Sunday, July 8, 2012

ஒன்பதாவது குரல்


     
                                                         

       வீட்டிலிருந்து வெளிக்கிட்டபோது மழை வருவதற்கான அசுமாத்தம் கொஞ்சமும் இல்லை.ஒழுங்கைக்குள்  இறங்கி அவள் நடக்கத் தொடங்கும்போதே மேகமும் கொஞ்சம்,கொஞ்சமாய்க் கறுக்கத் தொடங்கிவிட்டது. கறுப்பு கொஞ்ச நேரத்தில் ஊரையும் மூடுகிற அளவுக்கு வளர்ந்தது.எப்படி மேகம் கறுத்தாலும்,கோவிலுக்குப் போகிறவரைக்கும் துளி விழாமலிருக்க வேண்டுமே,என மனதுக்குள் பிரார்த்தித்தபடிதான் எட்டி நடந்தாள் பாக்கியலட்சுமி.மழை அவளுக்குக் காத்திராமல் 'சில்'லென்று அவள்மேல் விழுந்து தெறித்தது.
        முதல் மழைத்துளிகள் கனமாகவிருந்தன.
        பெரிய தேக்கிலையைக் கூம்பாக்கி அதற்குள் செவ்வரத்தை,நித்யகல்யாணிப் பூக்களை இட்டிருந்தாள்.அந்தக் கூம்பை இடக் கைக்கு மாற்றிக்கொண்டு சேலைத்தலைப்பை சுற்றி எடுத்து அதன் முனையில் கற்பூரத்தையும்,தீப்பெட்டியையும் வைத்து முடிந்தாள்.பின்னர்,சேலைத்தலைப்பால் தலையைப் போர்த்தி, நுனியில் முடிந்த பகுதியை வலக்கையால் இறுகப் பொத்திக்கொண்டாள்.
         தலை சின்ன நடுக்கத்தோடிருந்தது.
         மழைத்துளி ஈரத்தில் குளிர்ந்து,காற்றும் வீச,தலையின் ஆட்டம் இன்னும் கொஞ்சம் அதிகரித்தது.
         தேக்கிலைக் கூம்பினுள் மழைத்துளிகள் விழுந்து பூக்கள் சிலிர்த்தன.
        "பூவுக்குத் தீர்த்தம் மாதிரி மழை விழுந்தா நல்லதுதான்...கற்பூரமும்,தீப்பெட்டியும் நனையக்கூடா..."
        வலதுகரம் மறுபடியும் சேலைத்தலைப்பை இறுக்கிக் கொண்டது
     உள்ளே ஈரலித்திருக்கவில்லை என்பதை உள்ளங்கை உணர்ந்து கொண்டது.
      "என்ன பாக்கியக்கா..இந்த மழையுக்கை..." சைக்கிளில் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்த உருத்திரன்,போகிற போக்கில் கேட்டபடி,அவளது பதிலுக்குக் காத்திராமல் விரைந்தான்.
      "மழையென்ன...வெயிலென்ன...உதெல்லாம் பாத்துக் கொண்டிருந்தாக் காரியம் ஏலுமே..." அவள் தனக்குள் முணுமுணுத்தபடி நடந்தாள்.வேலிக்கரையில் ஒதுங்கி நடந்தும்,முகத்திலும்,கைகளிலும் நீர் பரவிவிட எட்டி நடந்து,தில்லையம்பலத்தாரின் சங்கடப்படலையில் ஒதுங்கி நின்றுகொண்டாள்.உடம்பு வெடவெடத்தது.
       குளிர் உடம்புக்குள் நுழைந்துவிட வழிதேடியது.
       கையிலிருந்து வழிந்த நீர் உள்ளங்கைக்குள் வழிந்து,சேலைத் தலைப்பினூடு கசிந்து,கற்பூரத்தை நனைத்து விடும்போல் தோன்றக் கையை இறுக்கியபடியே உதறிக் கொண்டாள்.
       குடிசை ஒழுகியிருக்கும்.
