Wednesday, February 15, 2012

காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்


அன்பான உங்களுக்கு
         இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப் பூட்டி ஒழித்து வைத்து தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில் கொட்டிவிடுகின்றேன் எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே….. உங்கள் முகவரி குறிக்கப்படாமையால் பல பேரின் பார்வையில் சிக்கி இந்தக் கடிதம் படாத பாடுபடப் போகிறதெனத் தெரிந்தும்கூட…
            எப்படியிருக்கின்றீர்கள்….? உங்கள் நலன் அறியாமல் தவித்து தினந்தினமாய் விடிகாலையில் உங்கள் பெயர் உச்சரித்துக் கொண்டெழுந்து உங்களுக்கான வேண்டுதலோடு… இன்றாவது இன்றாவது என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்குதலாய்… ஒவ்வொரு நாளும் என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது  . இந்தக் கனத்த நாள்களின் தேய்விற்காய் என்னையே தேய்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதையாவது உங்களால் உணரமுடிகிறதா…..?
        எத்தனை வருஷங்கள்? வருஷங்கள் யுகங்களாய் மாறி வதைத்துக் கொண்டிருக்கின்றன. என்னைப் பிரிந்து ஒரு நிமிஷமென்றாலும் உங்களால் நிம்மதியாயிருக்க முடியாதே. இப்போது இந்த நீண்ட நிம்மதியற்ற வருஷங்களுக்கிடையே நீங்கள் எப்படி நெருக்குண்டீர்கள்….? உங்கள் நினைவாய் நீங்கள் எனக்கு விட்டுப்போன எங்கள் செல்வ மகள் தேன்கவி வளர்ந்து கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் சிந்தனைக் கோடுகள். அமைதியானவள் அவள். இரு மனங் கலந்த எங்களின் அந்த உச்சப் பொழுதிற்கு ஒரேயொரு சாட்சியாய் அந்த இனிய கணங்களைத் திரும்பத் திரும்ப நினைவுக்கு அழைப்பவளாய்… அவளுடைய முகம் உங்களுடையதாகவே தெளிந்து கொண்டு போகிறது. அவள் அம்மாவின் கூட்டிற்குள் பத்திரமாய் வளர்கின்ற கிளிக்குஞ்சு. இடையிடையே அப்பாவைத் தேடுகிறாள். என்ன  சொல்ல…? எதையுமே சொல்லித் தரவில்லையே நீங்கள்…?
        இப்போது அவள் பாடசாலைக்குப் போகத் தொடங்கியிருக்கிறாள். இவள் எழுத்து எதிர்காலத்தில் உங்களுடையதைப் போலவே வரக்கூடும். சிறிது சிறிதான மெல்லிய எழுத்துக்கள். அந்தச் சிறிய எழுத்துக்களில் உங்கள் முகம்தான்  தெரிகிறது. அந்த எழுத்துக்களைப் பார்த்தவுடன் என்னால் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முடிந்ததில்லை. கண்கள் முட்டி விடுகிறது. அவள் என்னைக் கேள்விக்குறியாய்ப் பார்க்கிறாள். என்ன செய்வது நான்….? நீங்களே சொல்லுங்கள்.
        போன மாதத்தில் உங்கள் பிறந்த நாள். மறந்து போய் விட்டீர்களா…? முன்பு நான் ஞாபகப்படுத்தாவிட்டால் உங்களுக்கு அதுகூட ஞாபகம் வராதே. விடியற்காலை அழுது விட்டேன். அழக் கூடாதில்லையா? நீங்கள் இந்த மண்ணில் வந்த தினத்திற்கு. கோவிலில் உங்கள் பேருக்கு அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பியபோது ‘திடும்’ மென்றது. சுற்றுப் பிரகாரம் நோக்கி உங்களைப் போலவே. யார் அது….? பட்டென்று நெஞ்சு அடித்துக்கொண்டது. வந்து விட்டீர்களா…? கடைசியில் இந்த அபலையின் தவத்துக்கு இறைவன் இரங்கி வரங் கொடுத்துவிட்டானா….? பக்கத்தில் தேன்கவி மிரண்டபடி நிற்க நான் சுற்றுப் பிரகாரம் பக்கம் ஓட்டமாய் நடந்தேன்.  அந்த ஆள் எனது அரவங் கேட்டுத் திரும்பிப் பார்க்க…. சை… எல்லாம் வெறுத்துப் போயிற்று. அது யாரோ….? என் கால்கள் அசையாமல் நின்று போயின. பக்கத்தில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் பார்வை என் மேற் படிய அப்படியே ஒரு புள்ளியாய் கூனிக்குறுகிப் போய் விட்டேன். உலகம் கெட்டுப்போய் விட்டது மாதிரியான பார்வைகளையும் பெருமூச்சுகளையும் அவர்கள் பரிமாறிக் கொண்டார்கள். நான் என்ன செய்வது…..? நான் என்ன செய்வது….? நான் இப்படியானதற்கு நீங்கள்தானே காரணம்…? என்னை  இப்படிப் பைத்தியம் ஆக்கிவிட்டு நீங்கள் எங்கே மறைந்து  கொண்டீர்கள்?
