு மாணவர்களின் பாதத் தடங்களோடு பேச ஆரம்பித்திருக்கிறது.
       காட்சிகள் மாறிவிட்டன.
       இன்று சஞ்சீவி மரங்கள் எதுவும் இல்லை.தேமா மரங்களும் இல்லாமல் போய் விட்டன. மாணவ முதல்வர் அறைக்கு முன்னால்,ஒவ்வொரு பருவத்திற்கும்,ஒவ்வொரு விதமாய் பூவரும்பி, மொட்டையாய், இலைகளோடு,அழகாயிருக்குமே...பெயர் தெரியாத அந்த மரம்...அதுவும் இல்லை இப்போது.
      சூழவும் வேறு மரங்கள் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
      நாங்கள் படித்தபோது இருந்த ஆசிரியர்களில் பத்துப் பேருக்கு உள்தான் இப்போது இருக்கிறார்கள்.அநேகமானோர் ஒய்வு பெற்று விட்டார்கள்.
மற்றவர்கள் பதவி உயர்வோடும்,மாற்றலாகியும் போய் விட்டார்கள்.
     நான் கற்பித்த காலத்திலிருந்த கடைசித்துளி மாணவர்களும் இப்போது உயர்தரம் தாண்டி வெளியேறிவிட்டார்கள்.
    புதிய மாணவர்கள்,புதிய ஆசிரியர்கள்.முன்பைப் போலில்லாமல் ஊர் ஆசிரியர்களை விட வெளிப் பிரதேசங்களிலிருந்து வருகின்ற ஆசிரியர்கள்.
    என்னோடு பல்கலைக்கழகத்தில் படித்த இரு நண்பியர் தொலைதூரத்திலிருந்து இங்கு வந்து இணைந்த கணிதமும்,உயிரியலும் கற்பிக்கின்றனர்.
    நிகழ்ச்சி முடிந்து வாசலுக்கு வந்தபோது திரும்பிப் பார்க்கிறேன்.
    எப்போதும் பார்க்கிற இந்து தான்.
    எப்போதும் பார்க்கிற மைதானம் தான்.
    ஆனால் என்றும் சலிக்காத புதுமையோடு தென்படுகிறது.
                           அன்று ஒரு காலம் இருந்தது...
                           எங்களுக்கென....
                           இன்று அதை இழந்து விட்டோம்.
                           ஆனாலும் மனதில் நிழலாடும் நினைவுகள்
                           அந்தக் காலத்தைத்
                           திரும்பத் திரும்ப எழுதிக்  
            கொண்டேயிருக்கின்றன.
                           ****************************************************

8 comments:

  1. remind me flashback thanks

    ReplyDelete
  2. Varma (Pakkaththu vidu) :)June 9, 2013 at 10:32 AM

    Super akka..

    ReplyDelete
  3. நன்றி அக்கா உங்க பகிர்வுகளுக்கு....
    அறிவியல்ஊற்று நீங்க வந்தது எல்லாமே நினைவிருக்கு..நான் E வகுப்பில இருந்ததால உங்களிட்ட படிக்க முடியல.ஒரு மரணமும் சில மனிதர்களும் நான் ஏழாம் ஆண்டில தேடிப்பிடிச்சு வாசிச்சது, எல்லாமே இந்துவின் நினைவுகளோடு சேர்ந்து கொள்கிறது.

    ReplyDelete
  4. நன்றி அக்கா உங்க பகிர்வுகளுக்கு....
    அறிவியல்ஊற்று நீங்க வந்தது எல்லாமே நினைவிருக்கு..நான் வகுப்பில இருந்ததால உங்களிட்ட படிக்க முடியல.ஒரு மரணமும் சில மனிதர்களும் நான் ஏழாம் ஆண்டில தேடிப்பிடிச்சு வாசிச்சது, எல்லாமே இந்துவின் நினைவுகளோடு சேர்ந்து கொள்கிறது.

    ReplyDelete