       பிள்ளைகள் மூவரும்,பள்ளிக்கூடம் வெளிக்கிடும் அவசரத்தில் அந்தரித்துப் போயிருப்பார்கள் என்பது மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது.
       நேற்றைக்குப் பக்கத்துவளவு மங்கை தோட்டத்தில் பிடுங்கியதாய்க் கொடுத்த மரவள்ளிக் கிழங்கினைத் துண்டுகளாக்கி அவித்து வைத்துவிட்டு வந்திருந்தாள்.
       நின்றிருந்தால்,நிரூபன் தேங்காய்ச் சம்பல் வேண்டுமென்று,அடம்பிடித்திருப்பான்.இப்போது கூட அக்காக்களிடம் ஏதாவது முணுமுணுத்து,முணுமுணுத்துத்தான் சாப்பிட்டிருப்பான்.ஆனால்,மழைக்கு அவித்த மரவள்ளிக்கிழங்கு சுதியாகவிருக்கும்.
       இந்தமட்டிலாவது கிடைத்ததே என்று பெட்டைகள் இரண்டும் திருப்திப்பட்டுக் கொள்ளும்.இதுகாலவரைக்கும் பட்ட கஷ்டங்கள் அவர்களை,அந்த அளவிற்குப் பக்குவப்படுத்தியிருந்ததென்றால்,அவர்களிருவருக்கும் இருபதோ,இருபத்திரெண்டோ  வயதல்ல.பதினாலு,பதினைந்து வயதுதான்.இருந்தாலும் அவ்வளவு பக்குவம்.
     இவளுக்கும் மரவள்ளிக்கிழங்கு  ஆசையாகத்தான் இருந்தது.ஆனால்,அவள் இப்போதெல்லாம்,காலையில் சாப்பிடுவதில்லை.அதென்னவோ,சாப்பிடக் கையிலேடுத்தாலே,இளங்கோவின் ஞாபகம் வந்து விடுகிறது.அவனது குரல் எங்கிருந்தோ 'அம்மா'வென்று இவளை விழித்து அழைப்பது போலிருக்கும்.மூன்று வருடங்கள் ஆகிற்று அவள் காலையில் சாப்பிடுவதை விடுத்து.அது என்னவோ ஒரு விரதம் போல...அவன் வந்த பிறகுதான் இனிமேல் காலைச் சாப்பாடு என்பதுபோலவும்...
      மழை கொஞ்சம்போல் ஒடுங்கிக் கொண்டு வந்தது.
      இனியும் நின்றால் நேரம் போய்விடும் என்பதுபோல,அவள் மறுபடியும் தெருவுக்கு வந்தாள்.கொஞ்ச நேரமென்றாலும் பெய்த மழையால் சிற்சில பகுதிகளில் நீர் சுழித்து சிறிய ஓடைகளாய் ஓடியது.
      ஆட்கள் அதிகமில்லை.
      மழை வரும் என்று தெரியாமல் வெளிக்கிட்ட சிலர் இவளைப்போல் எங்கேனும் ஒதுங்கியிருந்தனர்.மற்றவர்கள் வீட்டை விட்டு வெளிக்கிடவில்லை.
      இரண்டு நிமிடத்துள் கோவிலை அடைந்துவிட்டாள்.
      கோவிலென்றால்,கோபுரத்தோடு நிமிர்ந்து நிற்கும் கட்டட அடுக்குகளல்ல.
      ஒரு ஆலமரம்.அதற்குக் கீழ் வட்டவடிவ சீமேந்துப் பீடம்.அதில் நிறுத்தப்பட்ட சில சூலங்கள்.அவ்வளவே.
      வழக்கமாயெனில் பக்கத்துக் கிணற்றில் நீர் மொண்டு அந்த இடத்தைக் கழுவுவாள் பாக்கியலட்சுமி.இன்றைக்கு அவ்வளவு தேவையில்லை.மழை எல்லாவற்றையும் கழுவியிருக்கிறது.
    தேக்கிலைக்குள் பொதிந்து வைத்திருந்த பூக்களைக் கிள்ளி சூலங்களின் முன் வைத்தாள்.
