Monday, January 23, 2012

ஒரு பிள்ளையாரின் கதை

      

     
பிள்ளையாருக்குச் சலிப்பாக இருந்தது.
    
கலகலவென்று என்ன மாதிரி இருந்த இடம்.
    
ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து அவர் முன் மன்றாடிச் சென்றிருப்பார்கள்.அவர்களில் ஒருவரைக்கூட இன்று அயலில் காணமுடியவில்லை.
    
...வென்று வானம் பார்த்த வெறுவெளி.மனிதர் கால்படாமற் போனதால் குத்துச் செடிகள் ஆங்காங்கு பூமியைப் பிளந்து வானத்தை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன.
    
ஒரு சிறிய ஓலையால் வேய்ந்த கொட்டிலில் பிள்ளையார் வெயிலையும் மழையையும்   தன்னிச்சையாய் அனுபவித்தபடி விழித்துக்கொண்டிருந்தார்.முன்னால் போடப்பட்ட திரைச்சீலை காற்றில் அலைந்து ஒதுங்கிக் கிடக்க,-9 வீதியால் செல்கின்ற பேருந்துகளையும் பயணிகளையும் பிள்ளையார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த்தார்.
    
ஆம்.பிள்ளையாரின் வசிப்பிடம் கண்டி வீதிக்கு அண்மையிற் தான்.கைதடியில் பனைவள ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள பெரிய வளவின் ஒரு  ஓரத்தில் தான் உட்கார்ந்திருக்கிறார் பிள்ளையார்.சின்னதாய்ச் சுவர் எழுப்பி மூன்று பக்கங்களையும் மறைத்து,செங்கட்டிச் சிவப்பிலும்
 
வெண்மையிலுமென  வரிவரியான வர்ணம் தீட்டி அந்தக் குட்டி இடம் ஆலயமாக்கப்பட  விளைந்த ஆர்வத்தின் வெளிப்பாட்டை காட்டியது.முன்னே திரைச்சீலை விலகலினூடு பிள்ளையாருக்கு அவ்வப்போது வெளியுலக தரிசனம் கிடைத்துக்கொண்டிருந்தது.
   
பிள்ளையார் அங்கு ஆலயம் கொண்ட கதை சுவாரசியமானது.ஆலயங்கள் உருவாகுவதற்கு வரலாறுகள் இருக்கும்.இங்கேயும் அப்படித்தான்.கூட்டம்கூட்டமாக வாழ்பவர்கள் தமக்கென்று நம்பிக்கை ஊட்டவும்,மகிழ்வையும்,துக்கத்தையும் பகிரவும் சிறுசிறு  குழுக்களிடையே இவ்வாறு ஆலயங்களை உருவாக்கிக் கொண்டமை வரலாறு.கோவில் இல்ல ஊரில் யாரும் குடியிருக்கவும் மாட்டார்கள்.ஆனால்,கோவில் இருந்த ஊர்களில் வசித்தவர்கள்கூட குடிஎழும்பவேண்டியதாயிற்று.போர் விரட்ட விரட்ட அவர்கள் கோவிலென நினைத்த சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்தார்கள்.இடம்பெயர்தலின் முடிவில் கூட்டம் கூட்டமாய் சிறுசிறு நிலப்பகுதிகளுக்குள் அடைக்கப்பட்டார்கள்.ஒருநாள்,இருநாள் என மாறி வாரங்கள் கழிந்து,மாதங்களானபோது பொறுக்க மாட்டாமல் அவர்கள் கேட்டே விட்டார்கள்.
   '
சாப்பாடு வேண்டும்','தண்ணீர் வேண்டும்','மருந்து வேண்டும்' எனக் கேட்டவர்கள் ஒருநாள் கேட்டார்கள்.'எங்களுக்குக் கடவுள் வேண்டும்','கோவில் வேண்டும்' என்று. தொடர்ச்சியான அவர்களின் வேண்டுகைக்குப் பிறகு பிள்ளையார் அங்கு எடுத்து வரப்பட்டார்.சுற்றிவரச்சின்னச்சுவர் எழுப்பி,வர்ணமடித்து கூரைஎழுப்பி,மணியொலிக்க அந்தச் சனங்களுக்கு அருள் பாலிக்கவென்று எழுந்தருளினார்.
   
