Saturday, June 2, 2012

உள்ளே தான் உள்ளாயோ... ?


                                 

         வைகாசியின் வாசம் ஊரெங்கும் வீசிக்கிடந்தது.எந்த மரத்திலும் பூக்கள் அப்பிக்கிடந்தது.கொன்றை,மஞ்சள் தோரணங்களாய் பூக்களை அணிந்து காற்றிலாடியது.வேப்பம்பூ மணம் காற்றிலசைந்து வந்து நாசிக்குள் கிசுகிசுத்தது.
        மத்தியான வெயில் முற்றிக்கனிந்து இளகியிருந்தது.அரை மணிநேரத்திற்கு முன்பு அவ்விடத்திலிருந்த ஆரவாரம் தொலைந்திருந்தது.கோவிலுக்குள் நீண்ட அமைதி.கோவிலின் பக்கவாட்டு மண்டபத்தில் துண்டை விரித்துக் குருக்கள்  படுத்திருந்தார்.கொடிமரத்தின் கீழே பூக்கள் சிதறிக் கிடந்தன.கோவிலின் உள் மண்டப வாயில்கள் அனைத்தும் சாத்திக் கிடந்தன.வெளி மண்டபத்தில், கோவிலுக்குத் தொண்டு செய்யும் 'ரவியன்' கால்,கையைப் பரத்தியபடி மல்லாந்து படுத்திருந்தான்.நான்கைந்து சிறிசுகள் மட்டும் கோவிலுக்குள் பொழுதுபோக்கின்றி விளையாடிக்கொண்டிருந்தன.
         கோவில் குழாயடியில் சோற்றுப்பருக்கைகள் சிந்திக் கிடந்தன.நீர் தாராளமாய் ஓடி வடிந்திருந்தது.கோவிலுக்கு முன் முற்றத்தில் தேர் நின்றிருந்தது.இரண்டு வெண்புரவிகள் பூட்டிய தேர்.அழகாகக் கட்டப்பட்டிருந்தது.அந்தக் கோவிலில் தேர் இருக்கவில்லை.சகடையை நிமிர்த்தி அலங்கரித்து தேர் ஆக்கியிருந்தார்கள்.உள்ளே பலமான கம்பிகளை நட்டு,உச்சியிலிருந்து வண்ணச்சேலைகளை சுற்றிக் கட்டியிருந்தார்கள்.ஒவ்வொரு மூலைகளிலும், தென்னோலைகள்,கரும்புகள்,செவ்விளநீர்,நுங்குக்குலைகள் கட்டப்பட்டிருந்தன.தோரணங்கள் பசுங்குருத்துகளாக ஆடியசைந்தன.முன்புறப்புரவிகள் காற்றில் மெதுவாக ஊசலாடிக்கொண்டிருந்தன.
          ஆயிற்று. அந்த ஊரின் ஐம்பது,அறுபது குடும்பங்களுக்கும் ஏகபோக உரிமையாகவிருந்த முருகன் கோவிலின் தேர் உற்சவம் அன்று காலை மிக விமர்சையாக நடந்தேறி விட்டது.இந்தப்பத்து நாள்களில் அந்த ஊரே கொண்டாட்டமாயிருக்கும்.மதிய வேலைக்கு யாரும் சமைப்பதுமில்லை.கோவிலிலேயே அன்னதானம் இருக்கும்.கோவிலுக்குள்ளேயே ஒன்றுகூடி முருகனுக்கு ஒருபுறம்,திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்க, இன்னொரு புறம் அரிசி அவிய வைத்துமரக்கறிகளை வெட்டி குழையல்சோறு தயாராகிவிடும்.பூசை முடிய ஐம்பது குடும்பங்களும் வரிசை கட்டி உட்கார்ந்து  சாப்பிட்டு,கோவிலுக்கு வராதவர்களுக்கென,மீதிச்சோற்றைப் பகிர்ந்து வீட்டுக்குக்கொண்டு செல்வார்கள்.