    சேலைத் தலைப்பைப் பிரித்தபோது கற்பூரவில்லைகள்  ஈரலித்துப் பொருமியிருந்தன.எங்காவது ஈரம் படாத பகுதி இருக்கிறதா எனப் பார்த்தாள்.எங்குமில்லை.ஆலமர அடியினுள் குடைவாய்க், காய்ந்திருந்த பொந்தினுள்,கற்பூரத்தையும்,தீப்பெட்டியையும் வைத்து விட்டு,சேலையை உதறி,முகத்திலும்,இரு கைகளிலும் உள்ள ஈரத்தைத் துடைத்துக் கொண்டாள்.
     இப்போது காற்று மழையற்று உலர்வாக இருந்தது.
     கற்பூரவில்லைகளை எடுத்துவைத்து தீப்பெட்டியினுள் குச்சினைஎடுத்துத் தட்டினாள்.
     ஈரலித்த குச்சிகளின் மருந்து உதிர்ந்து விழுந்தது.
     தொண்டைக்குள் ஏக்கம் எட்டிப்பார்த்தது.
     இரண்டு குச்சிகள் வீணாகிப் போயின.
     கைகளை மறுபடியும் துடைத்துக் கொண்டாள்.தீப்பெட்டியின் மருந்து தடவிய பக்கங்களை  மணிக்கட்டில் வைத்துத் தேய்த்தாள்.கையில் கொஞ்சம் சூடேறினாற் போலிருந்தது.மறுபடியும் தீக்குச்சியொன்றை எடுத்து தீப்பெட்டியின் விளிம்புகளில் தேய்த்தாள்.
     கொஞ்சம் தயங்கிவிட்டுப் பற்றிக் கொண்டது நெருப்பு.'பக்'கென்று கற்பூரத்தில் குச்சியை வைத்துத் தீயை இடம் மாற்றினாள்.காற்றோ,இலைகளிலிருந்து வடியும் நீர்த்துளிகளோ கற்பூரத்தை அணைத்துவிடாதிருக்க,தீபத்தை இரு கைகளாலும் வளைத்துப் பிடித்தாள்.பிறகு,இரு கரங்களாலும் தீபத்தை ஒற்றிக் கண்களில் தொட்டுக் கொண்டாள்.மழைக்குளிரில் விறைத்திருந்த கரங்களுக்குள்,கற்பூரத்தின் வாசனையும்,வெப்பமும் புகுந்து உள்ளங்கைகளுக்குள் ஒரு வெதுவெதுப்பைத் தொற்ற வைத்தது.அந்த ஆறுதலான வெதுவெதுப்பு,மனதுக்குள்ளும் ஏறிப் படர்ந்தது.
     கற்பூரத்தை ஒற்றிக் கொண்டபின் மூன்று தடவைகள் வைரவரைச் சுற்றி வந்தாள்.
  "அவனைக் கெதீலை விடப்பண்ணப்பு.அவனுக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடா..." என மனம் திரும்பத் திரும்ப பிரார்த்தித்துக் கொண்டது.பிரார்த்திக்கும் ஒவ்வொரு கணமும் இளங்கோவின் முகம் அவள் முன் நீண்டு மறைந்தது.
     "ரெண்டு பிள்ளைகளையும் பறிச்சுப் போட்டாய்.இனி மற்றதையும் பறிச்சுப் போடாதையப்பன்..." என மனம் தொடர்ந்தது.
     "மற்றதுகள் எல்லாம் எங்கையிருந்தாலும்,கூட ஆரெண்டாலும் இருக்கினம்.அவன் மட்டும் தான் தனிச்சுப் போட்டான்..." மீண்டும் மன்றாட்டம்.
     "உன்னட்டைஎடுத்ததுகளைக் கவனமாப் பாத்துக் கொள்ளப்பு.திரும்பியும் பிறக்கிறதெண்டா என்ரை வம்சத்துக்குள்ளையே வரட்டும் ..."