மற்றைய கடவுளரை விடப் பிள்ளையார் மிக இலேசானவர்.எங்கேயாவது ஒரு மரமோ,கல்லோ இருந்துவிட்டால் போதும்.அடியார்களின் வசதிக்கேற்ப,அவ்வவ் இடங்களில் குடியிருக்க ஆரம்பித்துவிடுவார்.ஆலடி,அரசடி என்று எங்கெங்கு மரம் இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்த விக்னவினாயகர் அமர்ந்திருப்பதைக் காணலாம்.ஆனால்,அப்படி மரங்களுக்குக் கீழ் அமர்ந்திருக்கின்ற பிள்ளையார்கள் நீண்டகாலச் சரித்திரத்திற்குள்  உட்படக்கூடிய சாத்தியம் குறைவு.அப்படித்தான் இரு வருடத்திற்கு முன் ஏற்பட்ட நிஷா புயலிலும் அதிகப் பிள்ளையார்கள் அடையாளம் இல்லாமல் போனார்கள்.நுணாவில் பகுதியில்  வீதியோரம் மருதமரத்தின்கீழ் சிறியதொரு கோபுர அறைக்குள் அருள்பாலித்துக்கொண்டிருந்த பிள்ளையார்,அப்படியே அந்தப்புயலில் சிக்கி,பிடரி அடிபட்டதுபோல் மல்லாந்து விழுந்து கிடந்தார்.இரண்டு,மூன்று நாட்களுக்குள் அவரை அவரது பக்தகோடிகள் நிமிர்த்திவிட்டார்கள். வெள்ளத்துக்குள் உடைமைகள் இழந்து தவித்துக்கொண்டிருந்த ஏழை,எளியவர்கள் இழந்தவற்றை மீளப் பெறுவதற்கிடையில் பிள்ளையாரின் பக்தகோடிகள் திரும்பவும் சுவர் எழுப்பி கோபுரமாக்கி கம்பிக்கதவு வைத்து அவரை உள்ளே அமர்த்தி விட்டார்கள்.அங்கு விடிகாலையில் எப்போதும் 'செம்பரத்தம்பூ' கிடைத்துக்கொண்டிருந்தது பிள்ளையாருக்கு.
   
