எப்போதும் உன்னிடம் யாசித்துக் கொண்டிருப்பதே என் தொழிலாகிப் போயிற்று.
கருணை சொரியும் உன் முகத்தில் சில வேளைகளில் கனல் தெறிக்கிறது.
நான் ஒரு யாசகன் என்பதும்,நீ என்னைப் போஷிப்பவன் என்பதும் ஒரு நொடியில் உலகிற்குப் புரிந்துபோய் விடுகிறது.
யாசிப்புகளிலிருந்து விடுபடவேண்டும் என்றுதான் எப்போதும், எண்ணுகிறேன்.
இருந்தாலும்,யாசிப்புக்கள் அற்றுப் போகிறபோது உன்னோடு பேச எதுவுமேயில்லாது போய்விடுகிறது.
மௌனத்தின் சுவர் தகர்த்து,எமக்கிடையிலான இடைவெளியை உடைக்க,யாசகம் எனக்குத் தேவையாகத்தானிருக்கிறது.
யாசிக்காத போதுகளில் உன்னை ஒரு நண்பனாய் எண்ணி உரையாடமுடிந்ததில்லை.
உனக்கும்,எனக்கும் எவ்வளவு பேதம்...
நீ உன்னதமான மனோதர்மங்களால் நிறையப் பெற்றிருக்கின்றாய்.
நானோ உலோகாயுதங்களால் சூழப்பட்ட சிறு பிறவி.
என்னிடமிருக்கின்ற ஆசாபாசங்கள்,தளைகளிடமிருந்து,விடுபடுவதற்கான சாத்தியங்கள் எதுவும் இப்போதைக்கு இல்லை.
என்னை அணுகும் துன்பங்களிடையே நான் உன்னைக் காண்கிறேன்
அவ்வேளைகளில் உன்னை மன்றாட்டமாய் வேண்டிக் கொள்வதைத் தவிர வேறென்ன வழி...?
அப்போது தான் யாசகத்தின் பொருளைப் பரிபூரணமாய் நான் உணர்கிறேன்.
உனது சந்நிதியில் துன்பங்கள் சதிராடிப் போட்ட சிதறல்களாய் வந்து நிற்கிறேன்.
எனது மனத்துகள்களை ஒன்றாக்கி என்னைச் சிற்பமாக்குகிறாய் நீ.
வெளியே வருகின்றபோது என் மதிப்பு பலமடங்காகியிருக்கின்றது.
ஆனால்,நான் அறிவேன்.
துன்பத்திலிருந்து வனைந்து வனைந்து என்னை நீ உருவாக்கியிருக்கின்றாய்!
புயலில் அலைக்கழிந்து,அலைந்து,உலைந்து தடுமாறுகிறேன்.
மயங்கும் தறுவாயில் பற்றக் கிடைத்த சிறு கட்டையாய் நீ மாறியிருக்கின்றாய்!
திருவிழாவில் தொலைந்த சிறு குழந்தையாய் உன்னைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன்.சுற்றிவரத் தெரிகின்ற கண்ணைக் கவரும் காட்சிகளை விடுத்து,மனது உனது நினைப்பிலேயே சுற்றித் திரிகிறது.
உன்னைத் தேடி அலையும் மனது,சூழத் தெரியும் பயங்கரங்களிலிருந்து மீள உன் துணையை அவாவுகிறது.
கருமுகிலைக் கண்டவுடன் தோகை விரிக்கும் மயில் ஒன்றிரண்டு சிறகுகளை உதிர்த்துவிட்டுப் போவதுபோல,உன்னைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தம் கனவுக்குள் என் கண்ணீரை உதிர்க்க வைக்கிறது.
கண்ணீரின் மீதான உனது இரக்கம் பற்றிப் பூரணமாகவே அறிந்திருப்பதால்,எனது கண்கள் உனக்கான கண்ணீரை வஞ்சகமின்றி வார்க்கின்றன.
சொற்களை விடவும்,வார்த்தைகளைவிடவும்,உன்னை அருகில் சென்று,தொடுவதற்கான அருகதை கண்ணீருக்கு நிறையவே உண்டு.
கண்ணீர் உன் பாதங்களில் தீர்த்தமென விழுகிறது.
இந்தக் கண்ணீரை ஏற்றுக்கொள்ள மிகவும் தகுதியானவன் நீ ஒருவன்தானே.
இந்த உலகில் மற்றவர்கள் முன் கண்ணீர் உகுக்க நான் என்றும் தயாரானதில்லை.
கண்ணீரின் பொருள் அவர்களுக்குப் புரிந்ததில்லை.
உன்முன் எந்தவித விகல்பமும் இன்றி உண்மையாய் வந்துவிழும் கண்ணீர்.
அதனால் உன் பாதங்கள் கழுவி பாவம் துடைக்க அவாவும் என் நெஞ்சு.
நானும் புல்லா ங்குழலாய் இசை வடித்து உன் செவிகளை நிரப்புகிறேன்.அது உன் செவிக்கு இனிக்கும் என்றுதான்.
ஆனால்,நீயோ,உன் செவிகளை இறுக மூடிக்கொள்கிறாய்.
யாசகம் கேட்பதற்குப் பதிலாக இந்த இசையெனும் கீதத்தைத் தந்துவிடவேண்டும் என்று நானும்,யாசகம் கொடுக்கையில்,பிரதிபலன் பெறக்கூடாது என நீயும் எண்ணிக்கொண்டபின்,முரண்பாடுகளில் நெரிபடுகிறேன் நான்.
நீ எனது வாழ்விற்கு வழிகாட்டுகிறாய்!
நான் உன்னைப் பின்பற்றி நடந்துகொண்டிருக்கிறேன்.உனது சொல் பற்றி நடக்கிற வேளைகளில் குழம்பும் மனது மாயைகளில் வழிமாறிப் போய்விடுகிறது.
புகை படிந்து மூடியிருக்கும் சாலைகளில் எந்தப் பாதை எங்கு செல்கிறது என்பதே தெரியவில்லை.வெறும் இரைச்சல்களால் நிரம்பியிருக்கிறது சாலை.
நான் உன்னிடம் இன்னுமாய் யாசித்துக்கொண்டிருக்கிறேன்,எனது எதிர்காலத்தைக் காட்டு என்று.
நீயோ,நீண்டவெளிப் பாதையை மறைத்தபடி நிற்கிறாய்.
எல்லாத் துன்பங்களையும் சகிக்கப்பழகு என்கிறாய்.
இனிக்கின்ற இன்பங்களை அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அனுபவி என்கிறாய்.
கூட்டிக்கழித்து,துன்பத்தையும் இன்பத்தையும் பெருக்கிப் பார்த்து, இந்த உலகத்திலிருந்து விலகிவிடலாம் என்று பார்த்தால் அதற்கும் அனுமதி அளிக்கிறாயில்லை நீ...
இன்னும் எனது யாசகம் முற்றுப் பெறாமலே...
யாசகனாயிருப்பதன் அர்த்தங்கள் புரியும் வரையில் உன்முன் மண்டியிட்டபடி நான்....
-தாட்சாயணி
No comments:
Post a Comment