     திரும்பி நடந்தபோது மீண்டும் அவனது ஞாபகம் வந்தது.இறுதியாய் அவனைக் கடவுளிடம் ஒப்புக் கொடுக்கவேண்டும் போலிருந்தது.
     "இளங்கோவைக் கெதீலை கொண்டு வந்திடப்பு.அவன் தாங்கமாட்டான் ஒண்டையும் ..."என மனதுக்குள் கோரிக்கை விட்டபடி திரும்பினாள்
     இப்போது மழை முற்றாகவே நின்றுவிட்டது.
     வெயில் லேசாக மின்னியது.
     நடப்பது லேசாகவிருந்தது
     போகிற வழியில் நிரூபனும்.நித்யாவும்,புவனாவும் பாடசாலைப் பைகளோடு வந்துகொண்டிருந்தனர்.
     "சாப்பிட்டியே குஞ்சு ..." என்றால் நிரூபனைப் பார்த்து.
     "சுப்பர் மரவள்ளிக்கிழங்கு..." என்று துள்ளினான் நிரூபன்.
     அவிக்கும் போதே நல்ல மாவாய்க் கரைந்திருந்தது.அதுதான் அவனுக்குப் பிடித்தது போல.
     "சாப்பிடீங்களேயெடி..." எனறாள் பாக்கியலட்சுமி பெண்களைப் பார்த்து.
"எங்கை சாப்பிடுறது...விட்டாலெல்லோ...கொஞ்சம்,கொஞ்சமெண்டு கேட்டு,எங்கடயையும் சேர்த்து அவன் தான் திண்டது..." எனறாள் நித்யா
 சலிப்பாக.
     சலித்துக் கொண்டாலும் அவன் மேல் அவர்களுக்குச் செல்லம் கூட.அவர்களாகவே கொடுத்திருப்பார்கள்.
     "பள்ளிக்கூடம் பெல் அடிக்கப் போகுது..." என்று சொல்லிக் கொண்டே ஓடினான் நிரூபன்.நித்யாவும்,புவனாவும் பின்னால் ஓடினார்கள்.
     நல்லவேளை.அவர்கள் கிளம்பி வருவதற்கிடையில் மழை விட்டது என நினைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
     முன்புறச் செத்தையில் கொடியில் கிடந்த உடுப்புக்கள் இறைந்து கிடந்தன.
      நித்யா தான்  அள்ளிப் போட்டிருப்பாள்.
      இவள் அவற்றை அள்ளி உள்புறக் கொடியில் போட்டாள்.
      இளங்கோவும்,நிரூபனைப் போல் தான் இருந்தான்.அவனும் அப்போது நல்ல செல்லமாய்த் தான் இருந்தான்.
      வசந்தாவும்,பவிதாவும் சாப்பாட்டில் அவனுக்கென்று விசேடமாய் எடுத்துக் கொடுப்பார்கள்.அது மீனாயிருந்தாலென்ன...? பொரியலாயிருந்தாலென்ன...?
தங்களுடையதில் அவனுக்கும் பங்கு கொடுப்பார்கள்.அவன் தான் நிரூபனைத் தூக்கி வளர்த்தான்.நிரூபனென்றால் போதும் அவனுக்கு.நிரூபனுக்கு ஒரு வயதாய் இருந்தபோது இளங்கோவுக்குப் பதினாலு வயது தான்.நாளும்,பொழுதும் தூக்கிக் கொண்டு தான்  திரிவான். வேடிக்கை காட்டுவான்.நிரூபனும் இளங்கோ போன கொஞ்ச நாளில் ஏங்கிப் போய்த்தானிருந்தான்.இப்போது கொஞ்ச நாட்களாகத் தான் அந்த ஏக்கத்திலிருந்து விடுபட்டான்.
      அவளுடைய வாழ்க்கையிலும் எத்தனை ஏக்கங்கள்...?
      முதலில் நிரூபன் பிறந்த கையோடு அவளது கணவன் அவளைக் கை விட்டுப் போனான்.எட்டுப் பிள்ளைகளோடும் அவள் தனித்துப் போனாள்.
      யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தாலாவது சமாளித்திருக்கலாம்.ஐந்து பிள்ளைகளோடு யாழ்ப்பாணத்திலிருந்த அவளைக் காடு,கழனியெல்லாம்  காட்டி,வன்னிக்கு அவள் கணவன் கூட்டிச் சென்றதால்தான் அவள் முள்ளிவாய்க்கால் வரை முட்டுப்பட நேர்ந்தது.அதுவும் எட்டுப் பிள்ளைகளோடு.
     எட்டுப்பிள்ளைகள்.நினைக்கவே அயர்ச்சியாக இருக்கிறது அவளுக்கு.எப்படித்தான் பெற்றாளோ...?எப்படியோ அதற்குக் காரணமானவன் அவளைக் கைவிட்டுப் போய்விட்டான்.அதற்குப் பிறகு அவனைப் பற்றி நினைத்தென்ன பலன்...?யாருடன் சேர்ந்து வசிக்கிரானோ...?அல்லது இந்தச் சண்டைக்குள் செத்துத் தான் தொலைந்தானோ...?எதுவும் தெரியாமலே குங்குமத்தோடு வளைய வருகிறாள்.
    அடுத்த ஏக்கம் கண்ணனின் வடிவில் வந்தது.
    கண்ணனை அவள் பெரிதும் நம்பியிருந்தாள்.
    ஐந்தாவது பிள்ளை அவன்.படிப்பில் கெட்டிக்காரன்.அவளது கஷ்டத்தையும் உணர்ந்து கொண்டவன்.
    அவனை யாழ்ப்பாணத்தில் தன் அக்கா வீட்டில் அனுப்பிப் படிக்க வைத்தாள் பாக்கியலட்சுமி.எப்படியும் அவன் படித்து முன்னுக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது.முதல் தடவை பாதை திறந்திருந்தபோது அவன் யாழ்ப்பாணத்திற்குப் படிக்க வந்தான்..எல் படித்து மூன்று ''யும் எடுத்து விட்டான்.பல்கலைக்கழகம் போவதற்கு முன் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டுமென்று அவன் அவளிடம் திரும்பி வந்தான்.அவன் வராமலே இருந்திருக்கலாம்.வந்துவிட்டான்.
    அவனுக்கு இயல்பிலேயே மிருகங்களின் குரலை நடித்துக் காட்டும் திறமை இருந்தது.நாயைப் போல,கிளியைப் போல,யானையைப் போலெல்லாம் சத்தம் போட்டுக் காட்டுவான்.அவனது திறமை அவனுக்கு சிறியதொரு வேலையைப் பெற்றுக்.கொடுத்தது.இயக்கத்தினுடைய.வானொலியிலும்,தொலைக்காட்சியிலும் இப்படி ஏதாவது ஆடு போல,மாடு போல,நாய் போல சத்தமெழுப்ப வேண்டிய நேரங்களில் அவனைக் கூப்பிடுவார்கள்.அவன் போய் அப்படியே நடித்துக் கொடுத்து விட்டு,கொஞ்சம் பணத்தோடு திரும்புவான்.ஏதோ கைச் செலவுக்கு என்பது போல மிகக் குறைவான பணம்.கடைசியில் அவன் இரணைப்பாலையில் வந்த ஷெல்லில் துடிதுடித்துக் கீழே விழுந்துவிட்டான்.கொஞ்சத் தூரத்த்ற்கு அவனைச் சாக்கில் போட்டு இழுத்துக் கொண்டு போனார்கள்.பிறகு,ஷெல் விழும் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் ஓரிடத்தில் கிடங்கு தோண்டிப் புதைத்து விட்டுப் போனார்கள்.இப்போது கூட எங்கேயாவது குட்டிநாய் குரைத்தால்,கிளி கீச்சிட்டால் அவனது ஞாபகம் கண்களை நனைத்து விடுகிறது.