இங்கென்றால் பிள்ளையார் வறண்டு போய்க் கிடந்தார்.சிறுபூ,தீர்த்தம் எதுவும் கிடையாது.வெயிலிலும் காய்ந்து,மழையிலும் அபிஷேகம் கண்டு ஆனந்தம் கண்டுகொண்டிருந்தார்.எப்போதேனும் வீசுகின்ற காற்றில் எற்றுப்படுகின்ற சருகுகளே அவர்முன் பூக்கள்போல விழுந்துகொண்டிருந்தன.ஒரு தீபம்...வெளிச்சம்...ம்ஹும்...எதுவும் இல்லை.கற்பூரவாசம்,ஊதுபத்தி,சந்தனம்,குங்குமம்,விபூதி இவற்றின் கலவை  மணங்கண்டு ரொம்பவே நாளாயிற்று.
நிறைய வர்ணங்கள் பூசிய,மூன்றடியில் நிமிர்ந்திருக்கும் அந்த நுணாவில் பிள்ளையாருக்கும்,கன்னங்கரேல் என்றிருக்கும் இந்தக் குட்டிப் பிள்ளையாருக்கும் தான் எத்துணை வித்தியாசம்?இவருக்கும் எண்ணெய் கிடைத்திருந்தால் கறுப்பென்றாலும் 'பளபள'வென்று இருந்திருக்கலாம்.முன்பென்றால் ஆட்கள் சூழ இருந்தபோது பரவாயில்லை.பிச்சைக்காரன் தனக்குக்கிடைப்பதில்  'சொச்சத்தை'த் தன்பின்னே ஒட்டித் திரியும் நாய்க்dகுப் போடுவதுபோல்,அவர்களும் தமக்கு எதுவும் இல்லாவிட்டாலும்  தங்கள் நிலைக்கேற்றாற்போல் பிள்ளையாரையும் அவ்வப்போது  கவனித்துக்கொண்டார்கள்.பிச்சைக்காரன் வசதி கிடைத்துப் போய்விட்டது போல அவரோடு இருந்தவர்கள்,இப்போது தமக்கு உரித்தான ஏதோ ஒரு இடத்துக்குப் போய்விட்டார்கள்.அவர்கள் இடம்பெயர்ந்து வந்தபோது அவர்களுக்காக இங்கு குடிவந்தவர்தானே பிள்ளையார்.அவரவர் தங்கள்,தங்கள்  இடத்துக்குப் போக முடியாவிட்டாலும் ஏதோ ஒரு இடத்திற்குப் போனபிறகு பிள்ளையார் இப்படித்தான் தனியே விடப்பட்டார்.
    '
சுள்'ளென்று வெயில் எரித்தது.அனல் தகிக்கும் வெயிலை இப்போதுதான் அதிகமாய் உணர முடிகிறது பிள்ளையாருக்கு.முன்பு வெயிலாய் இருந்தாலும் ஆட்பஞ்சம் இருக்காது.மாறிமாறி யாராவது வந்துகொண்டேயிருப்பார்கள்.அப்படிப் பிள்ளையாரை யாரும் தனியே விட்டுவிட்டாலும் கூட அவருக்குப்  பொழுதுபோக்கிற்குப் பஞ்சம்  இருக்காது.
   
எந்தக் கிராமத்திலுள்ள கோவிலிலும் இப்படி   நிறைந்த சனம் திருவிழாக் காலத்திலன்றி ஒரு போதும் கூடியிருக்காது.அந்த விதத்தில் இந்தப் பிள்ளையாரைச் சுற்றி எப்போதுமே கலகலவென்று ஒரே கூட்டம்.எப்போதும் ஆரவாரித்திருக்கும் அவ்விடம் அந்த நாட்களில்  முட்கம்பிகளால் சுற்றிவர வளையமிடப்பட்டிருந்தது.யாரும் வெளியே போக முடியாது.
உள்ளே யாராவது  வெளி ஆட்கள் வரவேண்டி இருந்தாலும்,உரிய அனுமதி எடுக்கப்பட்டே வர முடிந்தது.சில பெரிய 'தலைகள்இலகுவில் வந்து போகமுடிந்தது என்பது வேறு விடயம்.ஆனால்,பிள்ளையார் அங்கு வந்து குடி ஏறுவதற்கே விசேட அனுமதி எடுக்க வேண்டி இருந்தது.எப்படியோ மிகுந்த சிரமப்பாடுகளுக்கு அப்பால் அங்கு குடிவந்த பிள்ளையாருக்கு ஆரம்பத்தில் அங்கு இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் போலவே தோன்றிற்று.ஏனெனில் ஒவ்வொருவரது புலம்பலும் அப்படி.
    "
பிள்ளையாரப்பா...உன்னை மட்டும் தானையப்பா,கடைசி வரைக்கும் நம்பி இருந்தன்.என்ரை பிள்ளையை  என்ரை கண்ணுக்கு முன்னாலை சிதற வைச்சிட்டியேப்பா..."
   
அது சீதேவிப்பாட்டி அழுத அழுகை.இராமநாதபுரத்தில் இருந்த பிள்ளையாரோடு சீதேவிப்பட்டி வலு சிநேகம்.
   