        தேன்கவி கெட்டித்தனமாய்த்தான் வளர்கிறாள். அவளைக் கெட்டித்தனமாய் ஆளாக்கி எப்போதாவது நீங்கள் வருகிறபோது உங்களைப் பெருமைப்பட வைக்க வேண்டுமென்பதே இப்போதுள்ள ஒரே ஆசை. அவள் யாருடனும் பேசுவது குறைவு. துடுக்குத்தனம் இல்லாத சொல் கேட்கிற பிள்ளை. அவள் அப்படித்தான் இருப்பாள். எங்களது மௌனமான அமைதியின் நிர்ச்சலனத்தின் ஒன்றிணைவில் கருக்கொண்டவளால் வேறெப்படி இருக்க முடியும்? பக்கத்து வீட்டு ஆச்சி அடிக்கடி சொல்கிறா.
        “பிள்ளையைக் கொண்டே டாக்குத்தரிட்டைக் காட்டு. மூளைலை அடிச்ச மாதிரி ஏன் ஒருதரோடையும் கதைக்கிறாளில்லை” என்று. எங்கள் தேன்கவி புத்திசாலி. ஆச்சி துருவித் துருவிக் கேட்கின்ற வீட்டு விஷயங்களுக்கு அவள் பதில் சொல்வதில்லை. ஆச்சிக்கு அக்கம் பக்கத்தில் போகிறவர் வருகிறவர் பற்றிய விஷயங்கள் முழுவதாய்த் தெரிவதில் ஒரு சந்தோஷம். அப்படித் தெரிந்து கொள்ள முடியவில்லையென்கிற ஆத்திரத்தோடு சேர்ந்து அந்த வீட்டுக் ‘குட்டி’ பண்ணுகிற அதிகாரமும் ஆர்பாட்டமும் இல்லாமல் இங்கே தேன்கவி அமைதியாய் வளர்கிறாள் என்பது தந்த எரிச்சலும் ஆச்சியை அப்படிப் பேச வைத்திருப்பாய் அம்மா சொன்னாள். தேன்கவியை இப்போது அங்கே விடுவதில்லை. அவளுக்கு வீட்டுக்கு வந்து தன்பாட்டில் ஏதாவது செய்து கொண்டிருக்கப் பிடிக்கும் உங்களைப் போல…
        வருகிற கிழமை அப்பாவின் திவசம் வருகிறது. ஓ…. உங்களுக்கு அப்பா போனது தெரியாது என்ன…? நீங்கள் போன பிறகு இரண்டு வருஷத்திற்கு அப்பா உயிரோடிருந்தார். அதற்கு பிறகு  ‘டயபிட்டீஸ்’ கூடி அப்பாவுக்கு ஒரு காலை எடுக்கவேண்டி வந்தது. அதன் பின்தான் வீட்டுக்குப் பாரம், பாரம் என அப்பா நொந்து சொல்லிக்கொண்டிருந்தார்.வாழ்தலினாலான விருப்பம் அற்றுப்போனமாதிரி...பிறகு அப்பா கனகாலம் வாழவில்லை. நீங்களே சொல்லுங்கள். அப்பாவுக்கு ஏன் அப்படிப் போயிற்று புத்தி. இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாய்ப் பகிர்ந்து கொள்வோம் என்றுதானே மண வாழ்கையில் இணைந்து கொள்கிறோம். நீங்களே முன்பு சொல்லவில்லையா? இன்பம் பகிர்ந்து கொள்வதால் இரட்டிப்பாகிறதென்றும் துன்பம் பகிர்ந்து கொள்வதால் பாதியாகிறதென்றும்.