         இன்றைக்கும் அப்படித்தான்.இன்று வழக்கத்தைவிடச் சனம் சற்றுக் கூடவாயிருந்தது.பக்கத்து ஊர்களிலிருந்தும் சிலர் வந்திருந்தார்கள்.தேர் உருண்ட வீதியில்,நீர் தெளித்த புழுதி காய்ந்து,நிலம் உலர்ந்திருந்தது.தேரின் தடம் சிலவிடங்களில் 'பளிச்'சென்று தெரிந்தது.இப்போது எல்லாம் ஆறி,ஆசுவாசமாய்,நீட்டி,நிமிர்ந்து இளைப்பாறுகிறது தேர்.சுவாமி ஊர் உலாப் போந்து,பச்சை சாத்தி,பிராயச்சித்த அபிஷேகம் கண்டு,உள்ளே சற்று ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார், எந்தத் தொல்லையுமின்றி.வெளியே வந்தால் போதும்.குஞ்சும்,குருமனும்,இளசும்,பெரிசுமாய் கேட்கின்ற கோரிக்கைகளுக்கு அளவுகணக்கில்லை.போதாக்குறைக்கு,மேளகாரர் வேறு அடித்துத் தூள் கிளப்பி விடுகின்றனர்.பக்திப்பரவசம் ஊற,பஜனைகளுக்கும் குறைச்சலில்லை.இப்போதுதான் எல்லாம் கொஞ்சமாய்ப்போல் ஓய்ந்திருக்கிறது.
        தேருக்கும்,கோவில் முகப்புக்குமிடையே நின்ற மருதமரத்தின்கீழ் 'லச்சுமி'ஆச்சி உட்கார்ந்திருந்தாள.அவளுக்கு முன்னால் கடகப்பெட்டி நிறையக் கச்சான் இருந்தது.இரண்டொரு பிளாஸ்டிக் டப்பாக்கள் இருந்தன.ஒன்றில் கற்பூரவில்லைகளும்,இன்னொன்றில் பலநிற இனிப்புக்களும் இருந்தன.அடுக்கடுக்கான கடதாசிப்பைகள் ஒருபுறம் இருந்தன.இன்னொரு பெட்டியில் சோளமும்,இன்னொன்றில் சிந்தாமணிக்கடலையும் பொலிந்திருந்தன. அவளருகே நீளமாய் ஒரு உரப்பை நிறைந்து காணப்பட்டது.அதனுள் மணல் படிந்த,உடைந்த தேங்காய்ப்பாதிகள் நிரம்பியிருந்தன.
       லச்சுமியாச்சி அருகிலிருந்த சீமெந்துத் திட்டில் தலையைச் சாய்த்தபடி,ஒழுங்கையை வேடிக்கை பார்த்தாள்.இன்றைக்கு அவ்வளவு நல்ல வியாபாரம் இல்லை.ஐஸ்பழ வான் வந்திருந்தது.சிறிசுகள் முழுக்க அதைத்தான் சுற்றிச்சுற்றி வந்தன.தேர் வீதிக்கு வரமுன்னமே அவன் சிறிசுகளைத் தன் பக்கம் வரப்பண்ணி விட்டான்.யாரும் கச்சான் வாங்கவில்லை.'ரவியன்' இடைக்கிடை வந்து, கடகத்துள் கைவைத்து  கிள்ளிக் கொண்டு போனது தவிர காசு கொடுத்து யாரும் கச்சான் வாங்கவில்லை.ஐஸ்பழ வான்காரன் வந்தாலும்தான் வந்தான்.அவளது வியாபாரம் படுத்துவிட்டது.
      "என்ன ஆச்சி ...இண்டைக்கு வியாபாரம் இல்லைப்போலை..."  தேர் பின்வீதிக்குப் போய்விட்ட நேரத்தில் ஐஸ்பழம் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த பையன் இவளோடு வலியத் தனகினான்.
      "பிழைப்பிலை மண்ணள்ளிப் போடவந்திட்டுக் கேக்கிறான் கேள்வி..." ஆச்சி 'பட்'டென்று  மூஞ்சியைத் திருப்பிக் கொண்டாள்.