எல்லாப் பிள்ளைகளையும் கரை சேர்த்தபிறகு தனது வலதுகுறைந்த வாய்பேசமாட்டாத முப்பது வயது மகனைக் காப்பாற்றுமாறு சீதேவிப்பாட்டி எத்தனையோ முறை பிள்ளையாரை இறைஞ்சியிருக்கிறாள்.
    "
அது பாவம்,வாயில்லாத பூச்சி,அந்தச் சீவனை எடுத்துப் போட்டியேப்பா..." பிள்ளையார் மௌனித்துப் போயிருந்தார்.சீதேவியின் கேள்வியில் நியாயம் இருந்தது.ஆனால் கர்மவினை...
    "
கர்மவினைஎண்டால் அங்கை செத்த எல்லாருக்கும் ஒரே  கர்மவினைதானோ...? நீ என்ன விசர்க்கதை கதைக்கிறாய்...?
   
பாட்டி உரிமை கொண்டு குரல் உயர்த்திவிடுவாள்.அதனால் பிள்ளையார் எதற்கும் பதில் சொல்வதில்லை.
   
ஒவ்வொருவர் திருப்திக்கும் பதில் சொல்ல வெளிக்கிட்டால் அது கடைசியில் வாதப்பிரதிவாதமாகி  அதன் காரணத்தால் அவர்கள் பிள்ளையாரை அப்படியே பெயர்த்துப்போய் அப்பால் வீசிவிடவும் கூடும்.அதனால் பிள்ளையார் பேசாமலே இருந்தார்.அத்தனைபேரின் அழுகையையும் காதில் வாங்கிக்கொண்டு.
   
ரதிமலரும்  நாளும்பொழுதும்  பிள்ளையாரின் காலடியிலேயே வந்து உட்கார்வாள்.அவளும்,தேசிகனும் சுதந்திரபுரத்திலே சேர்ந்து வாழ்ந்தது ஐந்தாறு மாதங்கள்தான்.அதற்குள் சண்டை வலுத்துவிட்டது.எப்படியோ,ஷெல்லுக்கும்,குண்டுக்கும் இடையில் தவழ்ந்து,தவழ்ந்து வெளியேறிவிட்டார்கள்.அவர்கள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தவர்கள்தான்.அப்போது அங்கே வாழ்ந்தவர்களில் யார்தான் பயிற்சி எடுக்கவில்லை.யாரோ காடிக்கொடுத்ததன் பலன்,அவனைத் தடுப்புமுகாமுக்கு அனுப்பிவிட்டார்கள்.அவள் கதறக்கதற,அவனை விட்டுவிடுமாறு கெஞ்சக் கெஞ்ச விசாரித்துவிட்டு,விட்டுவிடுவதாகக் கூறிக்கூட்டிக்கொண்டு போனார்கள்.ஆனால்,இன்னும் விடவில்லை.இவள் இங்கே இந்த முகாமுக்குள் அடைபட்டுக் கிடந்தாள்.முன்பென்றால் பிள்ளையாருக்கு ஒரு அறுகம்புல் எடுத்து வைக்கக் கூட அலட்சியம் காட்டுபவள்.இப்போது நுணாவிலிலிருந்து   இடையிடையே சாப்பாடு கொண்டுவரும் சித்தியிடம் பூக்கள் கொண்டுவரச் சொல்லி மாலை கட்டிப் பிள்ளையாருக்குச் சாத்துகிறாள்.
    "
இவ்வளவு நாளும் உன்னை நான் ஏறெடுத்துக் கூடப் பாக்கேல்லைஎண்டோ,என்ரை புருசனைப் பிரிச்சுப் போட்டாய்...என்ரை மனிசனை விடப்பண்ணு.நான் வெளிலை வந்தவுடனை உனக்கு நூற்றெட்டுத் தேங்காய் உடைப்பன்..."
   