       கண்ணனைப் புதைக்கவாவது அவகாசம் இருந்தது.கோகுலனைப் புதைக்கக் கூடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.முள்ளிவாய்க்காலில்,கடைசியாய்,இனி,எந்த எல்லையும் இல்லை என்றிருந்த கணத்தில், அவன் யாருடைய துப்பாக்கிச் சூட்டுக்கு இறந்தான் என்று தெரியாமலே,குண்டு பட்டுச் செத்தான்.அவனைப் பார்த்துக் கொண்டு நின்றால்,மிஞ்சி நின்ற  நான்கையும் காப்பாற்ற முடியாதென்றுதான், அவனைக் கைவிட்டு,விட்டு வந்தாள்.இளங்கோவும்,நிரூபனும்,நித்யாவும்,புவனாவும் தான் இவளோடு முள்ளிவாய்க்காலைக் கடைசியாய்க் கடந்தார்கள். அதற்கப்பால்,இளங்கோவை இவள் கத்திக் கதறப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.இவள் மற்ற மூன்று சிறிசுகளையும்,கைக்குள் பொத்திக் கொண்டு செட்டிகுளம் முகாமில் ஒரு வருடத்திற்கு அல்லாடினாள்.அதற்குப் பிறகு அவர்களின் 'குற்றமற்ற தன்மை' நிரூபிக்கப்பட்டபின்பு,பட்டதெல்லாம் போதுமென்று யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள்.மூன்று பிள்ளைகளுக்கும்,யாழ்ப்பாணம் புதிசு தான்.யாழ்ப்பாணத்தில் பிறந்த ஐந்தும் யாழ்ப்பாணத்தை விட்டு நெடுந்தூரம் விலகி விட்டன.
       வசந்தாவை முன்னமே கட்டிக் கொடுத்தாயிற்று.வவுனியாவில் மூன்று குழந்தைகளோடு இருக்கிறாள் அவள்.
       சந்திரன் முன்னமே 'அவங்களோடு' போய்ச் சேர்ந்து விட்டான்.அங்கேயே ஒரு 'இயக்கப்' பெட்டையைக் கல்யாணமும் கட்டிக் கொண்டான்.பிறகு,சந்தர்ப்பம் கிடைத்த ஒரு பொழுதில் அவன்,அவளோடும்,ஒரு வயதுக் குழந்தையோடும் கடல் தாண்டிப் போய் விட்டான் .இப்போது இந்தியாவில் இருப்பதாகக் கேள்வி.பவிதா கிளிநொச்சியில் கணவனோடு வசிக்கிறாள்.அவள் கணவனுக்கு அங்கே காணி,பூமி இருக்கிறது.அதை,விட்டுவிட்டு வர அவளுக்கு விருப்பமில்லை.இவர்களிருந்த முகாமின் இன்னொரு மூலையில் தான் அவர்களும் இருந்தார்கள்.விடுவிக்கப்பட்டபோது,இவர்கள் யாழ்ப்பாணம் வர விரும்புவதாய்ப் பதிய,அவர்கள் கிளிநொச்சி போக விரும்புவதாய்ப் பதிந்து கொண்டார்கள்.
  பெய்த மழையைப் பற்றிக் கொஞ்சமும்  பொருட்படுத்தாமல் வெயில் தன்பாட்டில் எட்டிப் பார்த்தது.இவள்கொஞ்சம் தேநீரைப் போட்டுக் குடித்தாள்.வெளிக்கிட்டால் தான் எங்கேனும் கூலி வேலை கிடைக்கும் எனக் கிளம்பியபோது கிராம அலுவலர் வந்தார்.
      "வெளிநாட்டு நிறுவனகாரர் வரீனை.கேக்கிற விசயத்தைச் சொல்லணை..." என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
      "உவங்களுக்கு உதுவே வேலையாப் போச்சுது.இண்டையக் கூலி துலைஞ்சுது..." என முணுமுணுத்தபடி அவள் குந்தில் சாய்ந்தாள்.
      இரண்டு பெண்களும்,ஒரு பையனும் வந்திருந்தனர்.
      இவளது குடும்ப விபரத்தைக் கேட்டுப் பதிந்தனர்.