      "ஆறுமுகசாமியே...நீதானப்பா பாக்கவேணும் எல்லாரையும்..." கை தேரின் திசை நோக்கிக் கூப்பியது.
      இப்போது அவன்களும் இல்லை.தேர் சுற்றி இருப்பிடம் வந்து,சனங்கள் கலைந்தபிறகு,அவர்களும் வானை உருட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.இவள் தான் இன்னும் இருக்கிறாள்,அங்கே நிலவிய வெறுமைக்குத் துணையாக.   
        ஆச்சி கொடிஏறிய நாளிலிருந்து இன்றுவரை இங்கே தான் பழியாய்க் கிடக்கிறாள்.கொடி ஏறினால் எப்படியும் முதலுக்குப் பழுதில்லாமல் வியாபாரம் நடக்கும்.
      வழக்கமாக ஊரிலிருக்கும் சின்னப் பள்ளிக்கூட வாசல்தான் அவளது இருப்பிடம்.இப்படி எங்கேனும்,கோவில் கொடி ஏறினால்தான் கையில் கொஞ்சம் காசு புரளும்.அதுவும் நகர்ப்புறத்துக் கோவில்களென்றால் இவளுக்குப் போட்டியாக பார்வதியும்,கனகம்மாவும் வந்துவிடுவார்கள்.இது ஊர்க்கோவில் என்பதோடு,இந்தக் கோவில் கொடி ஏறுகையில் அம்மனுக்கும்,பிள்ளையாருக்கும் இன்னொரு பக்கம் கொடி ஏறுவதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதுபோல்,ஒவ்வொரு திசைக்கும்,ஒவ்வொருவர் சென்றுவிடுவர்.அதனால் இவளுக்கு இந்தக் கோவில் மிஞ்சியது.ஆனால்,அதையும் அந்த ஐஸ்பழ வண்டிக்காரன் வந்து இன்று கெடுத்துவிட்டான்.
      ஆச்சிக்கு இந்தக் கச்சான் வியாபாரம்தான் ஆரம்பம் முதலே கைகொடுத்தது.பிள்ளைகளைப் பெற்று,வளர்த்து,ஆளாக்கி,கட்டிக் கொடுக்கின்ற வரைக்கும் ஆச்சி கச்சான் வியாபாரம் தான் செய்தாள்.ஆச்சியின் கணவர் கூலி வேலைக்குத்தான் போய்வந்தார்.அவரும் பத்து வருடங்களுக்குமுன்,வயலில் வேலை செய்யப் போன இடத்தில் ஷெல் பட்டுச் செத்துப் போனார்.ஆச்சி இப்போது மூத்தவனோடு தான் வசிக்கிறாள்.மூத்தவன் சந்தையில் தேங்காய் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான்.கச்சான் விற்பதை விட்டுவிட்டு,வீட்டில் நிம்மதியாக இருக்கும்படி அவனும் எத்தனையோ தரம் சொல்லி விட்டான்.அவளுக்குத்தான் முடியவில்லை. அவன் சொன்னால் அதற்காக கூடப்பிறந்த தொழிலை விடவா முடியும்...? கொப்பி ஒற்றையைக் கூம்பு மாதிரி சுற்றி அதற்குள் கச்சானைச் சுருட்டி பத்து சதத்திற்குக் கொடுத்த நாளிலிருந்து,சிறு பைக்குள் கச்சானைப் போட்டுக் கொடுக்கும் இந்தக் காலம்வரைக்கும் அவள் கச்சான் ஆச்சிதான்.அதைத் தூக்கிப் போட அவளால் ஒருபோதும் முடியவில்லை.மேலும்,பேரக் குழந்தைகளுக்கு,அவர்களின் விருப்பத்திற்கேற்ப,தன் கையால் ஏதாவது செய்வதற்கும் எந்தத் தடையும் வரக்கூடாது என்பதற்காகவும் அவள் தன் வியாபாரத்தைக் கைவிட விரும்பவில்லை.'ஏதும் வாய்க்கு வக்கணையாத் தின்னவேணும் எண்டாலும் அவனின்டை கையையே எதிர்பாக்குற....? ஏலுற காலம் மட்டும் என்ரை உழைப்பிலை வாழோணும் எண்டதுதான் என்ரை எண்ணம்...' என அடிக்கடி ஆச்சி சுகம் விசாரிப்பவர்களிடம் சொல்லிக்கொள்வாள்.