பிள்ளையாரின் மௌனம் இன்னும் கலையாமல் இருக்கும்.
    "
குட்டிப் பிள்ளையாரப்பா..." மெல்லிய மழலைக்குரல் ஒன்று கேட்பது போலிருந்தது பிள்ளையாருக்கு.தலையைச் சிலிர்த்துக்கொண்டு விழித்தார்.
   
யாருமில்லை...
   
அப்படியானால்,யாருடைய குரல் அது? ஓவியா ... கூப்பிடுகிறாள்.நாலுவயசுப் பச்சை மண்.
    "
எனக்கு என்ரை அம்மா வேணும்.பிள்ளையாரப்பா...."
   
அங்கு இருந்த காலத்தில் அவளும்,அவள் அக்கா காவியாவும் மனதுருகிக் கேட்ட விடயங்கள்.மனைவியும்,குழந்தையும் காயப்பட்டு அனுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுவிட,
இந்த இரு சிறிசுகளோடும் தனியே சரிக்கட்ட முடியாமல் மல்லாடும் செங்கீரன்.பாசம் நிறைந்த அந்தப் பிள்ளைகள்,சீரும் சிறப்புமாயும்  வாழவேண்டிய வயதில்  அந்த முகாம் வாழ்வில்
உபத்திரவப்பட்டாலும் அவர்கள் பிள்ளையாரை மறக்கவில்லை.
   
இப்படிப் பலவிதமான கதைகளையும் கேட்டுக்கேட்டு,மனநிம்மதியைத் தொலைத்திருக்கும் பிள்ளையார்,தனது அடுத்த தந்தத்தையும் பிடுகி எழுதத்தொடங்கினால் இந்த உலகத்திற்கே ஒரு துயரகாவியம் கிடைத்துவிடும்.ஆனால்,அதனால் எந்த ஒரு பயனும் விளைந்துவிடப்போவதில்லை என்பது தெரிந்ததுபோல் பிள்ளையார் பேசாமலே இருந்தார்.
   
இந்தத் துன்பதுயரங்களிலேயே ஒரேயடியாய் அடிபட்டுப் போகாமல் மீளவும் தங்கள் வாழ்நிலைகளைக் கட்டி எழுப்பும் எண்ணம் கொண்டவர்களும் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்தார்கள்.
    "
கெதியிலை வெளிலை போடோணும் பிள்ளையாரப்பா...இந்த நரகத்திலையிருந்து விடுதலை கொடு" என்று வேண்டாத ஆட்கள் இல்லை.எல்லாரது ஆவலும் விடுதலை என்ற ஒன்றைக் குறிப்பதாகவே இருந்தது.ஆனால்,அவர்கள் நினைத்ததும்தான் என்ன?வெளியில் போகக் கூடிய சாத்தியம் தான் வாய்க்கவில்லை.மதியம்வரை வயிற்றுப்பாட்டுக்காக கூட்டுச்சமையல் நடந்துகொண்டிருப்பது பிள்ளையாரின் கண்களில் படும்.எத்தனை கோயில்களில் அன்னதானம் வைப்பதற்கென்று பெரிய கிடாரங்களில் சமையல் செய்வதை பிள்ளையார் வேடிக்கை பார்த்திருப்பார்.அப்படித்தான் இங்கும்.ஆனால்,ஒவ்வொரு நாளைக்கும் ஆட்களை மாற்றிப்போட்டு சமைத்தார்கள்.எப்போதும், கோயிலில் நடக்கும் அன்னதானங்களில் மரக்கறி வாசத்தையே அறிந்து பழகிய பிள்ளையாருக்கு இங்கு பக்கத்தில் நிகழும் கூட்டுச்சமையல் வாசமாக 'மச்சமாமிசத்'தின் வாசமும் எட்டத் தொடங்கியிருந்தது.பிள்ளையாருக்கு ஆரம்பத்தில் அந்த வாடை ஒத்துக் கொள்ளாமலிருந்தாலும்,நாளடைவில் அந்த வாடை பழகிப் போயிற்று.முகாமில் இருக்கின்ற 'சுப்பிரமணிய அய்யர்' குடும்பம்தான் அதனால் கொஞ்சம் கஷ்டப்படுவதாக பிள்ளையாருக்கு ஒரு உறுத்தல்.'நெடியகாட்'டில் பூ வைத்துப் பூசை செய்த அந்த அய்யருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்து விடவேண்டும் என்றுதான் துடித்தார்.ஆனால்,எதுவுமே செய்துவிடமுடியவில்லை.
   