        அப்பா ஏன் அவசரப்பட்டார்…? தனது துன்பத்தைப் பாதியாக்க அம்மா இருக்கிறா என்பதை ஏன் மறந்தார்… அலரி விதை அரைத்துக் குடிக்கையில் கடைசி நிமிடத்திலாவது அம்மாவின் நினைப்பு அப்பாவை வருத்தியிருக்காதா…? இப்போதும் அம்மா படுகிற துயரத்தைக் குறைக்க யார் வர முடியும்? அம்மாவுக்கு இப்போது தேன்கவியும் நானும்தான் உலகம். என்னை இந்த  உலகத்தின் முன் விட்டுவிட்டுப் போக அம்மாவுக்கு பயமாயிருக்கிறது. அதற்காக இறந்து போன அப்பாவின் நினைவுகளையும் விட்டுவிட முடியவில்லை. இரண்டுக்குமிடையே அம்மா படுகிற துன்பம்…. என்னுடையதை விடக் கொடுமையானது. வீடு வரவரத் துயர்க்களமாகிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு இரவும் வேதனையும் கண்ணீரும் உங்களுக்கான காத்திருத்தல்களுமெனக் கழியும். சில நாட்களில் நிலவு உதித்து மறையும் வரைக்கும் விழித்துமிருக்கிறேன். கண்கள் எரிந்து எரிந்து தலையணை ஈரமாகி… தேன்கவி பார்த்துவிடக் கூடாதெனக் கண்ணீரை மறைத்து… பாவம் அவள் சிலவேளை நான் அழுவதனைக் கண்டு திருதிருவென விழித்தபடி “அம்மா” என விம்முவாள். அதனால் அவளறிய அழவும் முடிந்ததில்லை. உறக்கம் ஒரு மாதிரி சமரசம் செய்து கொண்ட பிற்பாடு கனவுகள் வரும். சிலவேளைகளில் அருகே வந்து ஊமைப் பாஷையில் கண்களால்…. கைகளால்….சைகை செய்து ஏதாவது சொல்லுவீர்கள். முக்கியமாய் அழவேண்டாம் எனச் சொல்வதாய் இருக்கும். இல்லாவிட்டால் தேன் கவியைச் சுட்டிக்காட்டி அவளை வளர்த்தெடுத்தல் பற்றியோ அவளது துணையுடன் வாழ்தல் பற்றியோ நினைவூட்டுதலாயிருக்கும். அப்போதெல்லாம் உங்கள் குரல் கேட்பதில்லை. ஆனால் நீங்கள் சொல்வது இதுதான் எனப் புரிந்த மாதிரியிருக்கும்.
ஆனால் உங்கள் குரலைக் கேட்க வேண்டுமெனும் ஆசை மனதின் அடியிலிருக்கும். கனவில் இதற்கு மேலும் ஆசைப்படக்கூடாதா….? அந்தக் கணங்களில் எத்தனை எதிர் பார்ப்போடு உங்களைப் பார்ப்பேன். கண்களில் உயிரைத் தேக்கி வைத்து கொஞ்சமேனும் கொஞ்சமேனும் உங்கள் குரலை இரகசியமாக்கியாவது… காதிற்குக் கிட்டே நெருங்கி வந்தாவது ஏதாவது சொல்லமாட்டீர்களாவென… உங்கள் கரங்கள் கிட்டே… கிட்டே… நெருங்கி வந்து இத்தனை காலப்பிரிவு வெப்பத்தைப் பொசுக்கிக் குளிர்மதியாய் ஒத்தடம் தராதாவென… இன்னும்…இன்னும்… கனவிலாவது கனவிலாவது… உங்களோடு உயிர் ஒன்றிக் கலந்து ஒன்றாகிவிட வேண்டுமென…. எல்லாத் துன்பமும் மறந்து உங்கள் மார்புக்குள் குறுகிச் சுருண்டு படுத்துவிட வேண்டுமென… எல்லா ஆசைகளும் வெடித்துச் சிதற நீங்கள் மறைந்து விடுவீர்கள். இங்கே கண்ணீர் தலையணையை ஈரமாக்கிக் கொண்டிருக்கும்.
