மழைப் பொழுதொன்றின்
தேனீர்கோப்பை
நான்!
சூடாக நிரம்பியிருந்தேன்!
பருவங்கள்
என்னை
மாற்றியமைத்தன...!
நீ என்னை
பனித் தேசத்தின் மதுக்குவளை
ஆக்கியிருக்கிறாய்!
தேன் வண்ணத் திரவத்தால்
மூடுண்டிருக்கிறேன்!
எனக்கொரு கௌரவம்
கொடுத்ததாய் எண்ணி...
ஒளிரும் திரவம்
பளபளத்தசைகிறது என்னுள்!
நான் தேனீரால்
நிறைக்கப்படுவது
இனி,
என் வசத்தில் இல்லை!
உனது தாகம் தீர்க்க,
நீ கேட்கும் வேளைகளில்...
கேட்கும் திரவங்களால்
நிரப்பப்படுவேன் நான்!
எனது கோப்பையை
எனது விருப்பத்திற்கு
எப்போது இனி என்னால்
நிரப்பவியலும்...?
நிரம்பிய குவளையின்
மீந்திருக்கும் சிறு வெளியில்
இப்போது எனதுயிர்
ஓடித் திரிகிறது...!
தயவு செய்து,
அந்தச் சிறிய இடைவெளியையும்
உன் மூச்சுக் காற்றால்
இட்டு நிரப்பிவிடாதே!
அங்கே தான் இருக்கிறது!
நான் இழந்த
மழைப் பொழுதின் தேனீர் வாசனையும்...
கூடவே என் உயிரும்!
-தாட்சாயணி
நான் வாசித்த நல்ல கவிதைகளுள் ஒன்று. உடல் மொழி இல்லாமலே பெண்மனசின் எதிர்க் கவிதையை ஆழமாகவும் அழகுறவும் சொல்ல முடிந்திருப்பது உங்கள் கவிதை உருவத்தின் சிறப்பு
ReplyDeleteஉங்கள் பாராட்டே எனது வளர்ச்சி.மிகவும் நன்றி.
ReplyDelete