        உள்ளேயிருந்த சிறுவர் பட்டாளம் 'கொல்'லென்று வெளியே ஓடிவந்தது.வெறுமையாயிருந்த தேருக்குள் ஏறிக்குதித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.சுற்றிக்கட்டியிருந்த ஓலைகளையும்,தோரணங்களையும் பிடுங்கி விளையாடினார்கள்.ஒருவன் கட்டியிருந்த கரும்பை இழுத்தெடுத்துக் கொண்டு  ஓடினான்.ஐந்தாறு நிமிடங்களுக்குள்,அந்தக் கரும்பைத் துண்டுகளாய் முறித்து வாயிலிட்டுச் சப்பினார்கள்.முன்பக்கத்தில் விழுந்து கிடந்த தேங்காய் ஒன்றை சிதறும்படியாக ஒரு சிறுவன் போட்டுடைத்தான்.
        இன்னொரு சிறுவன் பத்து ரூபாவைக் கொண்டுவந்து நீட்டினான்.ஆச்சி,கச்சானைக் கிள்ளிப் பையிலிட்டு அவனிடம் கொடுத்தாள்.அவன் கோவில் படியிலிருந்தபடி கச்சானை உடைக்க ஆரம்பித்தான்.இரண்டுபேர் அவனைச் சூழ்ந்தார்கள்.ஆச்சி எழுந்துபோய் கொஞ்சம் முன்னர் சிதறிய தேங்காய்த் துண்டுகளைப் பொறுக்கி வந்து உரப் பைக்குள் சேர்த்தாள்.
         "பரவாயில்லை,நிறையத் தேங்காய்கள் அடிச்சிருக்கிறாங்கள்.கொப்பறாவுக்குக் குறைச்சலில்லை...." என முணுமுணுத்தாள்.
         மதியம் சாய்ந்து,மாலைப் பொழுதின் காற்று,தூக்கத்தை வரவழைத்தது.கோவில் சோற்றில் பசியும் தீர்ந்து விட்டது.இனி,தேரடித் திருவிழா முடிந்து  வீடு போக எப்படியும்,எட்டரை,ஒன்பது ஆகிவிடும்.இன்றைக்கு இரவு,அவ்வளவிற்கு சனம் வராது.சனம் தேர்த் திருவிழாக் களையில் அலுத்திருக்கும்.உபயகாரரும்,குருக்களும்,தொண்டுகாரர்களும் தான் இன்றைய பின்னேரத் திருவிழாவிற்கு வருவார்கள்.அதிலும்,தேரடித் திருவிழா தொடங்கவும் ஆறு மணியாகிவிடும்.ஆனால்,ஆச்சிக்கு அப்பத்தான் சாமியை வடிவாகப் பார்க்கமுடியும்.நல்ல சந்தோசமாக இருக்கும்.இவ்வளவு நாள் திருவிழாவிலும்,சனம் அடிச்சுப் பிடிச்சு முன்னுக்கு நிற்கும்.ஆனா,தேர் அண்டு பின்னேரங்களில்தான் ஆச்சிக்கு வடிவா சாமி கும்பிட முடியும்.தன்ரை பேரன்,பேத்திகளுக்காக ஆச்சி,அப்போது தான் வடிவாகக் கும்பிடுவாள்.
       ரவியன் திடுக்கிட்டு எழும்பினவன் போல் எழுந்தான்.குழாயைத் திறந்து முகத்திலடித்துக் கழுவிவிட்டு, 'கடலைக்கு உப்புப் போடோணும்' என்றவாறே மடைப்பள்ளிக்குள் நுழைந்தான்.உள்ளிருந்து 'கமகம'வென்று கடலை அவிந்த வாசம் எழுந்தது.அப்படியே வெளியே வந்தவன்,இவளது கடகத்துள் கைவைத்து ஒரு சிறங்கை கச்சானை அள்ளிஎடுத்தான்
      "உப்பிடியே அள்ளியள்ளி நீ என்ரை கடகத்தைக் காலி பண்ணிப்போடுவாய் போலை..." என்றாள் ஆச்சி.
      குருக்கள் சோம்பல் முறித்தபடி எழுந்தார்.உதவிக்கு நின்றிருந்த சிறுவயதுப் பூசகர்கள் ஓடியாடி அடுத்தவேளைப் பூசைக்குரிய ஆயத்தங்களைச் செய்யலாயினர்.
      தேருக்குள் மீண்டும் சலசலப்பு.கட்டியிருந்த இளநீர்க் குலைகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தான் ஒருவன்.மற்றவர்கள் அதை எப்படிப் பிளந்து குடிப்பதென்ற ஆர்வத்திலிருந்தனர்.கோவிலுக்குள்ளிருந்த சிறிய கத்தியை எடுத்துவந்து குத்தி,இளநீரை ஏந்திக் குடித்தனர்.
      "அடிபட்டு விழுந்து போடாதையுங்கோடா..." என்ற ஆச்சி அப்போது தான் அவனைக் கண்டாள்.
      "பேபியின்ரை பெடியன்.." என அவளது வாய் முணுமுணுத்தது.
      தூணோரம் ஒண்டியபடி நின்றிருந்தான் அவன்.
      எப்போது வந்தானென்று தெரியவில்லை.இளநீர் குடிப்பவர்களை ஒருவித ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
      பேபி,ஆச்சியிடம் எப்போதும் கச்சான் வாங்கிக் கொண்டிருந்தவள்.
     சின்ன வயதிலிருந்து,பள்ளிக்கூடம் முடிக்கும் வரைக்கும் அவள் ஆச்சியிடம் கச்சான் வாங்குவாள்.பிறகு திருவிழாக் காலங்களில் கோவிலுக்கு வந்தாலும்,மற்றக் கச்சான்காரிகளை விட்டுவிட்டு,இவளிடம் தான் கச்சான் வாங்கவருவாள்.ஐஸ்க்ரீம் வண்டிக்காரனைக் கண்டால் கூட,ஆச்சிக்காகக் கச்சான் வாங்குவாள் அவள்.பிறகு,அவள் இயக்கத்திலிருந்த ஒருவனைக் காதலித்து,அவனைக் கல்யாணம் செய்ய வேண்டி ஊரைவிட்டே செல்லவேண்டி வந்துவிட்டது.பேபியின் தாயைக் காண்கின்ற வேளைகளில் பேபியைப் பற்றி விசாரிப்பாள் லச்சுமி ஆச்சி.
       "அவள் எங்கை இருக்கிறாள் எண்டே தெரியேல்லை.எத்தினை பிள்ளையள் ஒண்டுமாத் தெரியேல்லை..." என்று புலம்புவாள் அவள்.அதற்குப் பிறகு சண்டைகள் வலுத்து,ஓய்ந்து முகாம்களுக்குள் ஆட்கள் முடங்கியபோது,பேபியின் தாயின் முயற்சிகள் பேபியைத் தொடர்ந்து தேடிக் கொண்டுதானிருந்தன.ஆனால்,பேபி  கிடைக்கவில்லை.கடைசியில் தெரிந்தவர்கள்,அறிந்தவர்கள் என்று விசாரித்த இடத்தில் அவளுக்கு ஆணும்,பெண்ணுமாய்ஒன்பது வயதிலும்,ஏழு வயதிலும் இரண்டு குழந்தைகள் இருந்தனவென்றும் புதுக்குடியிருப்பிலும்,உடையார்கட்டிலும் அவர்களைக் கண்டதாகவும் அவர்களுக்குத் தகவல் தெரிந்தது.அதற்குப் பிறகான விபரங்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.முகாம்களில் உள்ளவர்களின் பெயர்ப் பட்டியலில் அவர்கள் பெயர் பதியப்பட்டிருக்கவுமில்லை.அவர்களைப் பற்றிய தகவலே,இன்றி இருந்த வேளையில் திடீரென்று ஒருநாள் நீதிமன்றத்திலிருந்து பேபியின் தாய்க்கு அழைப்பு வந்தது.பேபி சண்டைக்குள் இறந்துவிட பேபியின் கணவன் தடுப்புமுகாமுக்குள் சிறைப்பட்டுவிட,அநாதரவான குழந்தைகள் சிறுவர் இல்லமொன்றில் பாரப்படுத்தப்பட்டிருந்தனர்.அதன்பின் அவர்களின் உறவுகள் ஆராய்ந்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்,பேபியின் தாயிடம் இரு பிள்ளைகளும் ஒப்படைக்கப்பட்டனர்.