வேட்கமின்றி இப்படியெல்லாம் எழுதிக் கொட்டுகிறாள் என நினைக்கிறீர்களா..? நான் என்ன செய்ய…? உங்களிடமின்றி வேறு யாரிடம் என் வேதனையைக் கொட்டியழ….? வரவரப் பைத்தியக்காரி ஆகிக் கொண்டு போகிறேன் என்பது மட்டும் தெரிகிறது.
கனவுகள் வேறு மாதிரியும் வருகின்றன. என்னை முறித்துப் போடும் கணங்கள் அவை. நீங்கள் மட்டும் தனியே வலிய ஆயுதங்களின் மத்தியில் வழி நடத்தப்படுகின்றீர்கள். சித்திரவதைகளுக்கிடையில் என்பேர் சொல்லிக் கத்துகின்றீர்கள். டாங்கிகளுக்கிடையே மோதுண்டு… வேண்டாம்….. இனி என்னால் எதையுமே எழுத முடியாது. இவற்றுள் எந்தக் கணம் என்னை உருட்டித் தள்ளுமோ…? அந்தத் தருணங்களில் நான் எங்கு நிற்பேனா….? உங்கள்  வலிகளுக்கு ஒத்தடந் தரக்கூடத் தொண்டையிலிருந்து சப்தம் கூட வரமுடியாத மாதிரி… ஆனால் இந்தக் கண்கள் மட்டும் என்ன பாவம் செய்தன…? தீராத் துன்பத்தில் உழலும் உங்களைத் தொடர்ந்து தொடர்ந்து…..
இந்தக் கனவுகளின் முடிவில் மூர்ச்சையுற்று விடுகிறேன். உங்களுக்கு என்ன நடந்தது? எங்கே கொண்டு செல்லப்பட்டீர்கள் என்பதை அறிகிற வரையிலாவது நினைவோடிருந்திருக்கலாம். பலவீனமான மனது சிறிது துன்பம்கூடச் சதிக்க மாட்டாமல் மயக்கம் போட்டு விடுகிறது. மயக்கம் போட்ட பிறகு அச்சத்தில் தூக்கம் விலகி விடுகிறது. கொட்டக் கொட்ட விழித்தபடி தேன் கவியை நெஞ்சோடிறுக்கி அணைத்தபடி….விடிய விடிய நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு…. இரவுதான் நகர்வதேயில்லை இப்போது.
 இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை. உங்கள் உடுப்புக்களை மடித்து அடுக்கிவைத்துக் கொண்டிருந்தேன். முதல் நாள் இரவு அலுமாரிக்குள் ஏதோ கடமுடா சத்தம் கேட்டதால் தான் எல்லாம் எடுத்து அடுக்க வேண்டிவந்தது. அலுமாரியைத் திறந்தபோது எனக்கு “திகீர்” என்றது. அதற்குள்ளிருந்து குண்டு எலியொன்று பாய்ந்தோடிப் போயிற்று. அலுமாரியின் பின்புறம் ஒரு சின்ன வட்டத்துளை. எனக்கென்றால் ஏக்கம். எல்லாம் போயிற்றோ… போயிற்றோவென்று. ஒன்றொன்றாய் எடுத்து மடித்து வைக்கையில் அப்பாடா என்றிருந்தது. இந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்கவில்லை. அடியிலிருந்த உங்களது கல்யாணப்பட்டு வேட்டியின் விளிம்போரம் நீளவாக்கில் எலி தின்றுவிட்டது. அந்த எலியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. கையில் அகப்பட்டதை எடுத்து எறிவதற்குள் எலி கீச்சுக் கீச்சென்று கத்தியபடி மறைந்துவிட்டது.