      "எத்தினை பிள்ளையள் அம்மாக்கு...?"
      "எட்டு"
      "குடும்பக் காட்டிலை மூண்டு தானை கிடக்கு..."
      "ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு இடத்தை...இஞ்சை உள்ளதைத்தானை விதானை ஐயா பதிவார்..."
      "எங்கைஎங்கை  இருக்கினம்...ஒண்டொண்டாய்ச் சொல்லுங்கோ..."
      "ஏன் ஏதும் தரப் போறியளே..."
      "இல்லையம்மா இடம்பெயர்ந்த ஆக்களிண்டை விபரம் திரட்டத்தான்..."
      "திருப்பித் திருப்பி உதைத்தான் செய்யுங்கோ..." சலித்தாள் பாக்கியலட்சுமி.
      "நாங்கள் இப்பதானம்மா வாறம்..." என்றால் வந்தவர்களில் ஒருத்தி.
      "சரி,சரி சொல்லுறன் ..."என்ற பாக்கியலட்சுமி தொடர்ந்தாள்.
      "என்ரை மூத்தவன் இந்தியாவிலை...அடுத்தது வவுனியாவிலை...இன்னொண்டு கிளிநொச்சியிலை..."
      "என்னம்மா தனியத்தனிய இருக்கினமே..."
      "இல்லை,கட்டிக் குடும்பமா இருக்கீனை..."
      "ம்...அடுத்தாள்..."
      "அடுத்தவன் முள்ளிவாய்க்காலிலை  மோசம் போட்டான்..." கேவினாள்.
அவர்கள் பேசாமல் இருந்தனர்.
      "அவனின்டை உடம்பைக்கூட எடுக்கேலாமல் போச்சு...என்ன பாவம் செய்தனோ...?"
யாரும்,எதுவும் பேசவில்லை.
    "இன்னொருத்தன்,அவன் மூண்டு '' எடுத்தவன்.இரணைப்பாலையிலை அவனைச் சாகக் குடுத்தன்.என்ன கெட்டிக்காரப் பெடியன்.என்னட்டை வரவேணும் எண்டு வந்து கடைசீலை தன்ரை உயிரைக் குடுத்திட்டான்...அறுவாங்கள்..என்ரை குஞ்சுகளைக் கொண்டு போட்டாங்கள்...."
    அவளது உலர்ந்த கண்களில் வடிந்த ஈரம் மறைந்ததும் வந்திருந்த பையன் கேட்டான்.
    "வேறை..."
    "ஒருத்தன் தடுப்பிலை...உம்மைப்போலை தான் மெல்லிய பெடியன்...இப்ப என்ன பாடுபடுறானோ தெரியா..."
    வந்திருந்த பெண்கள் அவனைப் பார்த்து தங்களுக்குள் கண் காட்டிச் சிரித்தார்கள்.அவர்களின் கேலியிலிருந்து தப்ப அவன் மீண்டும்
    "மற்றாக்கள்..." என்றான்.
    "இஞ்சை என்னோடை மூண்டு பிள்ளையள் படிக்குதுகள்..."
    "எத்தினை பிள்ளையளம்மா...உங்களுக்கு..." குறுக்கிட்டாள் ஒருத்தி.
    "ஏன்,இவ்வளவு நேரம் என்ன சொன்னவ...?" என்றான் அந்த இளைஞன்.
    "எண்ணிப் பாரும்,ஒன்பது வரூது..."
    "எத்தினை பிள்ளையளம்மா...சரியாச் சொல்லுங்கோ..."
    "ஒன்பது..."
    அவளுக்கென்ன மனக் குழப்பமோ? எனத் தோன்றியது அவர்களுக்கு.
    "என்னம்மா,அடிக்கடி மாத்தி மாத்திச் சொல்லுறியள்..."
    "நீங்கள் ஏதோ தரப் போறியள் எண்டே நான் மாத்திச் சொல்லுறன்...எனக்குப் பிள்ளையள் ஒன்பது தான்..."