         மகளைப் பறிகொடுத்த துக்கம் ஒருபுறம்.யுத்தத்துக்குள் அலமந்த குழந்தைகளின் உளப்பாதிப்பு மறுபுறம் என பேபியின் தாய் உருக்குலைந்து போனாள்.எனினும் அந்தப் பிள்ளைகளுக்காகத்தான் இன்னும் அவள் தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள்.
     "ராசு...இஞ்சை வாடாப்பா..." லச்சுமி ஆச்சி அவனைப் பரிவோடு கூப்பிட்டாள். அவன் ஒருகணம் அவளைப் பயத்தோடு பார்த்து விட்டு விலகி நின்றான்.
     "என்ரை குஞ்செல்லே...என்ன பயம்..." ஆச்சி கையைப் பிடித்து அழைத்தாள்.
     அவன் தயங்கித்தயங்கி அருகில் வந்தான்.
     ஆச்சி அவனை அருகில் அமர்த்தி,பை நிறையக் கச்சானை அள்ளிக் கொடுத்தாள்.
     அதைப் பார்த்துவிட்டு இரண்டு பையன்கள் அவனுக்கருகே வந்து கையை நீட்டினர்.அவன் அப்படியே பையைக் கை நழுவ விட்டான்.அவர்கள் அந்தப் பையை இழுத்தபடி அப்பால் ஓடினர்.
     "குழப்படிகாரங்கள் அவங்கள்...நீ ஏனப்பு குடுத்தனி..." என்ற லச்சுமி ஆச்சி இன்னொரு பைக்குள் கச்சானைப் போட்டு அவனிடம் தந்தாள்.
     "நீ சாப்பிடப்பு...அவங்கள் வரட்டும்.நான் பாக்கிறன்..."
     அவன் மிகவும் சிரமப்பட்டு கச்சான்களை உடைக்க ஆரம்பித்தான்.
     "அம்மம்மா வரேல்லையோ ...தேருக்கு...?"
     அவன் வெறுமே தலையை மட்டும் ஆட்டினான்.
     ஆச்சி கச்சான் ஒன்றை உடைத்து அதன் பருப்பை அவன் வாய்க்குள் ஊட்டினாள்.
     'பொத்'தென்று பலத்த சத்தமொன்று கேட்டது.
     "அம்மா..." என வீறிட்ட சிறுவன் கச்சான் பை சிதற நிலத்தில் கவிழ்ந்து படுத்துக் கொண்டான்.
     சத்தம் வந்த திசையில் ஆச்சி பார்த்தபோது அந்தப் பையன்கள் முழுதாயிருந்த பெரிய தேங்காய் ஒன்றை நிலத்தில் போட்டு உடைத்திருந்தது தெரிந்தது.
     அவன் விழுந்து படுத்திருந்த தோரணையைப் பார்த்து மற்றப் பையன்கள் 'கொல்'லென்று சிரித்தார்கள்.
         ஆச்சி பதறிப்போய் அருகில் வந்தாள்.
     "இதென்ன..சீச்சீ ...குழந்தைப் பிள்ளையள்  போலை..."
     அவன் எழும்பவில்லை.கண்களை இறுக மூடியிருந்தான்.
     "எல்லாரும் பகிடி பண்ணப் போகீனை,என்ரை செல்லம் எழும்படாப்பு..."
     ஆச்சி அவனைத் தூக்கி நிமிர்த்தினாள்.
