இருட்டு வார்த்திருந்த
வெளியெங்கும்
மின்மினிகள்
தம் வெளிச்சப்பொட்டைத்
தேடியலைகின்றன…
மின்மினிகளின்
இரசாயனங்கள்
இதுவரை
கடந்த வெளிகளில்
கழன்று ஒழுகி
முடிவுற்றுப்போயின…
இனி
வாழ்வதற்கு
இல்லை ஆதாரம்
அவற்றிடம்…
ஏதோ ஒரு
கறுப்புயிராய்
அதுவும்
பறந்துகொண்டிருக்கிறது…
அதன் நிறமும்
இன்னதென்று
கண்டுபிடிக்கமுடியவில்லை
இந்த இருட்டில்…
ஓளி ஒழுகும் இரவுகளில்
இனி நிலவிடம்தான்
கடன் வாங்க வேண்டும்
வழியின் தடம் அறிய…
கரிய பூதங்கள்
நிறைந்திருக்கும் இரவில்
ஒரு சின்னத்துளி
மின்மினிக்கேன்
இரக்கமில்லாமல் போயிற்று
கடவுளிடம்…
நான் நீ அவன்
வாழலாமென்றால்
அதற்கு மட்டும்
எதற்காக இந்த
உரிமைப்பறிப்பு…?
இருட்டு வார்த்த
வெளியெங்கும்
தம் வெளிச்சப்பொட்டைத்
தேடியலைகின்றன மின்மினிகள்!
-தாட்சாயணி
No comments:
Post a Comment