“உன்ரை கலியாணச் சீலையளைப் பார் பிள்ளை அரிச்சுக் கொட்டிப் போட்டுதோவெண்டு…”
அம்மா சொல்ல எனக்கு ஆத்திரமும் அழுகையுமாய் வந்தது. உங்களுடைய போயிற்று இனி எனக்கெதற்குச் சேலையும் அணிகலனும்…? அம்மாவைக் கோபித்து என்ன பலன் என்னுடைய விதிக்கு? நான் பேசாமலிருக்க அம்மா சேலையை எடுத்துத் தட்டினா. சேலை அப்படியே கசங்கிப் போயிருந்தது. நான் உங்கள் வேட்டியை மடியில் போட்டபடி அப்படியே விக்கி விக்கி அழுதபடியிருந்தேன். அம்மா வேட்டியைப்  பிரித்துப் பார்த்தா. நான் பிடித்து இழுத்தேன். கொடுக்கவில்லை. அம்மா பேசினா. “தந்தாத்தானை பிள்ளை சரிப்படுத்தலாம்…” நான் அழுதபடியே கைப்பிடியே நழுவ விட்டேன். அம்மா விளிம்போரம் மெல்ல மடித்து அரித்தது தெரியாமல் தைத்துத் தந்தா. அதற்குப் பிறகுதான் போனமூச்சு திரும்பி வந்தது. இப்போது அதைப் பத்திரமாய் மடித்து வைத்திருக்கிறேன்.
எலி வருகிறாவென தினசரி கண்காணிப்பதே இப்போது ஒரு வேலையாகி விட்டது. அதற்குப்பிறகுதான் அம்மா பூனைக்குட்டி வாங்கி வந்தா. தேன்கவிக்கு இப்போது பொழுது முழுக்க பூனைக்குட்டியோடுதான்.பந்து உருட்டி விளையாடுகிறாள். எப்படியோ அவளும் கஷ்டம் தெரியாமல் வளரவேண்டும்.
இன்னொரு விஷயம். தங்கம் அக்காவின் புருஷன் ராமமூர்த்தி தேவையில்லாமல் எங்கள் வீட்டுப்பக்கம் வருகிற மாதிரி கிடக்கிறது. அதுவும் அப்பா போன பிறகு கூட. சின்னச் சின்ன உதவி செய்து தருவது மாதிரி வருவதும் என்னை ஒரு மாதிரிப் பரிதாபமாய்ப் பார்ப்பதும் எனக்குப் பிடிக்கவேயில்லை. அண்ணா சரியாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? அண்ணா அண்ணிக்குப் பின்னால் தான் எப்போதும். எங்கள் பொறுப்பை எடுத்தால் பிறகு கஷ்டம் என்று அண்ணி ஏற்கனவே சொல்லி வைத்து விட்டா போல… அண்ணாவும் ஒரு விதத்தில் பாவம்தான். எங்களுக்கு உதவ முடியவில்லை என்ற வருத்தமும் அண்ணியின் பேச்சை மீறினால் வீட்டில் ஏற்படக்கூடிய குழப்பமும் அமைதியின்மையும் என…. இரண்டுக்குமிடையே நசிபட்டுத் துரும்பாகிவிட்டார் அண்ணா. ராமமூர்த்தியை பற்றி ஏதாவது சாடைமாடையாய் அண்ணா விடம் சொல்ல வெளிக்கிட்டால் கூட அண்ணி முகம் சுழிப்பா.
“உங்கட தங்கச்சிக்கு எல்லோரும் தன்னைத்தான் பாத்து வழியுறதா ஒரு நினைப்பு…”
இப்படி வெளிப்படையாகவே பேசக்கூடிய அண்ணியை வைத்துக் கொண்டு அண்ணாதான் என்ன செய்ய முடியும்? ராமமூர்த்தியை ஒரேயடியாய் முறிக்கவும் பயமாக்கிடக்கிறது. அவனை வீட்டுக்கு வரவிடுவதும் பிடிக்கவில்லை. என்னதான் செய்வது… நீங்களாவது சீக்கிரம் வந்து விடுங்களேன்.