மதியம் தாண்டி மாலைப் பொழுதானால் இளைஞர்கள் பந்தடித்து விளையாடுவார்கள்.
    "
நல்லம்,நல்லம்,சாப்பிட்டு சும்மா தூங்கக் கூடாது.இப்பிடி இருந்தாத்தான் வெளியிலை போனாப்பிறகு நல்ல வேலை செய்யலாம் ..."
   
அங்கிருந்த புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 'சோமபால' அவர்களை ஊக்குவித்தபடியே சொல்லுவான்.
   
அடிக்கடி அங்கிருப்பவர்களை அவன் விசாரணை செய்வான்.அவனது விசாரணை எவ்வளவு காலத்திற்கு நீளும் என்று அவனுக்கே தெரியாது எனச் சில இளைஞர்கள் பெருமூச்செறிவார்கள்.
   
பிள்ளையார் அந்த விளையாட்டுக் கூச்சலுக்குள் கொஞ்சம் உற்சாகம் பெற விழைவார்.சிலவேளைகளில் பந்து இவரது முற்றத்தில் விழும்.ஓடிவரும் இளைஞர்கள் சத்தமாய் ஆர்ப்பரித்துப் பந்தைப் பொறுக்கிக்கொண்டு போவார்கள்.சில பெரிசுகள் பிள்ளையாரின் முற்றத்தில் அமர்ந்து விளையாட்டை ஆற அமரப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.எல்லாக் கதைகளும் பிள்ளையார்  கேட்டுப் பழகிய ஒரே விதமான கதைகளாயிருக்கும் .
   
பிறகு,கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இடத்தில் ஆட்கள் குறையத் தொடங்கினார்கள்.அறுபது,எழுபது என்று ஆட்களை இடைக்கிடையே வந்து பெரிய பேருந்துகளில் ஏற்றிக்கொண்டு போனார்கள்.
   
சிலரை முகாம் மாற்றப்போவதாய் சொன்னார்கள்.மற்றும் சிலரை விடுவிக்கப் போவதாய் சொன்னார்கள்.
   
விடுவிக்கப்பட்டவர்கள்,பிள்ளையார் முன் வந்த தோப்புக்கரணம் போட்டுக் குட்டிக் கும்பிட்டுவிட்டு குதூகலமாய் வெளியேறினார்கள்.சுதந்திரக்காற்றினைச் சுவாசிப்பதென்பதன் அர்த்தம் இதுதானோ...?
   
விடுவிக்கப்படாதவர்கள் வந்து முறையிட்டார்கள்.
   
பிள்ளையாரால் என்னதான் செய்யமுடியும்?
   
பேசாதிருந்தார்.
   
மீண்டும்,கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இடத்தில் ஆட்கள் விடப்பட்டார்கள்.ஆயிரக்கணக்கில் தங்கியிருந்தவர்கள் நூறாய்,பத்தாய்,ஒன்றாய் சுருங்கி ஒருவருமே இல்லை என்றாயிற்று.
   
முன்னே அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பாடசாலை ஒவ்வொரு குடில்குடிலாய் அகற்றப்பட்டது.இந்த முகாமுக்குள்ளும்,ஓலைக் கூரைகளாலும்,தறப்பாள்களாலும் போர்த்தப்பட்ட குடிசைகள் ஒன்றொன்றாய் கழற்றப்பட்டன.முட்கம்பிகள் அகற்றப்பட்டன.சீருடைகள் அப்பால் போயின.
   