     அவன் கண்களை இறுக மூடிக்கொண்டு ஆச்சியின் தோளில் முகத்தைக் கவிழ்த்தான்.
     "அம்மா...என்ரை அம்மா.."
     அவன் உதடுகள் விம்மிக்கொண்டிருந்தன.
     மற்றச் சிறிசுகள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்தன.
     "அழக்கூடா ...என்ன...நான் பிள்ளைக்கு நிறையக் கச்சான் தாறன்..."
     அவன் முகம் நிமிர்த்தவில்லை.
     "கச்சான் வேண்டாமே...அப்ப நான் பிள்ளைக்கு இனிப்புத் தரட்டே..."
     "அம்மா...அம்மா..." ஆச்சியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் அழுதான்.
     "அம்மாவோ ...ஓம்...பிள்ளையிண்டை அம்மா நெடுகலும் என்னட்டைத்தானை கச்சான் வாங்க வாறவ ..."
     அவன் 'வெடுக்''கென்று நிமிர்ந்தான்.
     "அம்மா ...இனி  வருவாவோ...?"
     ஆச்சி அந்தக் கேள்வியால் திணறினாள்.
     "ஏனப்பு அப்பிடிக் கேக்கிறாய்...?"
     "அம்மா...இப்பிடியொரு சத்தம் கேக்கேக்கை தான் எங்களைத் தனிய விட்டிட்டுப் போனவ.இனி எப்ப உங்களிட்டைக் கச்சான் வாங்க வருவா...?"
       "எப்பவெண்டாலும் வருவா..."
      "வந்தால் அம்மாவை இனிப் போகவிடமாட்டன்..."  அவன் கண்களைக் கசக்கியபடி தீர்மானமாய்ச் சொன்னான்.
      "ஓமோம் ...இனிமேல் அம்மாவைப் போகவிடக்கூடாது..." ஆச்சி அவனை அள்ளியெடுத்து மடியில் அமர்த்தினாள்.
      சுற்றி நின்று வேடிக்கை பார்த்த சிறுவர்கள் கலைந்து மறுபடியும் விளையாடப் போயினர்.
       ஆச்சி  வெறுமையாயிருந்த தேரை ஒரு வினாடி உற்றுப் பார்த்தாள்.
     "உனக்கென்ன...வருசா வருஷம் கொண்டாட்டம்...கொண்டாடுறதுக்கும் ஆக்கள் இருக்கினம்....இந்தப் பச்சைப் பிஞ்சுகள்...அதுகளுக்கினி ஆர் கதி...?" வாயிலிருந்து தன்பாட்டுக்கு வார்த்தைகள் புரண்டு  வந்தன.
     பார்வை கோவில் வாயிலை நோக்கி வெறுப்போடு திரும்பியது.
     "இன்னும் உள்ளுக்குத்தான் இருக்கிறியோ...இரு...இரு...உனக்கென்ன..நீ கண்ணை மூடிக்கொண்டு அப்பிடியே இரு..."அவளது முணுமுணுப்புப் புரியாமல் கச்சான் கோதுகளை உடைக்க மாட்டாமல் ஆச்சியின் முகத்தை ஆவலோடு நோக்கினான் அவன்.
     "ஓம்...ஓம்...நான் இருக்கிறன் பிள்ளைக்கு..." சடுதியாக வந்த உணர்வெழுச்சியினால்  மளமளவென்று கச்சான்களை உடைத்து,பருப்புகளால் அவன் உள்ளங்கையை நிறைக்கத் தொடங்கினாள் லச்சுமி ஆச்சி.
                                        *              *                *                 *
                                                                                                            -கலைமுகம் 53 ஆவது இதழ்,ஏப்ரல் - ஜூன் 2012

2 comments:

  1. கோயில் திருவிழா, விழா முடிந்தபின்
    வெறிச்சிருக்கும் கோயில்...... நுணுக்கமான அவதானிப்பும், அருமையான சித்தரிப்பும்..
    இறுதி பகுதி மனதை உலுக்குகிறது.

    ReplyDelete
  2. வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி Dr.

    ReplyDelete