வீட்டில்தான் இப்படியென்றால் அலுவலக நிலைமை இன்னும் மோசம். தவனீதனைத் தெரியும்தானே உங்களுக்கு. எங்கள் கல்யாணத்தில் கூட ஓடியாடி உதவி செய்தவன். அவன் என்னமாதிரி என்னோடுபழகிக்கொண்டிருந்தான்.இப்போது அவன் என்னோடு பேசுவது கூடஇல்லை. நீங்கள்காணாமல் போன பிறகு கூடுதல் அக்கறை காட்டியவனும் அவன்தான். கொஞ்ச நாட்களுக்குள் எதுவும் வித்தியாசமாய்த் தெரியவில்லை. அல்லது வித்தியாசமாய்த்தெரியவில்லையோ உங்களைப்பற்றிய கவலை அதைக் கவனிக்க வைக்கவில்லையோ தெரியவில்லை. ஒரு நாள் சாடையாய் உமா என்னிடம் கேட்டாள்“தவனீதனிடம் உனக்கென்ன அப்படி அக்கறை” என்று நான் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தேன். அவள் என்னை நேராகப் பார்க்கவில்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டு அலுவலகத்தில் தாறுமாறாய்க் கதைஉலவுவதாய்ச் சொன்னாள். உமாவுக்கு என் நலனில் அக்கறை உண்டு. அவள் சொல்லுவதையும் நம்பாமலிருக்க முடியவில்லை. அதற்குப் பிறகு என்னால் அவனோடு கொஞ்ச நேரம் கூடத் பேச முடியவில்லை. ஏதாவது அவன் பேச வருகிற போது கூடத் தவிர்த்து விடுவேன். அதன்பிறகு அவனுக்கு என்மேல் சரியான கோபம். திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.
“நாக்கு நரம்பில்லாத ஆரும் ஏதும் சொன்னா அதெல்லாம் உண்மையாப் போமோ…?”
என்பது மாதிரியான தொனியில் எப்போதாவது நான் நிற்கின்ற வேளைகளில் சொற்களை வீசுவான். எனக்குத்தான் இந்தக் குத்தல் மொழிகள் என்பது புரியாமல் இல்லை. இருந்தாலும் வம்புப் பேச்சுக்களைத் தாங்குகிற மனோதிடம் என்னிடம் இல்லாமற் போயிற்றே. நீங்கள் இல்லாமற் போனபிறகு யாரிடமும் பழகும் தைரியமும் இல்லை. என்ன செய்வது…? அவப்பெயர்களைத் தவிர்ப்பதற்காக ஒரு நல்ல நட்பை முறித்துக் கொண்டுவிட்டேன். வேறு என்னதான் செய்வது…? நீங்கள் இருக்கும் போதானால் எதனையும் தாங்கியிருப்பேன். இனிமேல் எதையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஏற்கனவே படுகிற துன்பம் போதும். இது வேறு என் துன்பத்தைப் பெருக்க வேண்டாம்.
எத்தனை…. எத்தனை வருஷக் கதை…? இன்னும் இன்னும் எத்தனையென்று எழுதுவது? நினைத்தால் உங்களோடு பேசுவது போல் எழுதிக் கொண்டே போகலாம் போல் படுகிறது. ஆனால் உங்கள் முகவரி தெரியாமல் இதை நான் எங்கே என்று அனுப்புவது…? எப்படியாவது எந்தவழியிலாவது இது                   உங்களிடம் வந்து சேரும் என்ற நம்பிக்கையே என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கிறது.
வேறென்ன…? உங்கள் முகவரி எனக்குத் தெரியாமல் போயினும் எனது முகவரி நீங்கள் அறிந்துதானே… ஒரே ஒரு முறையாவது எனது துன்பங்களை அறிந்த பிறகாவது… மனதுக்கு ஆறுதலாய் பதில் போடமாட்டீர்களா…? நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் என்றாவது….
                                                                                                                                இப்படிக்கு
                                                                                                           என்றும் உங்களவள். 
                                                                 
                                                                                                                ஞானம் ஆடி : 2003

5 comments:

 1. மிக உருக்கமான கடிதம். இதற்கு சிறுகதை முத்திரையா?

  ReplyDelete
 2. கதைகளுக்குள் கடிதங்கள் சாத்தியமாவது போல்
  கடிதங்களுக்குள்ளும் கதைகள் இருப்பது இயல்பே!
  தங்கள் விமர்சனத்துக்கு நன்றி.

  ReplyDelete
 3. கண்ணீர் தரும் கடிதம்

  ReplyDelete
 4. மனசை நெகிழவைக்கும் பதிவு தாட்சாயினி. 4 வருடங்களுக்கு முன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கவிதையாக எழுதி இருந்தேன்.http://www.thirupoems.blogspot.com/2012/02/blog-post_9288.html

  ReplyDelete
 5. நன்றி திருக்குமரன்.

  ReplyDelete