பிள்ளையாரின் குடில் அப்படியே இருந்தது.மேல்கூரை வெயிலிலும்,மழையிலும் இற்றுப்போனது.சுவரின் கடுஞ்சிவப்பு வண்ணக்கோடுகள் நிறம் மங்கித் தோன்றின.காற்றிலும்,வெயிலிலும் வெளுத்துப்போன திரைச்சீலை ஒதுங்கி ஆடியது.
   
பிள்ளையாரை விடுவிக்க யாரும் இல்லை.
   
முட்கம்பி வேலி இல்லை.
   
சீருடையுடன் இராணுவத்தினர் இல்லை.
   
குடில்கள் கிளப்பப்பட்ட இடத்தில் மக்கள் விடுவிக்கப்பட்டு ஒரு வருடமானபிறகு குத்துச்செடிகள் குபீரெனப் புறப்பட்டு அந்த இடத்தில் ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒருசேரக் குவிந்திருந்ததை மறைக்க முயற்சித்துக்கொண்டிருந்தன.
   
வெறும் கட்டடமாகவே பல காலமாய் வெறித்திருக்கும் பனைவள ஆராய்ச்சி நிலையம் குறுங்காலக் கலகலப்போடு,மீளவும் அந்த மயான அமைதியில் மூழ்கிக் கொண்டது.
   
பிள்ளையாருக்கு இப்போது தனிச் சிறைக்குள் இருப்பது போலான பிரமை.
   
தன வலது குறைந்த பிள்ளையை பறித்து விட்டதற்காக சீதேவிப்பாட்டி எந்தப் பிள்ளையாரிடம் இப்போது தன மனக்குறையைக் கொட்டிக் கொண்டிருக்கிறாளோ தெரியாது.
   
தடுப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்த ரதிமலரின் கணவன் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனா? இல்லையா?அதுவும் தெரியாது.
   
அனுராதபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கென அனுப்பப்பட்ட ஓவியாவின் தாயும்,தம்பியும் சுகமாகத் திரும்பி வந்து இவர்களோடு சேர்ந்தார்களோ...?அதுவும் தெரியவில்லை.
   
எல்லாவற்றையும் அறிவதற்கு ஊரை ஒரு சுற்றுச் சுற்றிவர வேண்டும்போலிருக்கிறது பிள்ளையாருக்கு.
   
அவரை யாரும் விடுவிக்கவுமில்லை.விடுவிக்கப் போவதுமில்லை.
   
தூரத்திலிருந்த கிணற்றில் நாலைந்து பெண்கள் குடத்தோடு வந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு போகிறார்கள்.
   
கொழும்பிலிருந்து வருகின்ற பேருந்துகள்,வீதிப்பள்ளங்களில் ஏறி இறங்கித் தயங்கி நகர்கின்றன.
   
பிள்ளையாரின் திரைச்சீலை ஆடி அசைகிறது.
   
எல்லோரையும் விடுவித்த பிள்ளையாரை விடுவிக்கப் போவது யார்...?
   
பிள்ளையார் எப்போதும்போல ஒன்றுமே பேசாமல் வீதியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

                                                                                                                                                        -
ஜனவரி 2011 ,தினக்குரல்.       

4 comments:

  1. https://www.facebook.com/gowtham.anurag


    நன்றி தோழி கதை நம் இனத்தின் அறுபது ஆண்டு கால போரட்டத்தின் வலிகளை எடுத்து உரைகிறது. கெளதம் அனுராக் .

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. தடையுள் முடங்கிய மனிதர்களும்
    அடைபட்டுக் கிடைக்கும் பிள்ளையாரும்
    விடுதலை வேண்டுமென .....
    வரிகளுக்கிடையே பல வரிகளாக
    மெளன மொழியில் சொல்கின்றன.

    ReplyDelete
  4. தங்கள் கருத்துக்கு நன்றி Doctor.

    ReplyDelete