    "அப்ப எட்டெண்டியள்..."
    "நான் பெத்தது எட்டுத்தான்...பெத்தா மட்டுமே பிள்ளை.வளத்தாப் பிள்ளையில்லையே..."
     அவர்கள் அவளைத் திகைத்துப் போய்ப் பார்த்தார்கள்.
"என்ரை மனிசன் என்னை விட்டிடுப் போனவுடனை,நான் 'அவங்கடை'சமையல் அறையிலை கொஞ்ச நாள் சமையல் வேலைக்குப் போனனான்.அப்ப அங்கை அவன் நிண்டான்,கிழிஞ்ச சாறத்தோடை....
     பாவம் பெடியன்,ஏதோ பசிலை களவெடுத்துப் போட்டான் எண்டு பணிஷ்மென்டாம்...
     தாய்,தேப்பன் இல்லாத பொடி வேறை என்ன செய்யும்...?
     என்னோடை வாறியோ எண்டன்.வந்திட்டான்.
     அதுக்குப் பிறகு அவனும் என்ரை பிள்ளை தான்...
     திண்டாலும்,குடிச்சாலும் அவனுக்கும் குடுத்துத் தான்...
     எட்டுப் பிள்ளையளிண்டை குரல் எனக்கு எப்பிடிக் கேட்டுதோ அப்பிடித்தான் அவனின்டை குரலும் எனக்கு ஒன்பதாவதாக் கேட்டுது...
     அவன் என்ரை பிள்ளை தான்...நான் அவனைப் பிரிச்சுப் பாக்கன்..."
     அவள் எழுந்து உள்ளே போனாள்.சில நிமிடங்களில் கசங்கிப் போன இரு புகைப்படங்களோடு திரும்பி வந்தாள்.
     படங்களைத் தொட்டு அவர்களுக்குக் காட்டினாள்.
     "இது தான் கண்ணன்,மூண்டு '' எடுத்தவன்.இரணைப்பாலையிலை செத்தவன்.நல்ல வடிவாக் குயில் மாதிரிக் கூவி,நாய் மாதிரிக் குரைப்பான்..."
     குரல் கம்ம மற்றப் படத்தைக் காட்டினாள்.
     "இது கோகுலன்.முள்ளி வாய்க்காலிலை செத்தவன்.பக்கத்திலை நிக்கிறது இளங்கோ.அவன் தூக்கி வச்சிருக்கிறது என்ரை கடைக்குட்டி... இப்ப பதினொரு வயசு...பள்ளிக்கூடம் போட்டான்."
     அவளிடமிருந்து  வார்த்தைகள் ஒழுகிக் கொட்டின.
     "அந்தப் பிள்ளை தான் இரணைப் பாலையிலை செத்ததோ...?"
     "எந்தப் பிள்ளை..."
     "அதுதான் நீங்கள் வளத்தது..."
     "இல்லை அது என்ரை அஞ்சாவது..."
     "அப்ப முள்ளிவாய்க்காலிலையோ..."
     "சீச்சீ ...அவன் இன்னும் உயிரோடை இருக்கிறான்..."
      "இந்தியாவிலையோ...?"
      "அது என்ரை மூத்தவனெல்லோ..."
      "அப்ப அவனிப்ப எங்கை..."
      "அவன் தான் இளங்கோ...தடுப்புமுகாமிலை..." என்றாள் பாக்கியலட்சுமி.

                                  ************************************
                                                                                                                 ஞானம்   2012 - ஆனி

4 comments:

  1. கதை நன்றாக உள்ளது. ஆனால் ஆரம்பத்தில் உள்ள சில பந்திகள் தேவையற்றவை போல உள்ளன. கதையின் இறுக்கத்தை தளர்த்திவிடுகின்றது.


    - சுதாகர்

    ReplyDelete
  2. கவனத்தில் கொள்கிறேன்.உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது. ஒரு தாய்மையின் மனக் குமுறல்களை ஒரு பெண்ணாலேயே இலகுவாகக் கண்டு வர இயலும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete